Menu

சைவசித்தாந்த சங்கிரகம்

ஆசிரியர்: வ. கார்த்திகேயப்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1903

செந்தமிழ் மொழியிலே மெய்கண்ட சாத்திரங்களாம் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது, உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், போற்றிப் பஃறொடை, வினாவெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய பதினான்கும் ஆகமங்கள் போன்றும், அவற்றிற்கு புடைநூலாக தசகாரிய முதலிய பண்டார சாத்திரங்கள் பதினான்கும் உபாகமங்கள் போன்றும் அமைந்துள்ளன. இவை அனைத்துமே செய்யுள் நடையிலும் சம்பு நடையிலும் அமைந்தவை.

இந்நூல்களுக்கு உரையெழுதிய சிவஞானயோகியார், யாழ்ப்பாணம் ஞானப்பிரகாச சுவாமிகள், சிவாக்கிர யோகிகள், சுப்பிரமணிய தேசிகர், மறைஞான சம்பந்தர், நிரம்ப வழகிய தேசிகர், பாண்டிப்பெருமாள் பிள்ளை ஆகிய பேரரறிவாளர்களின் உரைகளும் நூணுகி ஆராய்ந்து கற்போருக்கே பயன்தருவதாய் உள்ளன.

சைவசித்தாந்த சங்கிரகம் என்கின்ற இந்நூல் மேற்குறிப்பிட்ட சைவ சித்தாந்தங்களின் சாரத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதனை சிறப்புப் பாயிரத்தில் வெண்பாப்புலி வேலுசாமிப்பிள்ளை அவர்கள்

திகழ்தரு சைவசித் தாந்த மதனை தெளிவுற வெவருநன் குணர்ந்தே
யிகழ்தரு பலபேரி சைத்திடு சமயத் திழிதரா தொருநன்னூல்

என்கிறார்.

இந்நூலைப்பற்றி இதன் உபோற்காத்தில் இதனை பரிசோதித்த கதிரவேற்பிள்ளை அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.

சித்தாந்த நூல்கள் யாவும் முப்பொருளாதி யியல்களை யெல்லாம் பொது நீக்கிச் சிறப்பியலிற் றெரித்தன வாயினும், பிரத்தியக்கம், அநுமானம், ஆகமம், சம்பவம், ஐதிகம், பாரிசேட முதலிய அளவை வாயிலாற் கூரிய மதிகொண் டுணரும் ஆற்றில், “அந்த மாதி யென்மனார் புலவர்” என்றாற்போல, சங்கார வுற்பத்தி வரன்முறையிற் சுருங்கச் சொல்லல் என்னும் அழகு பற்றிச் சுருங்க வகுத்தும், “நித்தமா யருவா யேக நிலைதாய்” என்று உய்த்துணர வைத்தல் என்னும் உத்திக் கேற்ப, நித்திய மென அநாதி யென்னும் பொருள்படப் பேசியும், அங்ஙனே யேனையவற்றையும் ஆங்காங்கு மறைத்துக் கிளந்தும் போகலால், அவை கொண்டு, பொருள் ஒன்றோ? இரண்டோ, மூன்றோ, நான்கோ அவையினும் மேலவோ? ஒன்று மிரண்டுமோ? பலவோ? ஒன்றிரண்டற்றவோ? உள்ளதோ, இல்லதோ, உளதிலதோ? இவையெலா மற்ற பாழாஞ் சூனியமோ? எனவும் அநாதியோ? அவாநதராநாதியோ? ஆதியோ? அவாந்தராதியோ? அருவமோ? உருவமோ? அருவுருவமோ? அவை யற்றவோ? குண குணியோ? காரண காரியமோ? விகார அவிகாரமோ? விம்பப் பிரதிவிம்பமோ? அம்சாம்சிகமோ? பரிணாமமோ? விருத்தியோ? ஆரம்பமோ? விவரத்தமோ எனவுமின்னனவாய பற்பல சந்தேகங்கள் கொண்டு, இருட்பெருங் கடலில் யாமத்தே ஆர்ப்பரித் தெழுந்து குமுறி மோதா நின்ற பெருங் காற்றின் வழிப்பட்டு விம்மும் மரக்கலமாக்கள் போல, வருந்தும் அன்பாளர்த மையப்பாடுக ளெல்லா மொழிதற்கு இந்நூல் இன்றியமையாக் குரவன்போ லினிதொளிரு மென்க.

இந்நூல் திரிபதார்த்த உண்மையை பதார்த்த நிச்சயம் எனுமதிகாரத்தாலும், பதி ஆன்மா ஆணவம் கன்மம் மாமாயை அசுத்தமாயை ஆகிய ஆறுபொருள்களினதும் இலக்கணத்தை முறையே பதியிலக்கணம், பசு இலக்கணம், மல இலக்கணம், கன்ம இலக்கணம், மாமாயை யிலக்கணம் அசுத்தமாயை இலக்கணம் எனும் அதிகாரங்களாலும், சிவஞானசாதனத்தையும் முக்தியையும் முறையே சிவ ஞான சாதன இலக்கணம், முத்தியிலக்கயம் என்னும் அதிகாரங்களாலும் கூறி நிற்கின்றது.

சிவஞானபோதம், சிவஞானசித்தியார், கந்தபுராணம், சூதசங்கிதை போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் இந்நூலெங்கணும் எடுத்தாளப்பட்டுள்ளன.

பதியிலக்கணத்திலே நவபேதங்களின் வேற்றுமையும் சத்திகளின் இலக்கணங்களும் விளக்கப்படுகின்றன. ஆன்ம இலக்கணத்தில் ஆன்மாவைப்பற்றிய பலதிறப்பட்ட கொள்கைகள் காட்டப்படுகின்றன. மாயையிலக்கணத்திலே தத்துவங்களின் தோற்றமும் தன்மையும் பயனும் சொல்லப்படுகின்றன.

இந்நூல் யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த போதனாசிரியர் கார்த்திகேயப்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டு, ஆரணி நகர் சமஸ்தான வித்துவானாயிருந்த நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் பரிசோதிக்கப்பட்டு 1903ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் சுருங்கிய பதிப்பொன்றை 1908ம் வருடம் கார்த்திகேயப்பிள்ளை அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார்கள். ஈழத்து புலவர்கள் மீது பேரன்பு கொண்ட திருமயிலை ஜம்புலிங்கப்பிள்ளை அவர்கள் 1933ம் வருடம் இந்நூலின் மூன்றாம் பதிப்பை பதிப்பித்து வெளியிட்டார்கள். இப்பதிப்பிற்கு வண்ணார்பண்ணை சுவாமிநாத பண்டிதர் அவர்கள் சிறப்புப்பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள்.