Menu

சைவப்பிரகாசனம்

ஆசிரியர்: சங்கர பண்டிதர்
பதிப்பாசிரியர்: சிவப்பிரகாச பண்டிதர்

டமொழியிலே உள்ள வேத சிவாகமங்கள் கருமகாண்டம் ஞானகாண்டம் என இருவகை யுடையனவாம். இவற்றில் ஞானகாண்டத்தினை தமிழிலே சிவஞானபோதம், சிவஞான சித்தியார் போன்ற சைவசித்தாந்த நூல்கள் சுருக்கியும் விரித்தும் கூறியுள்ளன. அந்நூல்கள் கற்றோர்க்கே பயன்படுவனவாயின.

யாழ்ப்பாணத்து நீர்வேலியிலிருந்த வடமொழி தென்மொழி நிலைகண்ட சங்கர பண்டிதர் அவரகள் இஞ் ஞானகாண்டத்தினை சுருக்கி வசனரூபமாக கற்றோர்க்கும் மற்றோர்க்கும் பயன்படுவகையில் செய்த நூலே சைவப்பிரகாசனம் எனும் இந்நூலாம். இதனை சைவ உதயபானு பத்திராதிபர் சு. சரவணமுத்துப்பிள்ளை அவரகள் சொன்ன சிறப்புக் கவியாலறியலாம்.

கற்றார் புகழ்சைவ சித்தாந்தப் பாலின் கடல்கடைந்து
மற்றார் நினைக்கருஞ் சைவப்ர காசன மாவமிழ்தை
நற்றா ரணிச்சைவ நற்புல வோர்க்கு நயந்தளித்தான்
வற்றா வறிவுடைச் சங்கர பண்டித மாதவனே.

இந்நூற்பயன் பற்றி இந்நூலின் முகவுரையிலே சிவப்பிரகாச பண்டிதர் அவர்கள் பின்வருமாறு சொல்லுவார்கள்.

இதனைக் கற்றுணர்ந்தவர்கள், சிவஞானபோதம் முதலிய திவ்விய நூல்களை ஓதியுணர்தற்கு அதிகாரிகளாவர்; ஆதலின் முதனூற்பொருளுணர்ந்து கட்டறுத்து வீடுபெறுதலே இதின் பயன்.

இலக்கண இயல்பு, இலக்கண விபாகம், பிரமாண இயல்பு, பிரமாண விபாகம், பிரத்தியக்ஷம், அனுமானம், அனுமானப்போலி, ஆகமம், சுருதி இலக்கணம், சுருதிவிபாகம், சுருதிப்பிரமாணம், சமய இலக்கணம், சமய பதார்த்தம், சமய பதார்த்தப் பிரமாணம், பதி, பசு, பாசம், பதிகிருத்தியம், பசுகருமம், பசுபோகம், முந்திசாதனம், முத்தி என்பன இந்நூலிலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதிற் பசு பற்றி கீழே காணுங்கள்.

பசு.

காரியமாகிய உலகம் அசேதனமாதலாலே தனக்கும், வரம்பிலின்பமுடையனாதலாற் பதிக்கும், குடம் முதலியனபோலப் பரிணாமமுடைமையானும், அனுபோகிக்கப்படுதலானுஞ் சடமேயாதலிற் சரீரத்திற்கு பயன்படுவதன்று; விசேட கருத்தாவாகிய பதியினாற் செயயப்பட்டமையிற் பயனற்றதுமன்று: ஆதலிற் பிறர்க்குப் பயன்படுவதே எனபது பாரிசேடப் பிரமாண சித்தம்.

அப்பிறராவர் – “நான் இருக்கின்றேன் நான் உணர்கின்றேன்” என்றற்றொடக்கத்து வழக்கங்களிலே தனித்தனியே “நான் நான்” எனுஞ் சொற்களுக்கு விடயங்களாயுள்ள ஆன்மாக்களே.

அவ்வான்மாக்கள் அநாதி பாசபந்தமுடைமையிற் பசுக்களென்று சொல்லப்படுவர். [ பச் – பந்தித்தல், உ – செயப்படுபொருள் விகுதி. ]

அப்பசுக்கள் விஞ்ஞானாகலர், பிரளாயாகலர், சகலர் என்னும் மூவகையினர். அவர்களுள், விஞ்ஞானாகலர் ஆணவமலமாத்திரம் உடையவர்; பிரளயாகலர் அதனோடு கருமமலமும் உடையவர்; சகலர் அவற்றோடு மாயாமலமும் உடையவர்.

அப்பசுக்களுட் கரும நாசத்தால் அதிபக்குவமலராயினோர் சமஸ்த மாசத்தின் நீங்கிப்பரமுத்தராயிருப்பர். பக்குவமலராயினோர் பாசத்தின் நீங்கிப், பாசவாசனை மாத்திரம் நீங்காமல் அபரமுத்தராய்ப், பதியின் ஆஞ்ஞையினால் அதிகாரகிருத்தியம் செய்துகொண்டிருப்பர்.

அறப்பக்குவரும், அபக்குவரும் ஸம்ஸாரிகளாயிருந்து தத்தமக்கியன்ற தொழிலியற்றுவர்.

இங்ஙனமே அகண்ட பூரண நித்திய வியாபக சச்சிதானந்த ரூபராய், அமூர்த்தராய், அநாதியாகவே பாசத்தால் மறைக்கப்பட்ட சிற்சத்தியுடையவராய், மலசம்பந்தத்தால் அறிவிலாராய், மாயாசம்பந்தத்தாற் சிற்றறிவராய்ப், பாச முத்தியின் முற்றறிவராதற்கு யோக்கியராய் உள்ள ஆன்மாக்களே பசுக்கள் என்பது.

இந்நூலுக்கு ஆறுமுக நாவலரவர்களுடைய மருகரும் மாணாக்கருமாகிய வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், பத்திராதிபர் சு. சரவணமுத்துப்பிள்ளை, கோப்பாய் சபாபதி நாவலர், ஆவரங்கால் சி. குமாரவேற்செட்டியார் ஆகியோர் சிறப்புக் கவிகள் சொல்லியிருக்கின்றார்கள்.

இந்நூலை சங்கர பண்டிதர் அவர்களுடைய மகனும் ஞானபாநு அச்சுவேலி ச. குமாரசுவாமிக் குருக்களுடைய குருவுமாகிய சிவப்பிரகாச பண்டிதர் அவர்கள் அச்சிடுவித்து வெளியிட்டார்கள்.