சந்தான தீபிகை

ஆசிரியர்: இராமலிங்க முனிவர்
எழுதப்பட்ட வருடம்: 1713
பதிப்பாசிரியர்: சி. இ. இரகுநாதையர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1868
உசாத்துணை: ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

ந்தான தீபிகை இல்லறத்தோர்க் கின்றியமையாச் சாதனமாகிய சந்தான பலனை இனிது விளக்கும் வடமொழிச் சந்தான தீபிகையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப்பட்ட நூலாகுமென, இதனை 1940 ஆம் ஆண்டு பதிப்பித்த கொக்குவில் சி. இ. இரகுநாதையர் நூலாசிரியர் வரலாறு கூறுகையில் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்நூற் பாயிரத்து மூன்றாம் நாலாம் செய்யுள்கள் செப்பி நிற்கும். மேலும் அச்செய்யுள்கள், ஒருவனுக்குப் புத்திரப்பேறில்லாததும், உளதாதலும், தத்த புத்திரர் கிடைத்தலும், புத்திரர் பிறந்திறத்தலும், அற்ப புத்திரர் பிறத்தலும், வெகுபுத்திரர் பிறத்தலும், நோயும், மரணமும், செல்வமும், தரித்திரமும் என்னும் இவைகளைச் சோதிடரீதியாகத் தமிழிற் கூறுவதே இதன் நோக்க மென்பதையுங் குறிக்கும்.

பாயிரத்தின் இரண்டாஞ் செய்யுளாய,

நன்னூலாம் வடமொழிச்சந் தானதீ
பிகையதனை நலங்கு லாவு
தென்னூலாய் பவர்தாமு மாராய்ந்து
கொண்டாடத் தெரித்தல் செய்தான்
மின்னூலா மிடைவாணி மெய்யருளா
னெஞ்சகத்தும் புறத்து மேவு
முன்னூலான் சந்திரசே கரன்புதல்வ
னிராமலிங்க முனிவன் றானே

என்னும் விருத்தம், இன்னூல் செய்தோன் பெயரையும், இதன் முதனூலையும், இதனைத் தமிழிற் செய்த நோக்கத்தையுங் கூறியமையும்.

இதன் இறுதியிற் காணப்படும் செய்யுளாய,

சகவருட மீரெண்ணூற் றெண்ணான்கு மிரண்டுஞ்
சரிந்ததற்பின் பொருந்திடுநந் தனவருட மதனின்
மிகவருடந் திடுமகரத் திங்கடனில் விளங்கி
வியப்புறுமூன் றாந்திகதி வியாழன்பூ சத்திற்
செகமகிழுஞ் சந்தான தீபிகையைத் தமிழிற்
செய்யுணூற் றிருபானாய்ச் சேர்த்துலகில் விளம்பு
மிகபரம்வேண் டினர்நாளும் படித்துணர்வார் கேட்பா
ரெனுமாசை தனைமனங்கொண் டிதனையுரைத் தனனே.

என்னும் விருத்தம் இந்நூல் செய்த காலத்தையும், இதிலுள்ள செய்யுட்தொகை 120 என்பதனையுங் குறிக்கும். சகவருடம் 1634க்குப் பின்வந்த நந்தன வருட தை மாத மூன்றாந்திகதி கிறீஸ்து வருடம் 1-1-1713 க்குச் சரியானதாகும். எனவே, இந்நூல் 1713ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செய்யப்பட்டதென்பது பெறப்படும்.

இந்நூல் பன்னிரு பாவங்களுக்குரிய பலனையும் சந்தான சரிதை என்ற பகுதியையும் கொண்டு விளங்குகின்றது. இது முதலில் 1868ஆம் ஆண்டு புரசைப்பாக்கத்தில் அச்சிடப்பட்டது, பின்னர் சு. நடேசையரின் பொழிப்புரையுடன் 1901ஆம் ஆண்டும், அதன் இரண்டாம் பதிப்பு 1940ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது.