சிவகாமியம்மை துதி

ஆசிரியர்: சின்னத்தம்பிப் புலவர்
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

சிவகாமியம்மை துதி பத்துச் செய்யுள் கொண்ட பதிகமாகும். செய்யுள் ஒவ்வொன்றும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாயமைந்துள்ளன. இணுவிலிலே எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது இப்பதிகம் பாடப்பட்டதாகத் தெரிகின்றது. இதனைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் என்று கூறுவாருமுளர். இப்பாடல்களிற் பிள்ளைத்தமிழின் அமைப்பெதுவும் இல்லாமையால் அது பொருந்தாது என்பது தெளிவு. இப்பதிகத்தை இணுவைச் சின்னத்தம்பிப்புலவரியற்றினாரென்பர். இவரியற்றியதாக கருதப்படும் கயிலாயநாதர் தோத்திரம் பதினொரு விருத்தப் பாக்களை கொண்டுள்ளது. இதுவும் இணுவிலிற் கோயில் கொண்டுள்ள கயிலாயநாதர் என்ற இளந்தாரிமீது பாடப்பட்டதாம். இப் புலவர் ஒரு சமயம் பகைவரால் மறியலில் இருத்தப்பட்டாரெனத் தெரிகின்றது. அப்பொழுது சிறைச்சாலையிலிருந்து வீடு பெறப்பாடிய ‘சிவகாமியம்மைபதிகம்” கொச்சகக் கலிப்பாவால் அமைந்துள்ளது. இதன் 7வது செய்யுளாய

துப்பூட்டு மென்றெனது துன்னார் சிறைப்படுத்தும்
அப்பூட்டு தீய அரியசிறை வீட்டிருக்கும்
இப்பூட்டு நிர்ப்பூட்டா யென்சிறையை நீக்கியருள்
செப்பூட்டும் பொற்றாட் சிவகாம சுந்தரியே

என்ற கொச்சகத்தைப் பாடியதும் சிறைக் கதவு திறக்கப்பட்டதென இப்பதிக ஏட்டுப் பிரதிகளிற் குறிக்கப்பட்டிருக்கக் காணலாம். இச்சம்பவத்துக்குச் சான்று பகர்வது போல இப்பதிகத்தின் ஒன்பதாவது செய்யுளின் இறுதியடியாய

துன்னிச் சிறைதீர்த்த சிவகாம சுந்தரியே

என்ப தமைந்திருத்தல் கவனிக்கத் தக்கதே.