நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து

ஆசிரியர்: க. மயில்வாகனப் பிள்ளை
எழுதப்பட்ட வருடம்: 1911
பதிப்பாசிரியர்: யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடம்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1911

சிறந்த சொல்லாங்காரம் மிக்க கவிதைகள் புனைய வல்வவரும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தே கல்வி கற்றவரும் மயிலை மும்மணிமாலை, மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், மாவைப் பதிகம் என்பனவற்றை செய்தவருமாகிய மயிலிட்டியில் வசித்த க. மயில்வாகனப் புலவரினால் நகுலேச்சுவரப் பெருமான் மீது செய்யப்பட்டதே இந்த நகுலேச்சுவர விநோத விசித்திர கவிப்பூங்கொத்தாம்.

இந்நூலானது யாழ்ப்பாணத்து நாவலர் அச்சுக்கூடத்தினிலே 1911ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.

இந்நூலினைப்பற்றி இதனாசிரியர்,

சித்திரக்கவிகள், பொருட்சித்திரம், சொற்சித்திரம் உரப் பாடுவன. இப் பிரபந்தம் அவ்விருவகைக் கவிகளானும் பெரும்பாலும் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அற்புத விசித்திர அலங்காரம் அமைய இயற்றப்பட்டது. கவிகளின் பாத்திரமன்று; சொல் சீர் அடி தொடைகளிலும் ஆங்காங்குச் சில விநயங்கள் தோன்ற யாக்கப்பட்டமை ஊன்றி நோக்குமிடத்துப் புலனாகும். இதிலே “கோமூத்திரி” முதலாகத் தமிழில் வந்து வழங்கும் சித்திரக் கவிகளும், “வியஸ்த சமஸ்த சாதி” முதலாகச் சமஸ்கிருதத்திலுள்ள வினாவுத்தரக் கவிகளும் பலவகையினவும் பிறவும் வருவதோடு நவீன சித்திரக் கவிகளுஞ் சில வருகின்றன.

என்பார். இப்புலவரினாலே செய்யப்பட்ட நகுலேச தோத்திரமும் நூலின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நூலிற்கு, சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், பிரம்மஶ்ரீ கணேசையர், வட்டுக்கோட்டை வித்துவான் நா. சிவசுப்பிரமணிய சிவாசாரியார், யாழ் மத்திய கல்லூரி தமிழப்பண்டிதர் இராமலிங்கப்பிள்ளை, அஷ்டாவதானம் கலியாணசுந்தரமுதலியார், பருத்தித்துறை வித்துவான் முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், அல்வாய் நொத்தரிசு ஆறுமுகம், பருத்தித்துறை புலோலி குமாரசுவாமிப் புலவர், நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர், யாழ் இந்துக் கல்லூரி தலமைத் தமிழ்ப் பண்டிதர் சோமாஸ்கந்தப்பிள்ளை, கொழும்பு அரசினர் ஆசிரிய கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் தென்கோவை கந்தையாப்பிள்ளை, பத்திராதிபர் சு. சரவணமுத்துப்பிள்ளை, நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப் பிள்ளை என்போர் சிறப்புப் பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள்.

இந்நூலை கோமுத்திரிகாபந்தம், இரட்டைநாகபந்தம், அஸ்டநாகபந்தம், நாகபாசபந்தம், அட்டதளபதுமபந்தம், நான்காரச்சக்கரபந்தம், ஆறாரச்சக்கரபந்தம், எட்டாரச்சக்கரபந்தம், சுழிகுளபந்தம், சருப்பதோபத்திரபந்தம், முரசபந்தம், சதுரங்கபந்தம், வேலாயுதபந்தம், இரதபந்தம், பதுமபந்தம் போன்ற சித்திரக்கவிகள் அணிசெய்கின்றன.

கீழே நூலின்கண்ணுள்ள நான்காரச்சக்கரபந்தத்தினை பாருங்கள்.

காயு மாலழி மேதகா
காத மேமலை நீளகா
காள நீடுமை நாயகா
காய நாமன மாயுகா

முப்பத்திரண்டு எழுத்துக்களை உடைய இச்செய்யுள் நான்காரச்சக்கரத்தில் அமையும்போது பதினேழு எழுத்துக்களாய் சுருங்குவதை கவனிக்க.