சங்க காலத்தினின்று சமீப காலம் வரையில் தோன்றிய பல சிறந்த தமிழ் இலக்கியங்களின் நலன்களை பலரும் எளிதிலுணர்ந்து நுகருமாறு தமிழறிஞர்களை கொண்டு விரிவுரைகள் செய்வதும், தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக்கொள்ள உதவவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டு செய்யவுமென யாழப்பாணத்தில் 1931 இல் உருவாகிய காலாநிலையமெனும் கழகத்தாரின் இரு திங்கள் வெளியீடாய் 1933ம் வருட சித்திரைப் புத்தாண்டிலிருந்து வெளிவந்த இதழே ஞாயிறு.
இதன் முதற்கதிருக்கு மஹா மஹோபாத்தியாயர் உ. வே. சாமிநாதையரவர்களும், யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர் நவநீதகிருஸ்ண பாரதியார் அவர்களும் வாழ்த்துக் கவிகள் சொல்லியிருக்கின்றார்கள். முதலியார் செ. இராசநாயகம், தினகரன் பத்திராதிபர் வண்ணை வை. இராமநாதன், யாழப்பாணம் தலைமைத் தமிழ் வித்தியாதரிசி தி. சதாசிவஐயர், கலியாணசுந்தரமுதலியார் ஆகியோர் வாழ்த்துரை சொல்லியிருக்கிறார்கள்.
மாமலி தமிழிற் பிறமொழி தம்மில்
வயங்குறு பற்பல பொருளும்
தேமலி தரவே மாந்தர்நன் குணரச்
செய்வதற் கியற்றமிழ் மடந்தை
பாமலி வுறநன் னடஞ்செயு மீழப்
பைதிரந் தன்னிடைத் தோன்றும்
ஏமலி புகழ்சேர் ஞாயிறு விளங்க
விறைவன தடிபர வுதுமே
என்பது சாமிநாதையரவர்கள் சொன்ன வாழ்த்துப்பா.
இந்த முதலிதழுக்கு சுவாமி விபுலானந்தர், திரு. சு. நடேசபிள்ளை, இராமசாமி சர்மா, சுவாமி ஞானப்பிரகாசர், திரு வேலாயுதம்பிள்ளை, திரு கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, நவாலியூர் இளமுருகனார், வித்துவான் சுப்பையாப்பிள்ளை, வித்துவசிரோமணி கணேசையர், திருகோணமலை க. விசுவலிங்கம், திரு. பொ. கைலாசபதி, திரு. வ. குமாரசுவாமி, திரு பிரான்சிஸ் கிங்ஸ்பரி ஆகியோர் விடயதானம் செய்திருக்கின்றார்கள்.