Menu

கோணேசர் கல்வெட்டு

ஆசிரியர்: கவிராஜர்
பதிப்பாசிரியர்: வைத்தியலிங்த தேசிகர்
உசாத்துணை - ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி

கோணேசர் கல்வெட்டு என்ற நூல் கோணேசர் சாசனம் எனவும் வழங்குகின்றது. இதனை பதிப்பித்தவர், தக்ஷிண கைலாய புராணத்தினை பதிப்பித்த வைத்தியலிங்க தேசிகர். அவரது பதிப்பின் பிரகாரம் கோணேசர் கல்வெட்டினை எழுதியவர் கவிராஜர் ஆவார். குளக்கோட்டிராமன் எனும் சோழ மன்னன் கோணேசர் கோட்டமும், கோபுரமும், மதிலும், மண்டபமும், பாபநாச தீர்த்தமும் அமைத்த வரலாறு பற்றிய செய்திகள் சொல்வது இந்நூலென இதன் காப்புச் செய்யுளைத் தொடர்ந்து வரும்,

சொல்லுற்ற சீர்குளக் கோட்டுமன் சொற்படி சொல்லெனவே1
கல்வெட்டுப் பாட்டெனப் பாடின னாதிக் கதைபொருளா
மல்லுற்ற கண்டர்தம் பொற்பாத நெஞ்சி லழுத்தியிகல்
வெல்லுற்ற சீர்க்கவி ராசவ ரோதய விற்பன்னனே.

திருமருவு மனுநீதி கண்ட சோழன்
செகமகிழ வருராம தேவ தேவன்2
திருமருவு திரிகயிலைப் பெருமை கேட்டுத்
தானுமவன் வந்ததுவு மவன்சேய் பின்பு
மருமருவு மாலயங்கோ புரங்க ளோடு
மணிமதில்சூழ் மண்டபமு மலிநீ ராவி
கருமருவு முகினீர்சேர் திருக்குளஞ்செய்
கருமமுமோர் கல்வெட்டாக் களறு வாமே

(பாடபேதம் – செகமகிழு மரபில்வரு ராம தேவன்)

என்ற இரு செய்யுள்களும் குறிக்கும். இவற்றால் இந்நூலை ஆக்கியோன் பெயரும் இது கல்வெட்டுப் பாட்டாக எழுதப்பட்டதென்பதும் அறியலாயிற்று. இதுவும் வரலாற்று நூல் என்ற வகையிலேயே அடங்கும்.

ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தே இயற்றப்பட்ட தக்ஷண கைலாச புராணத்திற்கு நூற்சிறப்புப்பாயிரம் அளித்தவருள் ஒருவர் கவிராஜர். எனவே கவிராஜர் செய்தி இந்நூலும் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்ததாதல் வேண்டும். மேலும் “கவிராஜர்” என்பது புலவரின் இயற்பெயராயன்றி சிறப்புப்பெயராகவே தோன்றுகின்றது. எனவே, இந்நூலை வேறொரு பெயருள்ள புலவன் இயற்றியிருத்தல் கூடும். அவன் “கவிராஜன்” என்ற விருதை யுடையவனாயிருந்திருக்கலாம்.

கோணேசர் கல்வெட்டின் காப்புச் செய்யுள், இச்சந்தேகத்தினை மேலும் வலுப்பெறச் செய்கின்றது. இந்நூலின் காப்புச் செய்யுளும் வையாபாடலின் காப்புச் செய்யுளும் ஒரே செய்யுளின் இரு பிரதிகளாய் அமைந்திருப்பதனை நோக்குமிடத்து, அவ்விரு நூல்களையும் ஒரே ஆசிரியர் இயற்றியிருக்கலாமெனத் தோன்றுகின்றது. குறித்த காப்புச் செய்யுள்களின் முதலடியிலிளுள்ள இரண்டாஞ் செய்யுள், ஒன்றில் “கோணை” யென்றும், மற்றதில் “இலங்கை” யென்றும் நூலுக்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாம் அடியில் மூன்றாம் சொல் ஒன்றில் சாமியென்றும், மற்றையதில் இலங்கையெனவும் மாற்றப்பட்டுள்ளது. இவற்றைவிட அச்செய்யுள்களில் பெரிதாய் பேதமேதும் இல்லை. ஒரே உருவும், ஒரு பொருளும் ஒரே வழுவும் ஒரே சொற்களும் கொண்டமைந்த அவ்விரு காப்புச் செய்யுள்களும், இருவேறு புலவர்களாற் செய்யப்பட்டனவாதல் சாலாது. எனவே, இவ்விரு நூல்களையும் வையாபுரி ஐயரே செய்திருத்தல் கூடும். சமஸ்தான வித்துவானாக விளங்கிய அவருக்கு, வையா பாடல் எழுதிய பின்னர் “கவிராஜர்” என்ற விருது அளிக்கப்பட்டிருக்கலாம். “தானத்தார்”, “வரிப்பத்தர்” என்ற சொற்பிரயோகங்களும் “குளக்கோட்டன்” என்னாது “குளக்கோடன்” எனும் வழக்கும் இவ்விரு நூல்களிலுமே காணப்படுதல் இம்முடிவை மேலும் வலியுறுத்தும். இதனாலும் இந்நூல் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தென்பது போதரும்.

  1. பாடபேதம் – கோட்டுமன் சொல்லிய சொற்படியே
  2. பாடபேதம் – செகமகிழு மரபில்வரு ராம தேவன்