சிதம்பர சபாநாத புராணம்

ஆசிரியர்: சபாபதி நாவலர்
பதிப்பாசிரியர்: இராமசாமிப்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1885

யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் தென்னிந்தியாவின் திருவாடுதுறை யாதீனத்தின் வித்துவானாக இருந்த காலத்தில், சிதம்பர மான்மியம் ஐந்தினில் ஒன்றான ஏமசபாநாதமான்மியத்தினை தமிழிலே மொழிபெயர்த்து, மூர்த்தி தலம் தீர்த்த வரலாறு உணர்த்த யாத்ததே சிதம்பர சபாநாத புராணமாகும். இதனை பின்வரும் சிறப்புப்பாயிரத்தால் உணரலாம்.

இருந்துதியுற் றொளிர்வடநூ லேமசபாநாதமான் மியத்தைவாணர்
திருந்துசிதம்பர சபாநாதபுராணப்பேரிற் றமிழாற்செய்தான்
பெருந்துறைசைச் சிவஞானயோகிகள் பொன்னடிக்கமல முளத்திற்பேணி
யருந்தகைநற் கலைகடெளி சபாபதிநாவலன்மாண பாரறிஞர்கோனே.

திருநாட்டுப்படலம், திருநகரப்படலம், நைமிசைப்படலம், புராணவரலாற்றுப்படலம், பிச்சாடனப்படலம், தேவதாருவனப்படலம், அனந்தப்படலம், புண்டரீகப்படலம், வியாக்ரபாப்படலம், திருநடனப்படலம், ஏமவன்மப்படலம், தீர்த்தவிசேடப்படலம், யாத்திரோற்சவப்படலம் என 13 படலங்களாய் 893 செய்யுட்களுடன் இந்நூல் அமைந்திருக்கின்றது.

திருவாடுதுறை ஆதீனத்து இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள் மற்றும் சபாபதி நாவலரின் மாணாக்கர் சிதம்பரம் சோமசுந்தர முதலியார் ஆகியோர் இந்நூலுக்கு சிறப்புப் பாயிரங்கள் செய்துள்ளனர்.