கந்தபுராண நவநீதம்

ஆசிரியர்: காசிவாசி செந்திநாதையர்
எழுதப்பட்ட வருடம்: 1883-1886
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1886

யாழ்ப்பாணத்து காசிவாசி சி. செந்திநாதையர் அவர்கள் கந்தபுராணத்தின் சாரத்தினை திரட்டிச் செய்த நூலே கந்தபுராண நவநீதம். 1886ம் வருடம் இந்நூலினை ஐயரவர்களே சென்னை வித்தியாநுபாலனயந்திரசாலையில் பதிப்பித்து வெளியிட்டார். 1969ம் வருடம் யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுடைய அணிந்துரையோடு ஒரு பதிப்பினையும் வெளியிட்டிருக்கின்றது.

செந்திநாதையர் அவர்கள் கந்தபுராணத்தை பல நூறுதரம் பயின்று, கந்தபுராண நவநீதம் என்னும் நூலைச்செய்தார். நவநீதம் என்றால் வெண்ணெய் என்று பொருள் கந்தபுராணமாகிய பாற்சமுத்திரத்தில் திரண்ட – திரட்டிய வெண்ணெய் இந்நூல் என எடுத்துக்கொள்ளலாம் என பண்டிதமணி அவர்கள் தனது கந்தபுராண கலாச்சாரம் எனும் கட்டுரைத் தொகுப்பிலே இந்நூல் பற்றி கூறியிருக்கிறார்கள்.

செந்திநாதையர் அவர்கள் நூற்பெயர்க் காரணத்தை பின்வருமாறு நூலின் உபோற்காதத்திலே சொல்லியிருக்கின்றார்கள்.

திகடசக்கரச்செம்முகமைந்துளான் என்னுந் தலைக்காப்பு முதல், பாராதியேனைப்பொருளாகி என்னுங் கடைக்காப்பு இறுதியாகக் கச்சியப்பசிவாசாரியசுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட அத்தியற்புத அதிமதுர திவ்விய வாக்காகிய கந்தபுராணத்தினின்று சாரமாகத் திரட்டிச் செய்யப்பட்டமையால், இந்நூலுக்கு கந்தபுராணநவநீதம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.

மேலும் இந்நூலினை அவர் யாத்த காரணத்தையும் அந்நூலின் அமைப்பினையும் பின்வருமாறு சொல்லுகின்றார்

கந்தபுராணத்துண்மைப்பொருளை ஆராயாதவர்கள் விபரீதார்த்தங்கொண்டு சிவசுப்பிரமணியக்கடவுளை இகழ்ந்து அதிபாதகர்களாகிய சிவத்துரோகிகளாய் எரிவாய்நரகத்துக்கு இரையாகாவண்ணம் புழுத்த நாயினுங்கடையேனாகிய தமியேன் பாருக்குளே கலியுகத்திலே கண்கண்டபரமதெய்வமாகிய முருகக்கடவுளுடைய திருவடித்தாமரைகளைச் சிந்தித்து துதித்து வணங்கி, சைவசிந்தாந்தசமயத்தின் உயர்வை யுணர்த்தற்குச் சமயப்பிரகரணத்தை முதற்கண்ணும்; இச்சமயத்துக்குரிய நூல்கள் இவைகள்தாம் என உணர்த்தற்கு வேதாகமப்பிரகரணத்தை இரண்டாவதாகவும்; வேதாகமங்களிலே சொல்லப்பட்ட பொருள்கள் பதி பசு பாசமாமென உணர்த்தற்குப் பதிபசுபாசப்பிரகரணத்தை மூன்றாவதாகவும்; வேதாகமங்களிலே யமைந்த சரியை யாதி நிலைகளிலேநின்று சிவபெருமானை வழிபடல்வேண்டு மென்பதை உணர்த்தற்குச் சரியாபாதாதிப்பிரகரணங்களை நான்கு ஐந்து ஆறு ஏழாகவும்; சரியையாதி பாதங்களிலே நின்று உறுதிபெறுதற்கு அன்பு ஒருதலையாக வேண்டப்படுமென்பதை உணர்தற்குப் பக்திப்பிரகரணத்தை எட்டாவதாகவும் அமைத்துக் கந்தபுராணநவநீதமென்னும் இச்சிறுநூலை இயற்றினேன்.