Menu

கதிர்காமக் கலம்பகம்

ஆசிரியர்: கந்தப்பசுவாமி
பதிப்பாசிரியர்: நா. கதிரவேற்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1897

சிவபூமியாம் ஈழத்தின் கதிர்காமத்திருப்பதியில் எழுந்தருளியருள் பாலிக்கின்ற முருகப்பெருமான் மீது கந்தப்பசுவாமிகள் பாடிய பிரபந்தமே கதிர்காமக்கலம்பகம். இக்கலம்பகத்தை பாடிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தப்ப சுவாமிகள் கொடுநோய் வந்து தன்னை வாட்டியபோது பல சிவ குக தீர்த்தங்களுக்கும் சென்று வழிபட்டும் நோய்தீராமையினால், கதிர்காமம் சென்று முருகப்பெருமானை வழிபட்டு நோய்தீர்ந்து இதனைப் பாடி முடித்தார் என்பார், இந்நூலைப் பதிப்பித்த கதிரவேற்பிள்ளை அவர்கள்.

இக்கதிர்காமக் கலம்பகம் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்றான கலம்பக விதிக்கமைவாய் கொச்சகக் கலிப்பாவும், வெண்பாவும், கலித்துறையும் முதற் கவியுறுப்பாக முற் கூறப்பெற்று, புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம். மறம், பாண், களி , சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்னும் பதினெட்டு உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வெண்டுறை என்னுமிவற்றால் இடையிடையே வெண்பாவும் கலித்துறையும் விரவிவர, அந்தாதித் தொடையால் அமைந்திருக்கின்றது என்பார் பதிப்பாசிரியர்.

சிலபம்பகந்தோ றாடல் செயுங்கதிரே சன்மேற்
கலம்பகப்பா மாலைசொலக் கான்மா – னலம்பகஞ்சேர்
தும்பிமுகர் தாழ்கரடச் சோனைமழை மாறாத
தும்பிமுகர் தாளே துணை.

என்கின்ற கடவுள் வாழ்த்தோடு ஆரம்பிக்கின்ற கதிர்காமத் தலத்தின் பெருமைகூறும் இப்பிரபந்தத்திலிருந்து சில விருத்தங்களை கீழே காணுங்கள்.

மறம் – எண்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்

அற்றவர்தந் தீவினையைத் தொழுவார் வாழு
    மருங்கதிர்கா மத்தடத்தி லரச ரென்றும்
வெற்றோலை தன்னைச்சீ முகம தென்றும்
    வீண்பேசி வந்துநின்ற தூதா கேளாய்
கற்றவராற் பழிச்சுமற வக்கு லத்தெங்
    கன்னியைவேட் டனந்த்தவர் காலங் கண்டார்
மற்றதனை யறிந்துமனர் பட்ட பாட்டின்
    மாட்சியுண ராய்போலும் வந்த வாறே. (௬௪)

நாரைவிடுதூதூ – கலிநிலைத்துறை.

வந்தன னன்றென் கொங்கை புணர்ந்த மயில்வீரன்
கந்த னரன்புகழ் மைந்தன் கடம்பன் கதிர்காமன்
முந்த வணங்கென் சிந்தை வருந்தன் மொழிவாயாற்
சிந்தை யகன்றெம் பண்ணை யுவந்திரி செந்நாராய். (௬௫)

மடல்விலக்கு – கலிவிருத்தம்

நாரணன் மருகராய் நம்பன் மைந்தரா
யேரணி கதிர்க்கிரி யிறையன் பாகினார்
வாரணி முலைமட வாரைப் புல்கலா
தோரணி மடறனை யூர்தற் கொண்ணுமே. (௬௬)

முதுவேனிற்காலம் – வஞ்சிவிருத்தம்

ஒண்ணுதல் புணர்ந்தபுய வுத்தமன்
கண்ணுதல் பயந்தவொரு கர்த்தனுக்
கெண்ணலரின் வந்தமுது வேனிலே
கண்ணினன றூவல்கதிர் காமமே. (௬௭)

அறுசீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்

காமமில்லான் பாசமில்லான் கருத்துமில்லான் மறைமாற்குங் காண கில்லா
னாமமில்லா னுருவருவூர் மேலுமிலான் குணங்குறி நாட்டங்க ளில்லா
னேமமில்லா னாதிநடு வீறில்லான் மனைமுளையுற் றாரன் றாமெல்
லாமுமில்லா னெவனவனென் னகத்தொளிர்நங் கதிரையருந் தலத்தா வானே. (௬௮)

சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் இக்கலம்பகத்தை பரிசோதித்து 1897ம் வருடம் சென்னையில் பதிப்பித்து வெளியிட்டார்கள். இதற்கு சூரியநாராயண சாஸதிரியார் அவர்களும், பூவை கலியாணசுந்தர முதலியாரவர்களும் சிறப்புப்பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள். சூரியநாராயண சாஸ்திரயார் சொன்ன வெண்பாவை கீழே காணுங்கள்.

கந்தப்பர் செய்தகதிர் காமக் கலம்பகத்தைச்
சந்தமொடு மச்சிட்டான் சால்புறவே – சந்ததமுங்
கந்தனடி பேணுங் கதிரைவேற் பிள்ளையெனு
மந்தமிழ்ப்பா வாணனினி தாய்ந்து.