திருநாவலூர் மான்மியம்

ஆசிரியர்: அம்பலவாண நாவலர்
பதிப்பாசிரியர்: அருணாசலச் செட்டியார்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1907

யாழ்ப்பாணம் சித்தன்கேணி அம்பலவாண நாவலர், ஆறுமுக நாவலரை தன் மானசீக குருவாக கொண்டவர், சிவத் தொண்டர், திருவாடுதுறை ஆதீனத்தினால் நாவலர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். ஈழத்திலும் தென்னிந்தியாவிலும் பல திருத்தொண்டுகள் செய்தவர்.

இவர் இந்தியாவிலே இருந்த காலத்தில் திருநாவலூர் தேவஸ்தானம் தர்மகத்தா தேவகோட்டை அருணாசலச் செட்டியார் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருநாவலூர் மான்மியம் என்கின்ற இந்த நூலை யாத்தார். இந்நூல் மேற்படி செட்டியாரால் 1907ம் வருடம் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது.

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் சிறப்புக் கூறும் இந்நூல், உமாதேவியார் அருச்சித்த சருக்கம், விஷ்ணு பூசித்த சருக்கம், சண்டேசுரர் பூசித்த சருக்கம், கருடன் பூசித்து விடவாதை தீர்ந்த சருக்கம், சுந்தரமூர்த்தி சுவாமி திருவவதார சருக்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட சருக்கம், உற்சவம் புரிந்த சருக்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மகாபூசை செய்த சருக்கம் என எட்டு சருக்கங்களாய் அமைந்திருக்கின்றது.

உமாதேவியார் அருச்சித்த சருக்கத்திலிருந்து ஒரு பகுதியை கீழே காணுங்கள்.

அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப்பிழம்பாய், நிர்த்துவந்துவநிருபாதிக வஸ்துவாகிய பரப்பிரமம், பசுபதியாகிய சிவபெருமானே யென்பது வேத சிவாகம சித்தாந்தமாம். அச்சிவபெருமான் ஆன்ம கோடிகளெல்லாம் உய்யும் பொருட்டுப் பெருங்கருணையினாலே அக்கினிக்கு உஷ்ணம் போலவும் நீருக்கு தட்பம் போலவும் தமக்கு வேறாகாது ஒன்றாய் விளங்கும் தமது சத்தியும் தருமபத்தினியும் உலகமாதாவுமாகிய உமாதேவியாரோடு கலந்து அருளானந்தக் கிரீடைசெய்து சாசுவதமாக வெழுந்தருளியிருக்கும் ஸ்தானம் ஶ்ரீ கைலாச பர்வதமாம்……