மேலும் சில நூல்கள்

கலாநிதி

பதிப்பிக்கப்பட்ட வருடம் :1942 -

மிழ்மொழயினையும் ஆரியத்தையும் வளர்க்கவென 1921ம் வருடம் யாழ்ப்பாணத்தில் தாபிக்கப்பட்ட ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் அந்நோக்கை விருத்தி செய்யவென 1942ம் வருடம் சித்திரை மாதம் ஆரம்பித்த மும்மாத வெளியீடே கலாநிதி சஞ்சிகை.

இச்சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்ட குறிக்கோள் பற்றி இவ்விதழுக்கு வாழ்த்துரை வழங்கிய விபுலானந்த அடிகள் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

தாய்நாட்டில் தமிழ் வளர்க்கும் மதுரைத் தமிழ்ச்சங்கமும், கரந்தைத் தமிழ்ச்சங்கமும் முறையே செந்தமிழ், தமிழ்ப்பொழில் என்னும் மாதாந்தப்பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. கலாநிதியானது ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் வெளியீடாதலின், இருமொழிக்கும் இடந்தந்து நிற்குமென்பது வெளிப்படை. கலைநூல்கள் மொழியினால் எல்லைப்படா நீர்மையவாதலின், மேற்றிசை கீழ்த்திசையிலுள்ள பிறமொழியாளர் வகுத்துரைத்த கலைநூல்களையும் தமிழ்மொழி பாயிலாக உணர்த்துதலையும் கலாநிதி தனது குறிக்கோள்களுள் ஒன்றாக கொள்ளலாம்.

இச்சஞ்சிகையின் முதலிதழுக்கு நவாலியூர் சோமசுந்தரப் புலவரவர்களும், வித்துவசிரோமணி கணேசையர் அவர்களும் வாழ்த்துப் பாக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆசிரியப்பா

மேக முழக்கமும் வேழத் தொலியும்
எதிரெதிர் முழங்கும் வெதிர்வரை வளஞ்சால்
ஈழமா நாட்டிற் றாழ்விலா தோங்கி
யாழ்ப்பாண மென்றுபெய ரெங்கு நிறீஇய
வைப்பி னாரிய திராவிட சங்க
வெண்பாற் கடலிற் றண்மையொடு பிறந்த
கலாநிதி யேநீ கவின்பெற் றெழீஇ
வானோ ருண்ணாக் கலையுடன் புணருபு
தேயா தென்றும் நிறைவு தலைக்கொண்டு
கறை விரவாது தடைமரு வாது
தமிழகந் தன்னி லிகழ்விலா திலங்கி
ஆங்குச்,
செறிதரூஉம் மக்கட் கறிவு முதிர
உரையாம் அமுதக் கதிரொளி பரப்பித்
தயாநிதி யாம்இறை தண்ணரு ளதனால்
என்று நின்று நிலவி
வாழிபல் லூழி வாழிய வினிதே.

என்பது வித்துவசிரோமணி சொன்ன வாழ்த்துப்பா.

இம்முதலிதழுக்கு சுவாமி விபுலானந்தர், பண்டிதர் இராகவஐயங்கார், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம், வித்துவான் முருகேசபிள்ளை, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், பண்டிதர் கிருஸ்ணபிள்ளை, சதாசிவஐயர் ஆகியோர் விடயதானம் செய்திருக்கின்றார்கள்.