நல்லை வெண்பா

ஆசிரியர்: சேனாதிராச முதலியார்
பதிப்பாசிரியர்: அம்பலவாண பண்டிதர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1878

யாழப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார், ஈழத்திலே மிகப் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியத் தலங்களில் ஒன்றான நல்லூரிலே எழுந்தருளி இருக்கும் முருகக்கடவுள் மீது வெண்பா யாப்பினாலே இயற்றிய பிரபந்தங்களில் ஒன்று நல்லை வெண்பா எனும் நூல்.

காப்பும் கடையும் உட்பட நுற்றிரண்டு செய்யுள்களால் ஆனது இப்பிரபந்தம். சேனாதிராய முதலியாரின் மாணாக்கரில் ஒருவராகிய தென்கோவை அம்பலவாண பண்டிதர் 1878 இல் தமிழ் மக்கள் அனைவரும் படித்து பேருவகை பெறவென இந்நூலை அச்சிடுவித்து வெளியிட்டார். அதன் பின்னர் இந்நூல் பல பதிப்பு கண்டுள்ளது. அருந்தொடரும் சொற்பொருளும் மிகமலிந்து, யமகத்திரிபுகளாகிய சொல்லணிகளும் சிலேடை முதலிய பொருளணிகளும் நிரம்பியிருக்கப் பெற்றது இப்பிரபந்தம்.

பொதுவாய் வழங்கும் சிலேடை வெண்பாக்களைப் போல இரண்டாம் அடிகள் சிலேடைப் பொருள் பயந்து நிற்க, மூன்றாம் நான்காம் அடிகள் யமகத் திரிபுகளாகி அமைந்தில்லாமல் இந்நூலில் சில செய்யுட்களில் முதலாம் அடியும், சிலவற்றில் இரண்டாமடியும் சிலேடைப்பொருள் பயந்து நிற்க, மூன்றாம் நான்காம் அடிகள் யமகத் திரிபுகளாக அமைந்திருக்கின்றன. சில செய்யுட்களில் இரண்டாம் அடிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சிலேடைப் பொருளும் அமைந்துள்ளன. சில செய்யுட்களில் முதலாம் இரண்டாம் அடிகள் ஒருவகையான யமகமாகவும், மூன்றாம் நான்காம் அடிகள் மற்றொரு வகையான யமகமாகவும் அமைந்துள்ளன.

இப்பிரபந்தத்திலே விநாயகர் சிவன் உமை விஷ்ணு பிரம்மா முதலிய தெய்வங்களையும், சூரியன் சந்திரன் தேவருலகம் ஆகாயம் பூமி மேரு இமயம் கடல் செந்தமிழ் முதலியவற்றையும் சிலேடை வகையால் நல்லூருக்கு உவமையாக கூறும் செய்யுட்கள் பொருளுணர்ச்சியோடு படிப்போருக்கு மிக்க உவமை ஊட்டுவனவாம். இந்நூலிற் காணப்படும் சொற்களும் சொற்றொடர்களும் அரும்பொருளும் நூலாசிரியரது சொற்பொருளுணர்ச்சி வன்மையையும் அறிவாற்றலையும் கவித்துவத்தையும் நன்கு புலப்படுத்துவன. நல்லூர் வித்துவசிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை அவர்களும்

தென்கோவை யென்னும் சீர்சால் நகர்வாழ்
மேழிக் கொடியோர் வாழ்வுபெற் றோங்க
அவதரித்திட்ட அருந்தமிழ்க் கவிஞனாம்
ஆனா வியல்பிற் சேநாதி ராய
முதலியும்…………………………………………

என இந்நூலாசிரியர் அறிவாற்றலையும் கவித்துவத்தையும் வியந்து பாராட்டியுள்ளார்.