கல்வளையந்தாதி

ஆசிரியர்: நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
பதிப்பாசிரியர்: க. முத்துக்குமாரப்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1876
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

ல்வளையந்தாதி யாழ்ப்பாணத்துச் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளைப் பதியில் எழுந்தருளிய விநாயகப்பெருமான் மீது பாடப்பெற்ற அந்தாதி நூலாகும். இது நூற்றந்தாதி இலக்கணத்துக்கமைய நூறு செய்யுள்களைக்கொண்டு விளங்குகின்றது. கட்டளைக்கலித்துறை யாப்பிலமைந்துள்ள இச் செய்யுள்கள், யமக அந்தாதியாக விளங்கும். கல்வளைப் பிள்ளையாரை இந்நூல் கற்பகப் பிள்ளையாரென்றும், வலவை (வல்லபாம்பிகை) காந்தன் என்றும், இராமர் வணங்கும் வீரகத்தி விநாயகர் என்றும், பிரமாநந்தப் பிள்ளையா ரென்றுங் குறிப்பிட்டு அவரை வணங்குவோர்க்குத் தீவினையணுகாவென்றும் பிறவித் துயர் போமென்று முரைக்கும். இதிற் பல பாடல்கள் அகப்பொருள் தழுவித் தோழி கூற்றாகவும். செவிலி கூற்றாகவும், தலைவி கூற்றாகவும், பாங்கன் கூற்றாகவும், தலைவன் கூற்றாகவும் அமைந்துள்ளன.

இவ்வந்தாதியைச் செய்தவர் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரெனச் செப்புவர். திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1964ஆம் ஆண்டு வெளியிட்ட பதிப்பிற் காணப்படும் சிறப்புப்பாயிரச் செய்யுளாய

செம்பொற் குவட்டினிற் பாரதந் தீட்டிய கோட்டினன்சீர்க்
கம்பக் கரிமுகன் கல்வளை வாழுங் கணபதிக்கு
நம்பற் கினியமுற் சங்கத்து நூலென நல்லைச்சின்னத்
தம்பிப் புலவனல் லந்தாதி மாலையைச் சாற்றினானே.

என்னுங் கட்டளைக் கலித்துறை இதனை வலியுறுத்தும். இச் சிறப்புப் பாயிரஞ் செய்தார் வரதராசக் கவிராயர் எனக் கருதப்படுகின்றது.