மேலும் சில நூல்கள்

தமிழ்ப்புலவர் சரித்திரம்

ஆசிரியர்: அ. குமாரசுவாமிப்புலவர்
எழுதப்பட்ட வருடம்: 1916

மிழ் மொழியினுள்ள இலக்கியலக்கணங்களை கலக்கமறக் கற்றுத் தெளிந்த மெய்யுணர்வும், பிரபந்தஞ்செய்யும் பெருவலியுமுடைய புலவர்களின் சரித்திரங்களை விளம்புகின்ற நூலே தமிழப்புலவர் சரித்திரம் எனும் இந்நூல்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை தலைமையுபாத்தியாயராக விருந்த சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் அவர்கள் 1916ம் வருடம் இதனை எழுதி வெளியிட்டார்கள். இந்நூலை தான் யாத்தது பற்றி புலவரவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.

இதனை எழுதத் தொடங்குமுன் யாம், இங்கே வழங்கும் பழைய நூலுரைகளை முதற்கண் அநுசீலனஞ்செய்தோம். பின்னர் ஆங்காங்கெய்திய பாயிரங்கள், தனிநிலைக் கவிகள், புலவர் நாமங்கள் முதலியவைகளை ஆராய்ந்தோம். அதுபின் தொண்டைமண்டலசதகம், தமிழ்நாவலர் சரிதை, புலவர் புராணம், தனிச்செய்யுட்சிந்தாமணி, பாவலர் சரித்திரதீபகம், ஆழ்வார்சரித்திரம், தனிப்பாடற்றிரட்டு முதலியவைகளை ஆராய்ந்தோம். அதன்பின் மஹாமகோபாத்தியாயர் வே. சாமிநாதையரவர்களும், சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களும், வேறும் புலவர்கள் பலரும் தத்தம் பிரகடனநூல்களின் முகத்தில் எழுதியிருங்குஞ் சரித்திரங்களையும், சேதுசமஸ்தான வித்துவான் ரா. இராகவையங்காரவர்களும், வேறும் பலருஞ் செந்தமிழ்ப் பஞ்சிகையில் எழுதியிருக்கும் சரித்திரங்களையும், பிரத்தியேகமாய் பிரகடனஞ் செய்த சில சரித்திரங்களையும், பிறவற்றையும் ஆராய்ந்தோம்.

துணைபுரியுங் குணசீலராய சில சில உபகாரபுருடர்களையும் பலவாறாய துணைவிரும்பித்த தழுவினாம். ஆங்கில திராவிட பண்டிதரும், வித்தியாவிநோதருமாயச் சென்னைமாநகரில் வசிக்கும் திரு. த. கனகசுந்தரம்பிள்ளையவர்கள் பற்பல திருத்தங்கள் கொண்டு துணைபுரிந்தார்கள். ஆசிரிய கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் தென்கோவை கந்தையாப்பிள்ளை, புன்னைக் கணேசையர், கொக்குவில் முருகேசையர், தெல்லிச் சின்னத்தம்பியையர், இளவாலைச் சங்கரப்பிள்ளை, உபாத்தியாயர் வண்ணைக் கிருஷ்ணபிள்ளை என்னும் இவர்களுந் திருத்தமும் பிறவுமாகச் சிலசில துணை புரிந்தார்கள்.

நல்லூர் உபயவேதாகமபண்டிதர் கனகசபாபதியையரவர்கள் சிலசில தனிநிலைக்கவிகளும், கந்தசாமிப்புலவர், கவிராயபிள்ளை, கந்தப்பையர் என்னும் புலவர்கள் சரித்திரமும், பிறவும் உபகரித்துத் துணைபுரிந்தார்கள். திருவாரூர் இலக்கணவிளக்கப் பரம்பரைச் சோமசுந்தரதேசிகரவர்கள் சோழமண்டலசதகமும் பிறவும் உபகரித்து துணை புரிந்தார்கள். நியாயப்பிரதிநிதி பொன்னம்பலப்பிள்ளை, நாவலர்கோட்டம் வித்துவான் முத்துத்தம்பிப்பிள்ளை என்னும் இவர்களுஞ் சிலசில துணைபுரிந்தார்கள்.

அகத்தியர் முதல் வைத்தியலிங்கப்பிள்ளை வரையாக 178 புலவர்களின் சரித்திரங்களை இந்நூல் சொல்கிறது. இதைவிடவும் 170 சங்ககால மற்றும் மற்றைய காலப் புலவர்களின் பெயர்களும் இந்நூலில் உள்ளடக்கபட்டிருக்கின்றன. அவர்களின் வரலாறோ அவர்களது பாடல்களோ இந்நூலின் கண்ணில்லை.