சைவபூஷண சந்திரிகை

ஆசிரியர்: நா. கதிரவேற்பிள்ளை
பதிப்பாசிரியர்: ஶ்ரீ. வே. மாசிலாமணிப்பிள்ளை
இரண்டாம் பதிப்பு 1902 இல் வெளிவந்தது. முதற்பதிப்பு 1897 இற்கு முன்னர் வந்திருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இரண்டாம் பதிப்பினை பதிப்பித்தோர் - கு. தங்கவேற்செட்டியார், மா. நமசிவாயம்பிள்ளை

ரணி நகர் சமஸ்தான வித்துவானாயிருந்த “மாயாவாத தும்சகோளரி” யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் இயற்றப்பட்டு, பரம ஐசுவரியங்களான விபூதி ருத்திராக்கங்களின் இலக்கணங்களையெல்லாம் இனிது விளங்கத்தெரிவிக்கும் நூலே சைவபூஷண சந்திரிகை என்கின்ற இந்நூல்.

செந்தமிழ்நன் மாதே சிவனொளிருஞ் சித்தாந்த
வந்தமிலா மெய்ந்நிலையே வாறுமுக நாவலனா
மெந்தைநுமைப் போற்றுசெயற் கேற்பவே யிந்நூலைத்
தந்தனன்கொண் டுய்த்திரவன் சார்.

என்று செந்தமிழையும் சைவசித்தாந்தத்தையும் வளர்த்து பரிபாலித்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்களுக்கு இந்நூலை அர்பணஞ் செய்திருக்கின்றார் கதிரவேற்பிள்ளையவர்கள்.

இப்பூலோகத்திலே இருக்கின்ற மக்கள், சூடவும், கட்டவும், தொடுக்கவும், முடிக்கவும், கவிக்கவும் கூடிய இலௌகிக பூஷணங்களான, பொன், வெள்ளி, இரத்தினங்களாலே செய்யப்பட்ட பூஷணங்களை அணிகின்றனர். இவற்றினாலே வருகின்ற நன்மைகள் மிகவும் அற்பமானவை. தீமையோ அளவிறந்தன.

முற்றறிவும் முற்றுத் தொழிலுமுடைய பரமாப்த பதியாகிய சிவபெருமானாலே திருவாய்மலர்ந் தருளப்பட்ட வேதாகம சம்பந்தமுள்ள வைதிகபூசணமாய், தன்னையணிந்தார்க்கு எஞ்ஞான்றும் நன்மையியே பயந்து தீமையையொழிப்பதாய், இம்மைப்பயனுடைன் யாவரானும் அடைதற்கரிய மறுமைப்பயனாகிய அத்துவித முத்திப் பெரும்பேற்றையு மளிப்பதாய் விளங்கும் ஓர்பூஷணம் விபூதி உருத்திராக்கமாம். மிகவிசேடம் வாய்ந்த இப்பூசணங்களை அணிய வேண்டிய முறைப்படியணிந்தால் மிக்க பயன் விளையும்.

மறுமைப் பயனும் அளிக்கவல்ல இப்பூஷணங்களின் இலக்கணங்கள், மான்மியங்கள், பயன்கள் எல்லாம் முதநூல்கள், வழிநூல்கள், பக்கநூல்கள் என எல்லாவிடத்தும் ஆங்காங்கு பேசப்பட்டு வந்துள்ளன. இவற்றையெல்லாம் பற்பலநூல்களிடத்துமிருந்து தொகுத்து, மக்கள் அவற்றை ஒருசேர அறிந்து ஒழுகுதற்கு இலகுவாய் செய்யப்பட்டதே இந்நூல்.

இந்நூலிற்கு அத்தியாச்சிரம பாலசரஸ்வதி ஞானானந்த சுவாமிகளும், யாழ்ப்பாணத்து நல்லூர் மகாவித்தவசிரோமணி க. சதாசிவப்பிள்ளை அவர்களும் சிறப்புப் பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள்.