கதிரைமலைப்பள்ளு

பதிப்பாசிரியர்: வ. குமாரசுவாமி
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1935
உசாத்துணை: ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

திரைமலைப்பள்ளு என்றும் கதிரையப்பர் பள்ளு என்றும் வழங்கும் இந்நூல் ஈழத்தெழுந்த முதற் பள்ளுப்பிரபந்தமென்பர். இதனைப்பின்பற்றியே ஏனைய பள்ளுப்பிரபந்தங்களும் எழுந்தனவென்று சிலர் கருதுவர். இதனை நிரூபிக்கத்தக்க சான்றுகள் கிடைத்தில. இந்நூல் 130 செய்யுள்களைக்கொண்டு பள்ளுப் பிரபந்தத்தின் இலக்கணம் அமைந்து விளங்குகின்றது. சில ஏட்டுப்பிரதிகளில் மேலதிகமாகவும் பாடபேதமாகவும் உள்ள ஏழு செய்யுள்களை எடுத்துக்காட்டியுள்ளார் இந்நூலை 1935ம் ஆண்டு பதிப்பித்த வ. குமாரசுவாமி. இதனை இயற்றிய புலவர் பெயர் புலப்படவில்லை. விருத்தப்பாவுஞ் சந்தப்பாவுமே இந்நூலிற் பெரிதும் கையாளப்பட்டுள்ளன. இதன் செய்யுள்களிற் சிலவற்றின் நடையை அவதானித்து, இது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தாதல் கூடும் என்று ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் கூறும். இதனை நாட்டத்தக்க அகச்சான்றுகளோ புறச்சான்றுகளோ அகப்பட்டில.

மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைத்தலைவன் ஆகியோரே இதில் வரும் பாத்திரங்களாகும். இந்நூலில் அமரர்நாதன் புதல்வன் தர்மநாயகன் என்றொருவன் ஒரு செய்யுளிற் புகழப்படுகின்றான். இவன் யார் என்பது தெரியவரவில்லை. இதில் “தியாகசூரியர் நாடெங்கள் நாடே” என்று குறிப்பிடப்படுபவன் முதலாம் இராஜசிங்கன் என்பாருமுளர். அதற்கும் ஆதாரங் காணமுடியவில்லை. மேலதிகச் செய்யுள்களிலிருந்து இந்நூல் முல்லைத்தீவுப்பகுதியிலேயே அதிகமாக வழங்கி வந்ததெனத் தெரிகின்றது. இதனை முதலில் 1906ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தவர் முல்லைத்தீவைச்சேர்ந்த தா. கைலாசபிள்ளை என்பவராவார். அவர் பதிப்பிலும், அப்பகுதியிலுள்ள பிற ஏடுகளிலும் இப்பள்ளியின் கடவுள் வாழ்த்துப் பாடல் முள்ளியவளை மூத்தநயினாரைக் குறிப்பிடுகின்றது என்பது,

கந்த மேவு கார்முகத் தோனே
கருணை யாகிய சங்கபுரி மைந்தா
முன்பு போலெனை அன்புவைத் தாளும்
முள்ளிய வளை மூத்த நயிந்தை

எனும் அந்நூற் செய்யுளால் அறியக்கிடக்கின்றது.

அகப்பொருட்டுறை கூறும் பாடல்கள் பள்ளில் அமையவேண்டுமென்ற விதிக்கு மாறாக அவ்வகைப் பாடல்கள் இதில் இல்லாதிருப்பது, அவ்விதி பரவுவதற்கு முன்னரே இந்நூல் செய்யப்பட்டிருத்தல் கூடும் என்பதற்கு ஆதாரமாகலாம். அதனால் இது ஏனைய ஈழத்துப் பள்ளு நூல்களிலும் காலத்தால் முந்தியதாகலாம்.