ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு

பதிப்பாசிரியர்: த. கைலாசபிள்ளை

சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர் அவர்கள் சிவபதமெய்திய பின்னர், அவர் எழுதிய நூல்களையும், கண்டன பிரசுரங்களையும் மற்றும் பிறவற்றையும் தொகுத்து அவரது மருகனார் த. கைலாசபிள்ளை அவர்கள் இரண்டு பாகங்களாக வெளியிட்ட நூலே ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு.

இந்நூலில் ஆறுமுகநாவல் செய்த

 1. தோத்திரங்கள்
 2. கிறீஸ்தவ பாதிரிமார் நற்கொடை எனும் பத்திரிகையில் “கந்தசாமி கோயிற்றிருவிழா” என்கின்ற பெயரில் கந்தசுவாமி மெய்க்கடவுளல்ல என்று எழுதிய கட்டுரைக்கு மறுப்பாய் எழுதிய “சுப்பிரபோதம்”
 3. இலங்கைநேசன் வெளிவந்த செய்தி தொடர்பாய் அதன் பத்திராதிபருக்கு எழுதிய “சைவ விரோதம்”
 4. திருகோணமலை தம்பையாபிள்ளை அவர்கள் எழுதிப் பதிப்பித்த குமரநாயகரலங்கார நூல் தொடர்பாய் கேள்வியெழுப்பி எழுதிய “குமரநாயகரலங்காரம்”
 5. தமிழ்கற்றுக்கொள்ளுவது தொடர்பாக எழுதிய “தமிழ்ப்புலமை”
 6. யாழ்ப்பாணத்துச் சைவ சமய நிலையினை சொல்லியும், திருக்கேதீஸ்வர ஆலயம் அழிவடைந்து கிடக்கிறது, அதனை மீளக்கட்டுவதற்கு உபகரியுங்கள் என விளம்பியும் எழுதப்பட்ட “யாழ்ப்பாணச் சமயநிலை”
 7. ஒரு சைவசமயிக்குரிய முக்கிய இலக்கணங்களை சொல்லி எழுதப்பட்ட “சைவசமயி”
 8. செய்யக்கூடாதவைகள் எவை என்று சொல்லி எழுதிய “அநாசாரம்”
 9. திருக்கோயிலிலும் திருவீதியிலும் செய்யத்தகாத குற்றங்கள்
 10. சைவசமயம் என்றால் என்னவென விளக்கி “சைவசமயம்”
 11. இராமலிங்கப்பிள்ளை அவர்களை கண்டித்து எழுதிய “போலியருட்பாமறுப்பு”
 12. நரசிங்கபுரி வீராசாமி முதலியார் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு எதிராய் வெளியிட்ட பிரசுரத்தினைக் கண்டித்து எழுதிய “நல்லறிவுச் சுடர் கொளுத்தல்”
 13. இலங்கைநேசன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு பதிலாய் எழுதிய “கரையார் வழக்கு”
 14. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திற்கு வெளியே சூத்திரர் பொங்கிப்படைப்பது தகாது என்று இலங்கைநேசனில் வந்ததோர் ஆக்கத்திற்கு பதிலாய் எழுதப்பட்ட “ஓர் வினாவிற்கு விடை”
 15. காசிவாசி செந்திநாதையர் அவர்களை வாதத்துக்கிழுத்த கோப்பாய் மாணக்கனை நோக்கி எழுதிய “இழிமொழித் திமிரதீபிகைச் சண்டமாருதம்”
 16. வண்ணார்பண்ணை கதிரேசன் கோயில் தொடர்பாய் நாட்டுக்கோட்டைச் செட்டிமாருக்கு எழுதிய “வண்ணார்பண்ணை கதிரேசன் கோயில்”
 17. யாழ்ப்பாணத்தாரை விழித்து, துவனந்துரைக்கு எதிராய் எழுதப்பட்ட “சமயம்! சமயம்!!”
 18. யாழ்ப்பாணத்தாரை விழித்து, துவனந்துரைக்கு எதிராய் எழுதப்பட்ட “இது நல்ல சமயம்”
 19. உதயதாரகை பத்திரிகை உண்மையை விளம்பாது, துவனந்துரைக்கு சார்பாய் எழுதுவதை கண்டித்து எழுதிய “வெகுசனத் துரோகம்”
 20. கோப்பாய் சாபாபதிப்பிள்ளை மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் செய்த பிரசங்கத்திலிருந் பிழைகளை சுட்டிக்காட்டி ஆலயத்தின் குருக்களில் ஒருவரான க. சபாபதிக்குருக்களால் எழுதப்பட்டு நாவலர் அவர்களால் திருத்தம் செய்யப்பட்ட “அகோரசிவாசாரிய பத்ததி தூஷண கண்டனம்”
 21. கோப்பாய் சாபாபதிப்பிள்ளை மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் செய்த பிரசங்கத்திலிருந் பிழைகளை சுட்டிக்காட்டி ஆலயத்தின் குருக்களில் ஒருவரான க. சபாபதிக்குருக்களால் எழுதப்பட்டு நாவலர் அவர்களால் திருத்தம் செய்யப்பட்ட”சபாபதிக்குருக்கள் வினா”
 22. கோயிலில் செய்யத்தகுந்தவை செய்யத்தகாதவை சொல்லி எழுதப்பட்ட “கைவிளக்கு”
 23. நல்லூர்க்கந்தசுவாமி ஆலய நடைமுறைகள் சிலவற்றை வினாவி எழுதப்பட்ட “நல்லூர்க் கந்தசுவாமிகோயில்”
 24. மித்தியாவாத நிரசனம்

