கைலாயமாலை

ஆசிரியர்: முத்துராசக் கவிராயர்
எழுதப்பட்ட வருடம்: 17ம் நூற்றாண்டு

கைலாயமாலை என்ற நூலும் வையாபாடலைப்போல ஒரு வரலாற்று நூலென்றே கணிக்கப்படும். நல்லூரிலே சிங்கையாரியன் கைலாயநாதர் கோவிலைக்கட்டி பிரதிட்டை செய்த வரலாற்றைக்கூறுவதுடன், யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் இது சுருக்கிக் கூறும். கி.பி 18ஆம் நூற்றாண்டில் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலைக்கும், பிற்காலத்திலே யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய பலருக்கும் இதுவே முதநூலாக அமைந்தது. 310 கண்ணிகளை கொண்ட கலிவெண்பாவால் அமைந்த இந்நூலின் இறுதியிலுள்ள வெண்பாவாய

கற்றோர் புகழக் கயிலாய மாலைதன்னை
நற்றமிழி னாற்றொடுத்து நாட்டினான் – சுற்றுறையூர்ச்
செந்தியப்பன் றந்தசிறு வன்முத்து ராசனென
வந்தகவி ராசமகு டம்

என்பதிலிருந்து, இதன் பெயர் கைலாயமாலை என்பதும், இதனை யாக்கியோன் முத்துராச கவிராசர் என்பதும் தெளியலாம்.

இந்நூலின்கண் முதற்சிங்கையாரியச் சக்கரவர்த்தி,

தென்னனிக ரான செகராசன் றென்னிலங்கை
மன்னவனா குஞ்சிங்கை யாரியமால்

என்றும்

சீமான் செயவீரன் சித்தசனே ரொத்தமன்னன்
கோமா னெனுஞ்சிங்கை யாரியர் கோன்

என்றும்

செயசிங்க வாரியனாஞ் செய்யகுல ராசன்

என்றும் குறிப்பிடப்படுகின்றான்.

அவன்,
மதித்த வளங்கொள் வயல்செறி நல்லூரிற்
கதித்தமனை செய்யக் கருதி

அதனை இராசதானியாக்கினான் என்றும்,

புவனேக வாகுவென்னும் போரமைச்சன் றன்னை
நலமேவு நல்லூரி னண்ணுவித்தா

என்றும் கைலாயமாலை கூறும். நல்லூர் இராசதானியானது கி.பி 1450ம் ஆண்டின் பின்னரே என்பதும், ஆரியச்சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்திலரசு தொடங்கியது 13ம் நூற்றாண்டிலென்பதும் வரலாற்றாசிரியர்கள் முடிவு. ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில், இந்நூல் எழுதப்பட்டிருந்தால், இத்துணை முரண்பாடேற்பட்டிருக்கக் காரணமில்லை. ஆரியச்சக்கரவர்த்திகள் ஆட்சி கி.பி 1621 இல் முடிவுற்றது. கைலாயமாலையை ஆதாரமாகக்கொண்டெழுந்த யாழ்ப்பாண வைபவமாலை 18ம் நூற்றாண்டிலெழுதப்பட்டது, எனவே கைலாய மாலை கி.பி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருத்தல் கூடுமெனக்கொள்ளலாம்.