திருத்தில்லை நீரோட்டக யமக வந்தாதி

ஆசிரியர்: வேலுப்பிள்ளை
பதிப்பாசிரியர்: ஆறுமுகச்செட்டியார்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1892

ந்தாதி நூல்களினுள்ளே யமகமமைத்து பாடுதல் பெரும்புலவர்களுக்கே வாய்த்த கலை. அவற்றுள்ளும் உதடுகள் ஒட்டாதவாறு பாடக்கூடிய நீரோட்டக யமக அந்தாதிகளை இயற்றுவது கடினத்திலும் கடினமாம். யாழ்ப்பாணத்து வடகோவை வேலுப்பிள்ளை அவர்கள் தில்லையிலே குடிகொண்டு அருள்பாலிக்கும் அம்பலவாண சுவாமிமீது மீது யாத்த அந்தாதியே திருத்தில்லை நீரோட்டக யமகவந்தாதி எனும் இந்நூலாம். இதனை பின்வரும் செய்யுளாலறியலாம்.

சீரார்திருத்தில்லை யம்பலவாணன் றிருவடியின்
ஏரார்நீரோட்டயமக வந்தாதி யிசைத்தணிந்தான்
தாரார்பொழில் வடகோவை விநாயத்தம்பிபெற்ற
பாரார்மதிமதி வேற்பிள்ளையாம் பெயர்ப்பாவலனே.

நூலின் முடிவில் இந்நூலை யாத்த காரணத்தை புலவரவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

திருத்தில்லை அம்பலவாண சுவாமியிடத்து திருவருட் பிரசாதம் பெறவேண்டி “பாடுவார்க் கருளுவார்” என்னும் ஆன்றோர் வாக்கை முன்னிட்டு, வயதினாலு மறிவினாலுஞ் சிறியேனாகிய யான் தோத்திரமாக இப் பிரபந்தத்தை பாடத்துணிந்தோம்.

நூறு செய்யுள்களால் அமைந்த இந்நூலை கோப்பாய் ஆறுமுகச்செட்டியார் அவர்கள் 1892ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

இந்நூலிலிருந்து சில பாடல்களை கீழே காணலாம்

சிறைக்கணி யாயனந் தாதனை தில்லையர் சாரலினஞ்
சிறைக்கணி யாடகங் கஞ்சங்க ளென்கரந் தேக்கினநிற்
சிறைக்கணி யார்கழ லின்னிசை கேணந் திகழனங்கன்
சிறைக்கணி யார்த லினவழி தைய றியங்கலையே. (௩௫)

கன்ன னிறையற லாரள கத்தினள் கண்டனெஞ்சே
கன்ன னிறையற நன்கேற்ற கண்ணனெண் கண்ணனத்தன்
கன்ன னிறையரண் டில்லை யடியார் கழறிசையார்
கன்ன னிறையரன் சீரிசை நல்ல கலைதனையே. (௩௬)