Menu

சிவராத்திரி புராணம்

ஆசிரியர்: வரதபண்டிதர்
பதிப்பாசிரியர்: ச. வயித்தியலிங்கபிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1881

சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூலாகும். நைமியசாரணியத்திலுறையும் மாதவர் வேண்டச் சூத முனிவர் கூறுவதாக புராணம் இயங்குகின்றது. சிவராத்திரி விரதத்தின் தோற்றத்தையும், அதனை தோற்றிடும் வகையினையும் கூறிய சூத முனிவர், தொடர்ந்து சிவராத்திரி விரதத்தாற் பலனடைந்த சுகுமாரன், அங்குலன், சவுமினி, கன்மாடபாதன், விபரிசன், குபேரன், சாலிகோத்திரன் ஆகியோருடைய கதைகளை விரிந்துரைக்கும் வகையில் இந்நூல் செய்யப்பட்டுள்ளது. காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்துப் பாக்கள் இருபதினையும், பாயிரச்செய்யுள் மூன்றினையும், சிவராத்திரி யுற்பவச் சருக்கம் முதலாகச் சாலி கோத்திரச் சருக்க மீறாகவுள்ள ஒன்பது சருக்கங்களிலுமுள்ள 691 பாடல்களையுங் கொண்டு விளங்கும் இச்சிவராத்திரி புராணம்.

இந்நூலின் தற்சிறப்புப் பாயிரத்தின்படி, சிதம்பரத்திலுள்ள அறிஞர் பலரின் வேண்டுகொளை நிறைவேற்றும் பொருட்டு இது செய்யப்பட்டதெனத் தெரிகின்றது. இதற்கு முன்னரும் பலர் சிவராத்திரி புராணம் செய்திருந்த போதும், “ஆகம நூன்மொழி வழாம” லிச் சரிதை யமையவேண்டுமென்ற நோக்குடன் இது செய்யப்பட்டதாக இதன் ஆசிரியர் கூறுவார்.

கந்தமலர்ப் பொழில்புடைசூழ் தில்லைவனத் தறிஞர்திருக் கடைக்க ணோக்கி
முந்தவுரைத் தனர்பலரு மாயினுநீ யாகமநூன் மொழிவ ழாமற்
பந்தமறுத் திடுசிவராத் திரிவிரத சரிதைதனைப் பாடு கென்னச்
செந்தமிழி னுயர்விருத்தப் பாவதனாற் றிரட்டியொன்றாச் செப்ப லுற்றேன்.

இப்புராணத்திற்கு சின்னத்தம்பிப் புலவர் தந்த நூற்சிறப்புப் பாயிரத்திலிருந்து, இதனை இயற்றினோன் வரதபண்டிதனென்று தெரிகின்றது.

மைத்தவிடப் பணிப்பணியான் வராசனமுஞ் சராசனமு மலையாக் கொண்ட
சித்தனுயர் சிவநிசிமான் மியமதனைச் செந்தமிழாற் றெரித்தல் செய்தா
னத்தகைய பாரத்து வாசகோத் திரனரங்க னருளு மைந்தன்
சத்தபுரி களிற்காசி நகர்வரத பண்டிதன்முத் தமிழ்வல் லோனே.

இவ்வாசிரியன் பெயர் வரதராசன் என்றும் வழங்கும் என்பதை மயில்வாகனப்புலவர் தந்த பாயிரச்செய்யுள் பகரும்.

பரதராசனுய ரசலராசன்மகள் பங்கனண்புதரு பண்புசேர்
விரதராசசிவ நிசியினீளசரிதை மிகவிளங்கிட விளம்பினான்
கரதராசனைய மொழியரங்கனருள் கருணைமாரிநிகர் பருணிதன்
வரதராசன்மறை வாணராசன்மிகு மதுரவாசுகவி ராசனே.

இவர் தந்தை பெயர் அரங்கநாதன் என்பது இந்நூலின் சிறப்புப் பாயிரத்தாலும், வரதபண்டிதர் செய்த பிள்ளையார்கதைச் சிறப்புப் பாயிரச் செய்யுளால் அறியலாம்.

இந்நூலை ச. வயித்தியலிங்கம்பிள்ளை முதலில் 1881ம் ஆண்டிலும், பின்னர் 1893ம் ஆண்டிலும் அச்சிற் பதிப்பித்து வெளியிட்டார். உடுப்பிட்டி ம. குமாரசூரியப்பிள்ளை தனது பதவுரையுடன் இதனை 1913ம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினார்.