கிள்ளைவிடு தூது

ஆசிரியர்: வரத பண்டிதர்
பதிப்பாசிரியர்: இரத்தினேஸ்வரஐயர்

கிள்ளைவிடு தூது காங்கேசன்துறையைச் சேர்ந்த கண்ணியவளை என்னுமிடத்திலெழுந்தருளியுள்ள குருநாத சுவாமிமீது வரத பண்டிதரால் இயற்றப்பெற்றதாகும். இது தூதுப் பிரபந்த இலக்கணத்துக்கு அமைய கலிவெண்பாவாற் செய்யப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளடிகளாகிய

கொற்றமிகுந் தெய்வக் குருநாத சாமிதன்மேற்
சொற்றதமிழ்க் கிள்ளைவிடு தூதுரைக்கக் – கற்றுணர்ந்தோர்
நான்முகத்தோன் போற்றுமுக்க ணக்க னருள்பாலன்
றோன்முகத்தோன் றாளே துணை

என்பன இதன் பெயரை வலியுறுத்தும். 216 கண்ணிகளை கொண்ட இத்தூது கண்ணகியம்மன் கோபத்தாலுண்டாகும் அம்மைநோய் முதலியவற்றை ஆற்றவென உருவெடுத்த குருநாதன் பவனி கண்ட பெண்ணொருத்தி, அவன் மேலுற்ற காதலைத் தன் கிளிமூலஞ் சொல்லியனுப்பிக் “குருநாதர் மாலைதனை நீ வாங்கிவா” எனக் கிள்ளையைத் தூதனுப்பிய கதையை கூறுமுகத்தாற் குருநாத சுவாமியின் சிறப்பினைச் சொல்வதாயமைந்துள்ளது.

இந்நூலினை யாழ்ப்பாணத்து உடுவில் இரத்தினேஸ்வரஐயர் பதிப்பித்திருக்கிறார்கள். சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவரும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் இப்பதிப்பிற்கு சிறப்புப்பாயிரம் சொல்லியிருக்கிறார்கள்.