யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் வேதாந்தத் தெளிவுண்மைப் பொருளை உணர்த்தும் சைவ சித்தாந்த சமயத்தினூடு சிவபிரான் திருவடியை இப்பூவிலகிலுள்ளோர் இலகுவில் உணர்ந்து ஈடறே எண்ணி இந்நூலை படைத்துள்ளார்கள்.
இதனையே சிறப்புப்பாயிரம் பின்வருமாறு கூறுகிறது.
உலகனைத்தும்படைத்தளிக்குமொருமுதல்வன்றனையுயிர்களுணர்ந்தீடேற
இலகுசிவசேத்திராலயமகோற்சவமெனுநூலினைதமைத்து
நிலவவரையாவெழுத்திற்பதித்துநெடுந்தயையினோடுமெவர்க்குமீந்தா
னலகில்புகழவன்புரிந்தபேருதவிக்கிணையுளதோவவனிமீதே
இந்நூல் சிவ விளக்கம், சேத்திராலய விளக்கம் மற்றும் மகோற்சவ விளக்கம் என்கின்ற மூன்று பாகங்களாக அமைந்துள்ளது.
சிவ விளக்கம் சிவப்பேறடைவதற்கு சைவ சித்தாந்தமே அடிப்படையானது என்பதை விளக்கும். இதனை பிள்ளையவர்கள்,
அருமணிக் கடல் சூழ்ந்த நிலவுலகத்தில் கிறீஸ்து, மகமதியம், யூதம், உலோகாயதம், சௌத்திராந்திகம், யோகசாரம், மாத்மீகம்,வைபாடிகம், ஆருகதம், ஆசீவகம், பாட்டம், பிரபாகரம், சூரியவாதம், மிச்சிரவாதம், கருமவாதம், சூனியவாதம், தார்க்கீகம், மீமாஞ்சகம், ஏகான்மவாதம், சத்தப்பிரமவாதம், மாற்கரியவாதம், கிரீடாப்பிரமவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம், சாத்தேயம், காபாலிகம், துவிதவாதம், சிவசமவாதம், சைவம், பாசுபதம், மகாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், பாடாணவாதம், சங்கிராந்தவாதம், அவிகாரவாதம், பரிணாமவாதம், சுத்தசைவம், பேதவாதசைவம் முதலிய அநேக சமயங்கள் இருக்கின்றன.
இவைகள் எல்லாவற்றையுங் கடந்து சிரம்போல நின்றொளிர்வது, அகச்சமயம் ஆறுக்கும் விரோதமின்றி யவற்றின் முடிவாய் நிற்பதும், வேதாந்தத் தெளிவுண்மைப் பொருளை உணர்த்துவதும், வைதிகசைவ சுத்தாத்துவித சைவ சித்தாந்த சமயமேயாம்.
சேத்திராலய விளக்கம் அகத்தும் புறத்தும் சிவ சேத்திரங்களில் வழிபடுதல் வீடுபேறடைய அவசியமாம் என விளக்கும். இதனை கதிரவேற்பிள்ளை அவர்கள்,
வீடடைய விரும்பினோர் புறத்தும் அகத்தும் சிவபெருமானை வழிபடல் அத்தியாவசியகமேயாம். சிவபெருமான் புறத்தே சிவசேத்திரங்களிலுள்ள ஆலயங்களில் இருக்கும் சிவலிங்க முதலிய திருமூர்த்தங்களையும், மெய்யடியாரது திருவேடங்களையும், ஆதாரமாக கொண்டு நின்றும்,அகத்தே உயிர் இடமாகக்கொண்டு நின்றும், இவ்வுலகாராற் செய்யப்படும் வழிபாட்டை யேற்றருள் செய்வார்.
மகோற்சவ விளக்கம் மகோற்சவங்களின் உண்மைகளை விளக்கும். இதனை கதிரைவேற்பிள்ளை அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
ஆலயங்கள் நித்தியம் நித்தியாங்கம், நைமித்திகம் நைமித்திகாங்கம், காமிகம் , காமிகம் காமிகாங்கம் என்னும் ஒன்பது உறுப்புகளானும் நடத்தப்படும். அவைகளுள், நைமித்திகத்துள் ஒன்றாய் விளங்கும் மகோற்சவங்களையும்,அவைகளின் உண்மைகளையும் முற்றுமுணர்த்தாது விரிவஞ்சிவிடுத்து, அவைகளுட் சிலவற்றி னுண்மைகளை மாத்திரம் பிரமாணோவம வாயிலாகத் தெளிய ஒரு சிறிதுரைப்பான் புகுந்து முதலில் அவற்றின் கரண வுண்மையை காட்டுவாம்.
இந்நூலுக்கு புரசை சபாபதி முதலியாருடைய மாணாக்கர்கள், சென்னை கிறீத்தவக் கல்லூரி தமிழ்ப்பிரதம பண்டிதர் சின்னச்சாமிப்பிள்ளை அவர்களும், வித்துவான் சண்முகம்பிள்ளை அவர்களும் சிறப்புப் பாயிரம் சொல்லியிருக்கிறார்கள்.