தந்தையார் பதிற்றுப்பத்து

ஆசிரியர்: சோமசுந்தரப்புலவர்

ருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் தந்த பெரும் புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். இவரது தந்தையார் கதிர்காமர். சிறந்த தமிழறிஞர் சிவனடியார். இவர் இறையடி சேர்ந்தபோது ஆற்றாது புலவர் செய்த நூலே தந்தையார் பதிற்றுப்பத்து.

திருக்குறள், நாலடியார் முதலிய அறநூற்களின் கருத்துக்களைத் தழுவியும், தம்முடைய தந்தையார் கதிர்காமர் செப்பிய நல்லறிவுரைகளையும், யாழப்பாணத்துக்கு சிறப்பாயமைந்த விழுமிய பண்பாடுகைள ஆங்காங்கே பெய்தும் சோமசுந்தரப் புலவர் இந்நூலை அமைத்திருக்கின்றார்.

இந்நூல் அறநூற் கருத்துக்களின் பெட்டகம்; பயிலுந்தோறும் அறிவின்பம் பயப்பது; நல்லொழுக்கத்தையும், உயர்ந்த நாகரிகப் பண்பாடுகளையும், தமிழர் சால்புகளையும் பொதிந்த களஞ்சியம்; கற்றாரும் கல்லாதாரும் விளங்கி யின்புறுதற்குரிய செஞ்சொற் பாவமுதம்

என இந்நூலை, தமிழ்ப்பாதுகாப்புக் கழக செ. யே. இளையதம்பி அவர்கள் விதந்து நோக்கியுள்ளார்கள்.

கடவுள் வாழ்த்து நீங்கலாய், வளர்த்த பத்து, கற்பித்த பத்து, ஒழுக்கமுரைத்த பத்து, தெய்வத்திறன் உரைத்த பத்து, விதித்துரைத்த பத்து, விலக்கியதுரைத்த பத்து, முதுமொழிப் பத்து, பழங்கதைப் பத்து, இரங்கற் பத்து, கடவுட்பராவிய பத்து என நூறு அகவற் பாக்களால் அமைந்து சிறந்திருக்கறது இந்த தந்தையார் பதிற்றுப்பத்து.

விலக்கியதுரைத்த பத்தில், தந்தையார் புலவருக்கு விலக்குமாறு சொன்னவற்றில் சில

பொருந்திய விசும்பிற் புலவருங் காணா
மருந்தே யாயினுங் கூழே யாயினுந்
தெய்வந் தொழாது சிறுதுமுண் ணற்க
விருந்து புறத்ததாய்த் தானுணல் விடுக
நின்றும் நடந்துங் கிடந்துமுண் ணற்க
சுடர்விளக் கின்றி யிரவிலுண் ணற்க
அந்தியி லுணவு மளவறு முண்டியுஞ்
சிந்தையன் பில்லார் தந்திடு மமுதமும்
நஞ்சினுங் கொடியவென் றஞ்சுக விடுகவென்
றையநீ சொல்லுமல் லவைகள்
உய்வுற வகங்கொண் டோம்புகின் றோமே.

இந்நூலிற்கு வட்டுக்கோட்டை பண்டிதர் அ. தில்லைநாதரும், பரமேசுவராக் கல்லூரி தமிழ்ப்புலவர் மாவைக் கவுணியன் வெண்ணைக் கண்ணனார் என்று அழைக்கப்பட்ட நவநீதகிருஷ்ணபாரதியாரும் சிறப்புப்பாயிரம் செய்துள்ளனர்.