Menu

தண்டிகைக் கனகராயன் பள்ளு

ஆசிரியர்: மாவைச் சின்னக்குட்டிப் புலவர்
எழுதப்பட்ட வருடம்: 1792
பதிப்பாசிரியர்: வ. குமாரசாமி
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1932
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, தண்டிக் கனகராயன் பள்ளு வ.குமாரசாமி பதிப்பு.

ண்டிகைக் கனகராயன் பள்ளு தெல்லிப்பழையிலே செல்வந்தராய் விளங்கிய கனகராய முதலியாரின் இல்லத்துப் புலவராய மாவிட்டபுரம் சின்னக்குட்டிப் புலவராற் செய்யப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். கனகநாயக முதலியாரின் முற் சந்ததியினரும், காரைக்காட்டிலிருந்து வந்து தெல்லிப்பழையிற் குடியேறிய வேளாளருள் முதன்மையானவருமான கனகராயன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இந்நூல் செய்யப்பட்டுள்ளது. கனகராயன் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் குடியேறியவராகையால், அம்மன்னர் அவருக்குத் தண்டிகைகள் வழங்கிக் கௌரவித்தனர். அதனால் அவர் தண்டிகைக் கனகராயன் என வழங்கப்படலாயினர். இந்நூலில் தண்டிகைக் கனகராயனும், அந்த வழிவந்த கனகநாயக முதலியார், அவரது சகோதரர், மாமன், மைத்துனர் ஆகிய நெருங்கிய உறவினரும், அவர் கிளையிலே பிரபல்யமுற்று விளங்கிய சிலரும் புகழ்ந்துரைக்கப்படுகின்றார்கள். அவர்கள் சுற்றமித்திரராயுள்ளோர் வாழும் தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை ஆகிய இடங்களிலுள்ள பல பிரமுகர்களும் புகழப்படுகின்றார்கள். காரைக்காட்டு வேளாளர் வம்சமும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றது.

ஏனைய பள்ளுக்களிற் போல இதிலும் மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய பாத்திரங்களே தோற்றுவரெனினும், பள்ளிகள் வடகாரைப் பள்ளியாகவும், தென்காரைப் பள்ளியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நாட்டு வளங் கூறும் பகுதியில் அவர்கள் வடகாரை வளமுந் தென்காரை வளமுமே கூறுவர்.

இந்நூல் விநாயகர் காப்புச் செய்யுளும், சுப்பிரமணியர் காப்புச் செய்யுளுங் கொண்டு, விநாயகர், நடேசர், கதிரையாண்டவர், திருமால், சரஸ்வதி ஆகியோர் துதிகூறி பள்ளியர் தோற்றத்துடனாரம்பிக்கின்றது. இதிலிருந்து நாற்றுநடுகையீறாக 153 செய்யுள்கள் கிடைக்கப்பெற்று யாழ்ப்பாண ஆரிய திராவிட பாசாபிவிருத்திச்சங்கப் பிரசுரமாக 1932 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவற்றுள்ளும் சில செய்யுள்கள் முழுமையாக கிடைத்தில.

ஏராள னாந்தண் டிகைக்கனக ராயன்மேற்
சீராரும் பள்ளினிசை செப்பவே – பாராரும்
மெய்யா னைமுகத்து வேணிப் பிரானுதவு
கையா னைமுகத்தோன் காப்பு

என்பது விநாயகர் காப்புச் செய்யுள். பள்ளி தோற்றப்பாடலை கீழே காணலாம்.

வஞ்சி யவள் கொங்கைகள் பணைக்க
    மஞ்ச ளும்பூம் பச்சையும் மணக்க
    வளரு மிளம்பிளை நுதலில் நீற்றுக் கிளரொளி தோற்ற
நஞ்சி னையூட் டியவே லென்னவே
    யஞ்சனந் தீட்டிய வாள்விழி களிக்கப்
    பசும் பொற்பணி தாழ்குழை தூங்கத்
தஞ்ச மில்லா தலம்வரு மிடையிற்
    பஞ்ச வர்ணச் சேலையுந் தயங்கத்
    தளைத்த பசுங் கழுத்தினிற் செம்பொற் றாலியும் விளங்க
மஞ்செ னவே தாழ்குழன் மீதிற்சஞ் சரிக்க
    நறைவிளா மலர் சூட்டி
    வட காரைக் காவற் பள்ளி தோற்றினாளே.

நூலின் இறுதியில், தண்டிகைக் கனகநாயக முதலியாரின் முதல்வனான கந்தப்பனது திருமண வாழ்த்துப்பா இடம்பெறுகின்றது. அத்திருமணம் பரிதாவி வருடம் ஆனித்திங்கள் இருபத்திமூன்றாம் திகதி நடைபெற்றதாக அதில் குறிக்கப்பட்டுள்ளது. இப்பரிதாவி ஆண்டு 1792 என வ. குமாரசாமி கணக்கிட்டு காட்டியுள்ளார். தன் மகனுடைய விவாகத்தின் பின் ஒருவருடத்துக்குள்ளே கனகநாயக முதலியார் இறந்துவிட்டாராகையால், இந்நூல் 1792க்குச் சில ஆண்டுகள் முன்னர் எழுதப்பட்டிருக்கு வேண்டுமென்று துணியலாம்.