Menu

சோதிட வினாவிடை (A catechism in astrology)

ஆசிரியர்: சி. அகிலேஸ்வரசர்மா
பதிப்பாசிரியர்: சி. இரகுநாதையர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1933

யாழ்ப்பாணத்து மண்டைதீவு பிள்ளையார் ஆலயத்தில் அர்ச்சகராகவும் அப்பிரதேசத்தில் தமிழ் சைவம் இரண்டையும் வளர்க்க பெருவிருப்போடு செயற்பட்டவருமான சிதம்பரநாதஐயர் அகிலேஸ்வரசர்மா என்பார் செய்த நூலே சோதிட வினாவிடை.

நூலாசிரியர் சோதிடபரிபாலினி என்னும் பத்திரிகையில் தொடராக எழுதிய சோதிட வினாவிடை எனும் பெயரில் தொடராக எழுதிய ஆக்கங்களை தொகுத்து 1933ம் வருடம் அதே பெயரில் நூலாக வெளியிட்டார்கள். இந்நூலின் பயன்பற்றி நூலாசிரியர்

புருஷர் தமக்கு பொருத்தமான மனைவியரை தேடிக்கொள்வதற்கும், நாரியர் தமக்கு வாய்ப்பான நாயகரை மணம்புரிதற்கும், ஆடவர் மகளிர் இருதிறத்தினரும் தத்தமக்கு பொருத்தம் உடையவராய்ப் பொருளீட்டுதற்கும் புத்தி கேட்பதற்குமுரிய பங்காளரை அந்தரங்க நட்பாளரைத் தேடி எடுப்பதற்கும், பிதா மாதா புத்திரர் சகோதரர் சுற்றத்தார் அன்னியர் அரசர் இவர்களில் யார் யார் தமக்கு அதிகம் பொருத்தம் உடையார் என்பதனை அறிந்து கொள்வதற்கும், பூமி வீடு வாகனம் கிராமம் தேசம் பிரயாணம் இவைகள் எவ்வாறு பொருத்தம் என்பதனை எளிதில் உணருதற்கும், தற்காலம் அரசினர் பகுதியிலோ பிற்பகுதியிலோ முயற்சி பொருந்தும் என்பதனையும் இன்னாருக்கு இன்ன பகுதியில் உத்தியோகம் ஊதியந் தரும் என்பதையும் முதலாளிகள் தமக்குப் பொருத்தமுடைய தொழிலாளிகளையும் தொழிலாளிகள் தமக்குப் பொருந்தும் முதலாளிகளையும் தேர்ந்து கொள்ளுவதற்கும் மற்றும் பல அரிய பெரிய விஷயங்களும்

என்று குறிப்பிடுகின்றார்.

நூலானது ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கின்ற இராசி கிரக நிலைகளை கொண்டு அவரவர் குணம் முதலியவற்றை எவ்வாறு கண்டுகொள்ளுவது என்று ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்கும் நடைபெறும் உரையாடலாக அமைந்திருக்கின்றது. இந்நூல் ஆரம்ப கணிதம், பன்னிரு பாவ பலன்கள் மற்றும் பொதுப்பலன் என மூன்று பெரும் பிரிவாயும் பன்னிரு பாவ பலன்களுள் முதலாம் பாவ பலன் முதல் பன்னிரண்டாம் பாவ பலன் வரை சிறுபிரிவாயும், பொதுப்பலன்களுள் கோசரபலன், ரோகபலன், சாந்தி பரிகாரம் மற்றும் கிரகப்பிரீதை என சிறு பிரிவுகளுடனும் அமைந்திருக்கின்றது.

இந்நூலின் புதுக்கிய இரண்டாம் பதிப்பு 1942இலும் பின் நூலாசிரியரின் மறைவின் பின் மூன்றாம் பதிப்பு 1956இலும் வெளிவந்ததுண்டு.