தக்ஷிண கைலாச புராணம்

ஆசிரியர்: சிங்கைச் செகராசசேகரன்
எழுதப்பட்ட வருடம்: ஆரியச்சக்கரவர்த்திகள் காலம்
பதிப்பாசிரியர்: கா. சிவசிதம்பர ஐயர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1887
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

க்ஷிண கைலாச புராணம் திருகோணமலையிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் கோணேசர் பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்றிக் கூறுந் தலபுராணமாகும். இத் தலத்தின் தோற்றம், ஆதி வரலாறு ஆகியவற்றையும், அவை பற்றிய வேறு சரிதங்களையும் இது கூறும். வடமொழியிலுள்ள மச்சேந்திய புராணத்தை தழுவியே இந்நூல் செய்யப்பட்டுள்ளது என்பதனை மேல்வரும் அதன் பாயிரச் செய்யுள் காட்டும்.

மீதுயர்ந்த வுருத்திரரும் விரிபதுமப்
பெருமலரின் விரிஞ்சர் தாமும்
போதுதிரு மாதவரு மாதவர்க்கு
ளொருபெரிய புனித மீனு
மாதரவி விறைஞ்சுகதை கயிலாய
புராணமென வறைய லுற்றேன்
மாதுரிய மச்சேந்திய வடபுரா
ணத்தியல்பு மருவத் தானே

இச்செயுளால், இந்நூற் கிதனாசிரியரிட்ட பெயர் “கயிலாய புராணம்” என்றும் தெரிகின்றது.

தக்ஷிண கைலாச புராணம் பாயிரம் நீங்கலாக, ஈழமண்டலச் சருக்கம், திருமலைச் சருக்கம், புவனோற்பத்திச் சருக்கம், அர்ச்சனாவிதிச் சருக்கம், மச்சாவதாரச் சருக்கம், தரிசனாமுத்திச் சருக்கம், திருநகரச் சருக்கம் என ஏழு சருக்கங்களை கொண்டுள்ளது. முதல் ஆறு சருக்கங்களும், திருநகரச் சருக்கத்திலே முதல் பதினேழு செய்யுள்வரையுமே வடமொழிப்புராணத் தழுவலாகுமெனத் திருநகரச் சருக்கத்தின் 17ஆவது செய்யுள் கூறும்.

இந்நூலை 1887ம் ஆண்டு கா. சிவசிதம்பர ஐயர் சென்னையிலே முதன்முதலாக பதிப்பித்தார். பின்னர் 1916ஆம் ஆண்டு பு. பொ. வைத்தியலிங்க தேசிகர் பருத்தித்துறையிலே பதிப்பித்து வெளியிட்டார். முன்னவர் பதிப்பிலே இந்நூல் யாழப்பாணத்து மாகாவித்துவான் சிங்கைச் செகராசசேகரன் இயற்றியது என்று கூறப்பட்டுள்ளது. பின்னவர் பதிப்பிலே “பிரம்மஸ்ரீ பண்டிதராச ரருளிச்செய்த ஸ்ரீ தக்ஷிண கைலாச புராணம்” என்றுரைக்கப்பட்டுள்ளது. இரு பதிப்புப் பாயிரச்செய்யுள்களும். நூற்செய்யுள்களும் இடையிடையே வேறுபடுவதால், அவற்றைக்கொண்டு ஆக்கியோன் பெயர் எதுவெனத் தேறலரிதாயிற்று, எவ்வாறாயினும், இந்நூல் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்குரியதாகுமென்பதனைச் சில சான்றுகள் கொண்டு நிறுவலாம். நூலாசிரியரைப் பண்டிதராசர் எனக் கூறும் வைத்தியலிங்கத் தேசிகர் பதிப்பிலே திருநகரச் சருக்க 108வது செய்யுளாய,

அம்புயத் துதரத் தண்ண லமைந்தவா ரியர்தங் கோமா
னும்பர்வந் திறைஞ்சுஞ் சேது வுயர்கரைக் காவல் வேந்தன்
செம்பொன்மா மௌலிச் சென்னிச் செகராச சேக ரேசன்
றும்பையஞ் சடையான் சைவந் தோன்றிடத் தோன்றினானால்

என்ற விருத்தப் பாவிலும், அதனைத்தொடர்ந்து வரும் செய்யுள்கள் சிலவற்றிலும் செகராசசேகரன் சமகாலத்தவனாகப் புகழப்படுகின்றான். எனவே, இப் பதிப்பின் படியும், இந்நூல் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்குரியதாகின்றது. அன்றியும் முதற்பதிப்பின்படி இதற்கு நூற்சிறப்புப் பாயிரமளித்த அரசகேசரியும், இரண்டாம் பதிப்பின்படி அந்நூற் சிறப்புப்பாயிரமளித்த கவிவீரராகவனும் இந்நூல் செகராசசேகரன் காலத்திற் செய்யப்பட்டதென்பர்.