Menu

சற்குருமணிமாலை

ஆசிரியர்: அம்பலவாண நாவலர்
எழுதப்பட்ட வருடம்: 1896
பதிப்பிக்கப்பட்ட வருடம் :செல்லப்பச் செட்டியார்

சித்தன்கேணி அம்பலவாண நாவலர் அவர்கள் ஆறுமுக நாவலர் மீது பேரன்பு கொண்டவர், அவரை தனது மானசீக குருவாக கொண்டவர். ஆறுமுக நாவலர் வழியில் பிரமச்சாரிய விரதம் பூண்டு தமிழையும் சைவத்தையும் வளர்க்க தன் வாழ்நாளை, தாமீட்டிய பொருளனைத்தையும் செலவிட்டவர். ஆறுமுக நாவலர் வழியில் ஈழத்திலும் தென்னிந்தியாவிலும் பிரசங்கங்களை ஆற்றியதோடு நின்றுவிடாது மிசனரிமாரின் பாடசாலைகளுக்கு போட்டியாக சைவப்பாடசாலைகளை அமைக்க ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்து புரவலர்களுக்கு வைத்த வேண்டுகொளைக் கேட்டு வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை தாபித்து நடாத்தியவர்.

அம்பலவாண நாவலர் அவர்கள் தனது மானசீக குருவான நாவலர் பெருமான் மீது செய்த பிரபந்தமே சற்குருமணிமாலை எனும் இந்நூலாம்.

பூவலயஞ்செய்த மாதவமோரு ருப்போந்து வந்த
நாவலசற் குருமாமணி மாலைநயந் தியலப்
பாவலநம்பிக் கருண்மாமுறை யுண்மை பாலித்தநங்
காவலநாரையிற் பொல்லார் கழலிணை காப்பதுவே.

எனும் காப்புச் செய்யுளுடன் ஆரம்பிக்கும் இந்நூல் 130 விருத்தங்களைக் கொண்டு ஆறுமுக நாவலர் பெருமை கூறி நிற்கின்றது. இந்நூலின் இறுதியில் இந்நூற்பயன் இரண்டு பாடல்களில் கூறப்பட்டுள்ளது. பாடல்கள் ஒவ்வொன்றின் ஈற்றடியும்

எம் மாறு முகநா வலசற் குருமணியே

என கூறி நிற்கும். தன்னை ஆட்கொள்வதற்காகவே நாவலர் பெருமான் உருக்கொண்டுவந்தார் என்று நூலின் முதலிரண்டு பாடல்களும் சொல்லும்.

திருவேய ருட்செல்வ மேசிவமே சிவசிற் சுகமே
முருவேம ருவின் மலரேமலர் க்கற்பக வனமே
கருவேயி ரித்தெமை யாண்டிட நீயுருக்கண் டனையே
குருவேயெம் மாறு முகநா வலசற் குருமணியே

நாயேனை யாளவொர் மானுடக் கோல நயந்துபெற்ற
தாயே யெனைநனி பாராட்டி யன்பிற் றழீஇயெடுத்து
மாயா வறிவமு தூட்டினை யேயின்ப வாழ்வுறுவான்
கூயாளெம் மாறு முகநா வலசற் குருமணியே.

நூலின் இறுதிப்பாடல் அவையடக்கமாய் அமைந்திருக்கிறது.

புண்ணிய நின்னருண் மேன்மையெங்கே யென்றன் புன்மையெங்கே
பண்ணிய லுந்துதிமாலை யென்றோர் குற்றம் பண்ணினனா
லண்ணனின் சேயன்பினால மைத்தேன் பொறுத்தாண்ட ருள்சாட்
குண்ணிய வாறு முகநா வலசற் குருமணியே.

இச் சற்குரு மணிமாலையை கொத்தமங்கலத்தை சேர்ந்த செல்லப்பச் செட்டியார் என்பார் 1896ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார்கள்.