ஆகியன தொகுக்கப்பெற்றுள்ளன. இதுதவிரவும் ஆறுமுகநாவலரின் தமையனாரும் கதிரை யாத்திரை விளக்கத்திலுள்ள பல கீர்த்தனங்கள் செய்தவருமாகிய பராமானந்தப்புலவர் செய்த நல்லைநகர்க்கந்தரகவலும் இந்நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

1921ம் வருடம் இந்நூல் வெளியிடப்பட்டபோது அவற்றில் இருக்கின்ற கண்டனங்கள் நூல் பதிப்பிக்கப்பட்டிருந்த காலத்திருந்தோரால் விளங்கிக் கொள்ளப்பட முடியாதிருக்கும் எனக்கருதிய கைலாசபிள்ளை அவர்கள் பின்வருமாறு தனது முன்னுரையில் சொல்லியிருக்கின்றார்கள்.

இக்கண்டனங்களால் கண்டிக்கப்பட்டவர் சிலர் இப்போதும் உயிரோடு இருக்கலாம்; சிலருக்கு பந்துக்களிருக்கலாம். இவர்களுக்கு இந்நூல் ஒரு வெறுப்பைத்தரும். அவர்கள் அப்போது செய்தவைகளையும் எழுதியவைகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். பார்த்தால், இவர்களுக்கு ஒருபோதும் வெறுப்பு உண்டாகாது. துவைனந்துரைக்கு விரோதமாக எழுதப்பட்ட விடயங்களுக்கு 1877ம் வருடம் பேதிநோயும் பஞ்சமும் உண்டானபோது, நோயுற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர் கீழுத்தியோகத்தர் சிலர் அத்துரை பிரியப்பட்டுக்கொள்ளுவாரென நினைந்து செய்த கொடுமைகளும் துவைனந்துரை அவைகளைக் கவனியாமல் விட்டமையுமே காரணமாகும். அந்தக் காலத்தில் கொழும்பில் நடந்த Examiner என்னும் பத்திரிகையையும் இங்குள்ள கத்தோலிக்கப் பாதுகாவலன் என்னும் பத்திரிகையையும் பார்ப்பவர்களுக்கு நாவலரவர்கள் எழுதியவைகள் பெருங் கண்டனமாகத் தோன்றா. அந்தக் காலமிருந்தபடிக்கு இந்தக் கண்டனங்கள் வேண்டியவையே.