சிதம்பர மான்மியம்

ஆசிரியர்: ஆறுமுக நாவலர்
பதிப்பாசிரியர்: பொன்னுசுவாமி

சிவபெருமான் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையாக வைத்துக் கூறப்படும் சிதம்பரம் மிகத் தொன்மையும் தெய்வீகத்தன்மையும் பொருந்தியது. தரிசித்தால் முத்தி சித்திக்கும் தலமாக விளங்கும் பெருமை வாய்ந்தது. இத்தலம் மூவர் தேவாரத் திருப்பதிகங்களையும் கொண்டுள்ளது. மாணிக்கவாசகராலும், திருமாளிகைத்தேவர், சேந்தனார் ஆகிய திருவிசைப்பா ஆசிரியர்களாலும் பாடப்பெற்றது. குமரகுருபர சுவாமிகள் இத்திருத்தலத்தின் மீது பல பிரபந்தங்கள் பாடியருளியுள்ளார். இத்தலத்திலே வியாக்கிரமபாதர், பதஞ்சலியார், உபமன்யு முனிவர், சிவாலய முனிவர், திருமூலர், திருநீலகண்ட நாயனார் முதலிய சிவனடியார்களும் இராசராச சோழன் முதலான சோழமன்னர்களும் பூசித்து பேறுபெற்றுள்ளனர்.

இத்தலத்தின் பெருமைகளை சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணையந்தாதி, பட்டினத்தாரின் கோயில் நான்மணிமாலை, நம்பியாண்டார் நம்பிகளின் கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம், கோயிற்புராணம், திருவாதவூரடிகள் புராணம், சிதம்பர புராணம், புலியூர்ப் புராணம், சபாநாத புராணம், தில்லைவன மான்மியம், சிதம்பர விலாசம், சிதம்பர இரகசியம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம், கல்லாடம் முதலியவற்றாலும், தில்லைக்கலம்பகம், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட்கோவை, தில்லையுலா, புலியூர் வெண்பா, சிதம்பர வெண்பா முதலிய சிறுபிரபந்தங்களாலும் நன்கு அறியலாம்.

இத்துணை சிறப்புவாய்ந்த இத்திருத்தலத்தின் பேரில், சிதம்பரத்திலே சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவிச் சைவபரிபாலனஞ் செய்த யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள் சிதம்பரமான்மியம் எனும் நூலினைச் சுருக்கமாகச் செய்திருக்கின்றார்கள்.

சிதம்பர தலமகிமை கூறிநிற்கும் சிதம்பரமகிமைச்சருக்கம், வியாக்கிரபாத முனிவர் பற்றி கூறிநிற்கும் வியாக்கிரபாதச்சருக்கம், பதஞ்சலிமுனிவர் பற்றிக்கூறும் பதஞ்சலிச்சருக்கம், நடராசப்பெருமானின் திருநிருத்தம் சொல்லும் நடராசச்சருக்கம், மனுவின் மகன் இரணியவன்மன் புராணஞ் சொல்லும் இரணியவன்மச்சருக்கம், சிதம்பரத்திலே நடைபெறும் பூசை திருவிழாக்கள் பற்றிக் கூறும் திருவிழாச்சருக்கம், சிதம்பரத்திலே அமைந்திருக்கும் சிவகங்கை, குய்யதீர்த்தம், புலிமடு, வியாக்கிரபாததீர்த்தம், அனந்ததீர்த்தம், நாகசேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, திருப்பாற்கடல், பரமானந்தகூபம் ஆகிய தீர்த்தங்கள் பற்றிக்கூறும் தீர்த்தச்சருக்கம், சிதம்பர தரிசனம் செய்ய விரும்புவோர் செய்யவேண்டிய நியமங்கள் பற்றிக் கூறும் நியமச்சருக்கம், சிவத்துரோகங்கள் எவையென்று கூறும் சிவத்துரோகச்சருக்கம் ஆகியவற்றை கொண்டு அமைந்திருக்கின்றது இந்நூல்.

இந்நூலை சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் பொன்னுசுவாமி அவர்கள் சென்னையில் பதிப்பித்து வெளியிட்டார்கள்.