Menu

சரவணபவமாலையும் நல்லை நான்மணிமாலையும்

ஆசிரியர்: சபாரத்தின முதலியார்
பதிப்பாசிரியர்: காசிப்பிள்ளை உபாத்தியாயர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1928

யாழ்ப்பாணத்து கொக்குவிற் பதியில் வாழ்ந்த குகதாசர் ச. சபாரத்தின முதலியார் அவர்களாலே முருகப்பெருமான் மேல் பாடப்பட்டு பின்னர் அப்பதியைச்சேர்ந்த காசிப்பிள்ளை உபாத்தியாயரினால் 1928ம் வருடமளவில் கொக்குவில் சோதிடப்பிரகாச அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்ததே இந்நூலாம்.

நல்லை நான்மணிமாலை,

செந்தா திறைக்குமலர்த் தேம்பொழில்சூழ் நல்லைவரு
கந்தா வுனது கழலிணைக்கீழ் – அந்தாதி
மாண்புதரு நான்மணிப்பா மாலைபுனைந் தேத்தநல்கும்
காண்பரிய முன்னோன் கழல்.

என்கின்ற காப்புச்செய்யுளோடு ஆரம்பித்து நல்லூரிலே எழுந்தருளியிருக்கின்ற முருகப்பெருமான் மீது நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம் கொண்டு நான்மணிமாலை விதிக்கமைவாய் நாற்பது பாடல்கள் கொண்டு அந்தாதியாய் அமைந்திருக்கின்றது.

சரவணபவமாலை,

வானாடார் போற்றுமத வாரணத்தான் ஆரணத்தான்
தானே யெனக்குச் சரண்.

எனும் காப்புடன் ஆரம்பித்து 140 குறள் வெண்பாக்களினாலே சரவணபவனைப் போற்றிப் பாடுகின்றது.

நல்லை நான்மணிமாலையிலிருந்து சில செய்யுள்கள் கீழே

நேரிசை ஆசிரியப்பா

அம்புலிகங்கை யசைந்தரவாடச்
செம்பொனம்பலத்துச் சேணுறவிளங்கி
பதஞ்சலிவியாக்கிர பாதர்கண்குளிர
இடம்பெறுமடந்தை இடத்தருணோக்கி
ஐவகைலீலை யருண்டம்புரியுஞ்
சைவசிகாமணி தனிப்பெருநாட்டத்
தொளிப்பிழம்பாக வுதித்தருள்குமர
அளிக்குலமையுற் றரற்றிவிடவிருண்ட
மைதிகழ்குழலாண் மடித்தலத்திருந்து
மெய்தவழ்வேத விருத்திசெய்குதலைச்
செய்யவாழிதழ்ச் சேயிளங்குரவ
துய்யமாமறைக டுருவியுங்காணாத்
திருவடிமலர்க்குச் சிறியனேன்செப்பும்
ஒருமுறையீடுண் டுவந்துகேட்டருள்க
மற்றியானிந்த மகிதலமதன்கட்
பெற்றுளபேறோ பிணியலாதில்லை
இம்மிடியனைத்து மீசநின்கருணைச்
செம்மையாலன்றித் தீர்வதுமில்லை
தண்ணளியதுதான் தமியனேனியற்றும்
புண்ணியமின்றேற் புகுவதுமிலையாம்
ஏலுறுபுண்ணிய மெள்ளளவேனுமென்
பாலுறுலீலையாற் பகவனேயினியான்
செய்வதெனந்தோ சிறியனேனீண்டைக்
குய்வதுமுளதோ வுனதுவான்கருணை
பொங்கித்ததும்பிப் புரள்வுறுமதனுள்
இங்கெட்டுணைதான் எனதுபுன்செயல்களை
நல்வினையாக்குமா நல்கிநல்லூரிடைச்
செல்குநரடையுந் திருவருட்பேறு
தகுதியாலடியேன் சகத்தில்
மருவிடுமிடியெலா மறிந்துநீங்கிடவே

நேரிசை வெண்பா

நீங்கா தெவர்க்கு நெடுந்தூர மாகிநிற்கும்
ஓங்கார மூலத் துயர்பொருளே – காங்கேயா
நல்லார் தொழுதேத்து நல்லைப் பதியமரும்
தொல்லோ யாழித்தா டுயர்

கட்டளைக் கலித்துறை

துயரப் பெருங்கடற் சூறையி னெற்றுண்டு சோகத்தினால்
அயர்வுற்று மாழ்கி யறிவிழந் தேயல மந்தழியும்
கயவர்க்கு ணீசன் எனையா தரிப்பக் கருதுவையோ
நயமொய்த்த பாவல ரேத்துகந் தாநல்லை நாயகனே.

விருத்தம்

நாயக மாகி யமரரை யளிக்கு
நாதனே நான்மறைக் குரிய
துயரேத் தெடுப்பத் தொல்லைநாட் கேதீச்
சுரத்தமர் சுயம்புமுன் றந்த
பாயபே ரருளிற் பௌவமே நல்லைப்
பதியமர் பரஞ்சுடர்க் கொழுந்தே
தீயனே னெனது குறைமுடித் தருளத்
திருவுள மிரங்குதல் வேண்டும்.