நாலுமந்திரி கும்மி

ஆசிரியர்: சின்னத்தம்பிப் புலவர்
பதிப்பாசிரியர்: சண்டிலிப்பாய் வேலுப்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1934

யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவரவர்கள், மரியாதை இராமன் கதைகள், தெனாலி இராமன் கதைகள்போன்று பிரபலம் பெற்றிருந்த வாய்வழிக் கதைகளில் ஒன்றான நாலுமந்திரிக் கதைகளை சந்தவோசையுடைய கும்மிப்பாக்களாலே செய்த நூலே நாலுமந்திரி கும்மி எனும் இந்நூலாம்.

பூரணமாய்நின்ற பரம்பொருளைப்போற்றி
 புகழ்மிகுந்த சரவணர்தாள்போற்றி வாழ்த்தி
நாரணன் சேரிலக்குமியாள் பாதம்போற்றி
 நான்முகனோடு ருத்திரனாரடியை வாழ்த்தி
ஆரணஞ்சேர்சரஸ்வதியாள் பாதம்போற்றி
 அன்புடன்நாலுமந்திரி கும்மிபாடக்
காரணஞ்சேர்சிவபெருமா னளித்தவெங்கள்
 கணபதியி னிருசரணங்காப்புத்தானே.

என்ற விருத்தத்தாலமைந்த காப்புடன் ஆரம்பிக்கும் இக்கும்மி மதுராபுரி என்னும் ஊரில் வாழ்ந்திருந்த போதவாதித்தன், போதவிபூஷணன், போதவியாகர்ணன் மற்றும் போதசந்தன் என்கின்ற சகோதரர்கள், தென்மதுராபுரியை அரசுபுரிந்த அழகேசன் என்னும் அரசனிடம் மந்திரிகளான கதையை கூறிநிற்கும். மந்திரிகள் அரசனுக்கு கூறிய கதைகளையும், மன்னன் மந்திரிகளுக்கு கூறிய கதைகளையும் கும்மிப்பாடல்கள் கூறிநிற்கும்.

இதனைச் செய்தவர் சின்னத்தம்பிப்புலவர் என்பதனையும் நூலின் ஆரம்பத்தில் அமைந்திருக்கும்

தேசம்புகழலே யோதிவைத்தார்குரு
தேவதைபாற் கடலாடிவர
வாசம்புகழ் சின்னத்தம்பி தமிழுக்கு
வாக்கருள்வாய் பரமேஸ்வரியே.

எனும் பாடலாலும், நூலினிறுதியில் காணப்படும்

சுந்தரிகாளியும் ராஜனுமந்திரியுஞ்
சொல்லிய முவருந்தாம் வாழி
செந்தமிழ் தந்திடுஞ் சின்னத்தம்பி ஐயன்
செப்புங்கும்மி நாளும் வாழியவே.

கற்றவர்வாழி கலைவாழிகவி
பாடும் புலவருந்தாம் வாழி
நற்றவர்வாழி நல்லூர்வாழி
சின்னத்தம்பி நாவலன்வாழியவே.

எனும் பாடல்களாலும் அறியலாம். இக்கும்மி விருத்தம் உள்ளடங்கலாய் 244 பாடல்களை கொண்டுள்ளது. இந்நூலை சண்டிலிப்பாய் வேலுப்பிள்ளை அவர்கள் 1934ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

தமிழ்வளர்க்கும் தஞ்சை சர்ஸ்வதி மகால் நூலகமும் 2004ம் வருடம் அவர்களிடமிருந்தவொரு ஏட்டுச்சுவடியினின்றும் எடுத்து கதைச்சுருக்கத்தோடு பதிப்பித்திருந்தார்கள். அப்பதிப்பில் விருத்தத்தால் அமைந்த காப்பு காணப்படாதிருப்பதோடு பல கும்மிப்படால்கள் மாறுபாடடைந்து காணப்படுகின்றன. நூலின் இறுதியில் பல பாடல்கள் இல்லாமலும் போயிருக்கின்றன. ஆதலினால் நாலுமந்திரிக் கும்மியை படிப்போர் வேலுப்பிள்ளை அவர்களின் பதிப்பினை நாடுவதே நலம்.