திராவிடப்பிரகாசிகை

ஆசிரியர்: சபாபதி நாவலர்
எழுதப்பட்ட வருடம்: 1899
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1899

மிழ் இலக்கிய இலக்கண சாத்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப் போதிப்பது திராவிடப்பிரகாசிகை என்னும் இந்நூல். அருந்தமிழறிஞரால் மருந்தெனப்போற்றப்படும் இந்நூலை யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் தமது சித்தாந்த வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையில் 1899ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார்.

வசன கிரந்தமாய் செய்யப்பட்டிருக்கம் இந்நூல், பாயிரம் நீங்கலாய் தமிழின்றெய்வப்பழமைமரபியல், இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழியியல் என்று ஐம்பெரும் பிரிவாய் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்நூல் பற்றி அதன் சிறப்புப்பாயிரத்திலே சபாபதி நாவலரவர்கள்

தமிழின் றொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினையும், இலக்கிய மரபினையும், சாத்திர மரபினையும், நல்லாசிரியர் வழிநின்று தெளிதரற்குரிய நற்றவ அறிவு மாட்சி யடையரல்லாதார் சிலர் இக்காலத்துத் தாந்தா மறிந்தவற்றான் முறை பிறழக்கொண்டு தமிழ் மொழியினும் பிறமொழியினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம்பழித்தலானும், அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத பேதைநீரார், அவற்றினை மெய்யெனக்கொண்டு தமிழ் நல்லாசிரியர் தெய்வப்புலமை மாட்சியினையும், அவர் நூலுரைகளின் றாரதம்மிய முறையினும், வரன்முறை போற்றாது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்குங் கேடுசூழதலானும், தமிழ் உலக மற்றவற்றின் உண்மை தேறி யுறுதிப்பயனெய்துதற்பொருட்டு அத்திறனெல்லாம் விளக்கித், “திராவிடப்பிரகாசிகை” யென்னும் பெயரினால் இவ்வசனகிரந்தம் இயற்றுவே மாயினோம்.

என்று நூல்பிறந்த காரணம் சொல்கின்றார்.

இந்நூலில் வேற்றுமைமயங்கியல் பற்றி சொல்லியிருக்கும் குறிப்பை பாருங்கள்.

இது தன்பொருளிற்றீராது பிறிதொன்றன் பொருட்கட்செல்லும் பொருண்மயக்கமும், தன்பொருளிற் றீர்ந்துசெல்லு முருபுமயக்கமு மென்னு மிருவகை மயக்கமுமாகிய வேற்றுமைமயக்க முணர்த்துதலின், அப்பெயர்த்தாயிற்று. “யதனுருபிற் கூறிற் றாயினும் – பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்” என்பதனானே உருபுமயக்கமும் அல்லனவற்றானெல்லாம் பொருண்மயக்கமு முணர்த்தப்பட்டன.