Menu

திருவெண்காட்டந்தாதி

ஆசிரியர்: சி. அகிலேசசர்மா
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1922

யாழ்ப்பாணத்திற்கு அணித்தாய் அமைந்திருக்கின்ற தீவுகளில் ஒன்றான மண்டைதீவில், திருவெண்காடு என்னுங் கிராமத்தில் எழுந்தருளியருள்பாலிக்கின்ற சித்திவிநாயகப் பெருமானின் மீது, அவ்வாலயத்திலே பிரதம குருவாக இருந்த அகிலேசசர்மா அவர்கள் இயற்றிய அந்தாதி மாலையே திருவெண்காட்டந்தாதி எனும் இந்நூலாம்.

மூன்று அவையடக்கப் பாடல்களின் பின்னர்

செல்வங் கதிதரு மீசனும் மாதுமுன் சேர்ந்தருளால்
வில்வங் கமழ்பொழின் மண்டபத் தோவிய வேழங்களால்
நல்குங் கயமுகத் தெந்தையெற் கொண்டு நவில்விக்கவே
சொல்வன் கருணைவெண் காட்டினந் தாதியத் தோன்றலுக்கே.

எனும் காப்புச் செய்யுளுடன் ஆரம்பித்து அந்தாதி நூல் விதிக்கமைய நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் அமைந்து சிறந்திருக்கின்றது இந்நூல். இவற்றிற் சில செய்யுள்களை கீழே காணுங்கள்.

6.
வழுத்துமி னந்தம தக்களிற் றானன வள்ளலையே
பழுத்துள மூறுசெந் தேன்கனி யைத்துதி பன்னுமுத
லெழுத்துரு வான பரிதியை நெஞ்சி லிருத்துமின்னே
கழிப்புனல் சூழ்திரு வெண்கடத் தாலயங் காலிக்குமே.
7.
காலிக்கு மின்னொளிக் கற்றையு முற்றுங் கருணைவெள்ளம்
பலிக்கு மின்ப நயநங்கண் மூன்றும் பவந்தொலையச்
சூலிக்கு முன்னருள் செய்தபி ரான்சுதன் றோன்றுமுத்துச்
சூலிக்கி னம்மலி வெண்கா டகத்திற் றுதிமின்களே.
8.
துதிபுரி வேலையிற் போதமெ னும்பயிர் சூழ்ந்தழித்தே
சதிபுரி யும்பல வேழங்கள் வீயத் தவளவனந்
திதிபுரி யும்பரன் செங்கையி லங்குசஞ் சேர்ந்ததென்றே
மதிபுரி செஞ்சடை முன்னவற் போற்றுவர் மாதவரே.

இவ்வந்தாதிக்கு வண்ணை சைவப்பிரகாச வித்தியாலய ஆசிரியர் தி. கிருஷ்ணபிள்ளை, வண்ணார்பண்ணை சிவன் கோயில் க. வைத்தியலிங்கம்பிள்ளை, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தமிழ்ப்பண்டிதர் சோமாஸ்கந்தப்பிள்ளை, சுன்னாகம் ச. பொன்னம்பலப்பிள்ளை ஆகியோர் சிறப்புப்பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள். சோமாஸ்கந்தப்பிள்ளை அவர்கள் சொன்ன சிறப்புப்பாயிரத்தை கீழே காணுங்கள்.

விண்காட்டுஞ் சோலை வியன்மண்டை தீவுமலி
வெண்காட் டியானைமுகன் றாள்வேண்டிப் – பண்காட்டும்
பாமாலை யந்தாதி பாடியகி லேசுரசன்
பாமாலை தந்தான் மகிழ்ந்து.

இந்நூலை நூலாசிரியர் அவர்கள் 1922ம் வருடம் திருவெண்காட்டுச் சித்திவிநாயகர் திருவூஞ்சல், திருவெண்காட்டீசர் கும்மி என்பவற்றோடு சேர்த்து கொக்குவில் சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பித்து வெளியிட்டார்கள்.