மேலும் சில நூல்கள்

கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல்.

ஆசிரியர்: சகவீரன்
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

இளங்கோவடிகள் செய்த சிலப்பதிகாரம் என்ற நூலின் கதை, சில நீக்கங்களுடனும் புதுச் சேர்க்கைகளுடனும், பொதுமக்களுக்கேற்ற வகையில் ஒரு புது இலக்கியமாக செய்யப்பட்டுள்ளது. அது கண்ணகி வழக்குரை என்று ஈழத்தின் கிழக்கு மாகாணத்திலும், கோவலனார் கதை என்று வடக்கு மாகாணத்திலும், சிலம்பு கூறல் என்று முல்லைத்தீவுப்பகுதியிலும் வழங்கி வருகின்றது. கண்ணகி வழக்குரை என்ற நூல் வரம்பெறு காதை (கோவலனார் பிறந்த கதை) (அம்மன் பிறந்த கதை), கப்பல் வைத்த காதை (மீகாமன் கதை) (துரியோட்டு) (கப்பல் வதை;தல்), கடலோட்டு காதை (வெடியரசன் போர்) (நீலகேசி புலம்பலும் வீரநாரணன் கதையும்) (மணிவாங்கின கதை) (விளங்குதேவன் போர்), கலியாணக் காதை, மாதவி அரங்கேற்று காதை, பொன்னுக்கு மறிப்புக் காதை (பொன்னுக்கு மறிப்பு) (இரங்கிய காதல்), வழிநடைக்காதை (வயந்தமாலை தூது) (வழிநடை), அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை (சிலம்பு கூறல்) (கொலைக்களக் காதை) (அம்மன் கனாக்கண்ட கதை) (உயிர்மீட்புக் கதை), வழக்குரைத்த காதை, குளிர்ச்சிக்காதை (குளிர்ச்சி) (வழக்குரை காவியம்) என்ற அதிகாரங்களை கொண்டு விளங்குகின்றது. கோவலனார் கதை என்ற நூலும் பெரும்பாலும் இதே அதிகாரங்களைக்கொண்டு விளங்கக் காணலாம். சிற்சில அதிகாரப்பெயர்கள் சொல்லளவில் வேறுபட்டிருப்பினும், பொருளளவில் ஒன்றேயாதல் நோக்கத்தக்கதாகும். இந்நூல் சிலப்பதிகாரக் காதையை பெருமளவில் தழுவியுள்ளதேனும், இதன் முதல் மூன்று அதிகாரங்களும் சிலப்பதிகாரத்தில் இல்லாத பகுதிகளாகும். சிலப்பதிகார வஞ்சிக்காண்ட பகுதியும் இதில் இடம்பெறவில்லை.

கண்ணகி வழக்குரை அரங்கேற்றுக்காதையில் உள்ள

அவனிபுகழ் குடிநயினாப் பணிக்கனெனு மவன்மிகுந்தோன்
கவளமதக் களிற்றண்யல் காங்கேசன் தேவையர்கோன்
தவமென்ன விளங்குபுகட் சகவீரன் தாரணியிற்
சிவனருளா லிக்கதையைச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான்

என்னும் செய்யுள், இந்நூலினை இயற்றியவன் சகவீரன் என்றும், அவன் காங்கேசன் என்ற தேவையர்கோன் குலத்தவனென்றும் தெரிவிக்கின்றது. தேவையர்க்கொன் என்பது யாழ்ப்பாணத்தில் இருந்து அரசு செலுத்திய ஆரியச்சக்கரவர்த்திகளை குறிக்கும் பெயராகும். மேலும் இந்நூலின் கண் ஆரியச் சக்கரவர்த்தியினை புகழ்ந்து கூறும்,

ஆர்த்ததிற லாரியர்கோன் அடலரசர் மணவாளன்
கீர்த்திதனைப் பாடுவார்க்குக் கிலேசமெல்லாம் நீங்குவபோல்
ஏத்தரிய சந்திரன்தன் இயல்பினுடன் தானெழவே
மிகுந்தபுவி தனிற்பரந்த மிக்கவிருள் நீங்கியதே

என்பது போன்ற செய்யுள்கள் இந்நூல் ஆரியச்சக்கரவர்த்தி ஆட்சிபுரிந்த காலத்தே செய்யப்பட்டதென்பதனைக் காட்டும். பெரும்பாலும் தாழிசையாற் செய்யப்பட்ட இந்நூலிற் சிந்தும் வெண்பாவும், அகவலும் இடையிடையே இடம்பெற்றுள்ளன.