கரவை வேலன் கோவை

ஆசிரியர்: சின்னத்தம்பிப் புலவர்
பதிப்பாசிரியர்: தி. சதாசிவஐயர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1935
உசாத்துணை: ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

ரவை வேலன் கோவை கரவெட்டி வேலாயுத பிள்ளையை பாட்டுடைத்தலைவனாக கொண்டு செய்யப்பட்ட அகப்பொருட் கோவை நூலாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும்வீதியில் 17 கட்டை தூரத்திலுள்ளது கரவெட்டி எனும் கிராமம். அங்கு வாழ்ந்த பிரபுவாய சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுதபிள்ளையின் புகழ்கூற எழுந்தது இந்நூல். இவர் பெயர் வேலாயுதர் எனவும் வேலாயுத உடையார் எனவும் வழங்கும் என்பது அக்கால காணித்தோம்பு மூலம் அறியப்படும். இப்பிரபந்தத்தின் ஒன்பதாவது செய்யுளில்

சேது நிலையிட்ட மாப்பாண னீன்றருள் செல்வன்கலை
யோதும் வரிசைக் கரவையில் வேலன்

என்று சொல்லப்படுவதால் இவர் தந்தையார் பெயரும், பதினோராவது செய்யுளில்

தாரணி மெச்சிய சிற்றம் பலவனைத் தந்ததந்தை
போரணி வாகைக் கரவையில் வேலன்

என்று சொல்லப்படுவதால் இவர் மைந்தன் பெயரும் தெரியப்பட்டன. இருபத்துமூன்றாவது செய்யுளில் ‘வேளாளர் வேந்தன் கரவையில் வேலன்” என்பதால் இவர் குலமும் நிலையும் புலப்படும்.

இக்கோவை 425 கட்டளைக்கலித்துறைப்பாக்களை கொண்டு விளங்கிற்று. இப்பொழுது அத்தொகையில் 172 பாக்கள் காணப்படவில்லை. 1935ம் ஆண்டு தி. சதாசிவஐயர் அச்சிட்டு வெளியிட்ட பதிப்பில் 322ஆம் செய்யுளின்பின் முழுமையாகவுள்ளது இக்கோவையின் இறுதிப்பாவாய 425ம் சேய்யுளே. மேலும் 69 செய்யுள்கள் இடையிடையே இல்லா தொழிந்தனவென அப்பதிப்புக் காட்டும். அவ்விறுதிச் செய்யுளை கீழே காணுங்கள்.

வெண்மைத் தரள நிரைத்திடு மூரல் விளங்கிழையார்
பெண்மைக் கணியவர் கொங்கை முயங்கிடப் பெற்றனம்பா
முண்மைக்கு வாய்த்த கரவையில் வேல னுயர்ந்தகொடை
வண்மைக் கரதலம் போற்பொழி கார்ப்புயல் வாழியவே.

இந்நூல் செய்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்.