ஞானானந்த புராணம்

ஆசிரியர்: தொம்பிலிப்பு
பதிப்பாசிரியர்: ஜெகராவு முதலியார்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1874

விசுவாச விளக்கமென்னும் ஞானானந்த புராணம் என்கின்ற இந்த நூல் தோம் தியோகு வருணசூரிய முதலி (தோம் தியோகு வர்ணகுலசூரிய அரசு நிலையிட்ட முதலியார்) என்பாரின் வேண்டுகைக்கு இணங்கி, யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலே இருந்த தோம்பிலிப்பு என்பாரால் சத்திய வேதத்தை சுருக்கமாகத்திரட்டி விருத்தப்பாவால் செய்யப்பட்டது. இதனை தற்சிறப்புப் பாயிரத்திலிருக்கும் செய்யுள்களால் அறியலாம்.

பத்தியினாற் கன்னிமரி கருணைகொண்ட
   பராபரனை நினைந்துபர கதியைநோக்கி
நித்தியமுங் காலையந்தி செபதியான
   நிச்சயமாயுச்சரித்து ஞானநேசம்
வைத்தவனற் றோந்தியோ கரசென்றோதும்
   வருணசூரியமுதலி யென்னுமன்னன்
சித்தமுறவிசுவாச விளக்கமுன்னூல் செகந்தழைக்கத்
   தமிழ்ப்பாசையிற் செய்வித்தானே. (12)

அல்லலுறுமஞ்ஞானத் திமிரந்தேய வருண்ஞான
   விசுவாசவிளக்கமுன்னூற்
புல்லியசொற் சிறிதெடுத்து விருத்தப்பாவாய்ப்
   போர்ந்தவுரோமா புரியின் சங்கத்தேறத்
தோல்லுலகி லுயர்ந்தகுரு குலத்துமன்னன் றொந்
   தியோகெனுமுதலி முயற்சியாலே
தெல்லிநகர் வேளாளன் தோம்பிலிப்பு செந்தமிழிற்
   காப்பியமாய்ச் செய்தான்மன்னோ. (20)

பிரதம ஆரம்பச் சருக்கம், பரிசுத்தமாதாவின் திருவவதாரச் சருக்கம், மாமிச வயிக்கியச் சருக்கம், தேவப்பிரகாசச் சருக்கம், தரிசனைச் சருக்கம், ஞானஸ்நானச் சருக்கம், காட்சிச்சருக்கம் என எழு சருக்கங்களை கொண்ட உற்பத்திக் காண்டத்தினையும், வீரபிரதக்கணச்சருக்கம், பூங்காவனம்புகு சருக்கம், சதிமானச் சருக்கம், நிர்ப்பந்தச் சருக்கம், ஆஸ்தானச் சருக்கம், தீர்வைச் சருக்கம், வழிம்படு புலம்பற் சருக்கம், கொலைகளச் சருக்கம், பிரலாபச் சருக்கம், பிரேதபத்திச் சருக்கம், மகாப்பிரலாபச் சருக்கம் என பதினொரு சருக்கங்களை கொண்ட உபத்திரிய காண்டத்தினையும், பாதாளகமனச் சருக்கம், பிரத்தியட்சகாட்சிச் சருக்கம், ஆகாசகமனச் சருக்கம், தெய்வீகக்காட்சிச் சருக்கம், பொதுநடுத்தீர்வைச் சருக்கம் என ஐந்து சருக்கங்களைக் கொண்டு உத்தான காண்டமுமென மூன்று காண்டங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது இப்புராணம். பாயிரத்தில் 20 பாக்களும் நூலில் 1084 பாக்களும் கொண்டு மொத்தமாய் 1104 பாடல்களை கொண்டமைந்துள்ளது இந்நூல்.

தனது நகரான யாழ்ப்பாணத்தில் உள்ளோர் கிறீஸ்தவம் என்னும் ஞானப்பெருவாழ்வை பெறவேண்டி இந்நூலைச் செய்ததாய் இதன் நூற்பயனில் தோம் பிலிப்பு கூறுவார்.

……………………
சொற்பொருளால் விசுவாச விளக்கஞ் செய்தேன்
றென்னகராம் யாழ்ப்பாண விராச்சியத்தி
னற்றவருமெக்குலமுங் கிறீஸ்தோர்தானு ஞானமெனும்
பெருவாழ்வை நண்ணவென்றே

இந்நூலின் பல பிரதிகளையும் பரிசோதித்து ஜெகராவு முதலியார் என்பார் 1874ம் வருடம் சென்னையிலே பதிப்பித்தார்கள்.