Menu

ஈழமண்டல சதகம்

ஆசிரியர்: ம. க. வேற்பிள்ளை புலவர்
பதிப்பாசிரியர்: ம. க. வே. திருஞானசம்மந்தப்பிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1923

ரையாசிரியர் ம. க. வேற்பிள்ளைப் புலவர் அவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் திருமூலராலே சிவபூமி என அழைக்கப்பட்ட ஈழமண்டலத்தின் பெருமைகளை அங்குள்ளோர் தெரிந்து கொள்ளவென்று நூறு பாடல்களில் சுருக்கமாய் செய்த நூலே சந்திரமேளலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகமாம்.

இச்சதகம் பொதுப்பிரகரணம், இலங்காபுரிப் பிரகரணம் மற்றும் வீணாகானபுரப்பிரகரணம் என மூன்று பிரகரணங்களாக வகுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரகரணம் யாழ்ப்பாணத்துக்கும் இலங்கைக்கும் பொதுவான விடயங்களை கூறியும், இலங்காபுரிப் பிரகரணம் யாழ்ப்பாணம் தவிர்ந்த இலங்கை பற்றிய விடயங்களை கூறியும், வீணாகானபரப்பிரகரணம் யாழப்பாணத்திற்கே உரிய விசேட விடயங்களைம் கூறிநிற்கும்.

செந்திருசேர் சந்த்ரபுரச் செல்வரருட் கேதாரச்
சந்திரமொ லீசர் சதகபதப் – புந்திபுகும்
இந்துஞ்சிந் துந்நந்து மெந்தைமுந்து தந்தபொலந்
தந்தன்பந் தந்தவிர்க்குந் தாள்.

என்று புலவரின் குலதெய்வாமாகிய யாழ்ப்பாணம் மட்டுவிற் பதியிலே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சாந்தநாயகி சமேத சந்திரமௌலீசப் பெருமான் மீது காப்புக்கூறி ஆரம்பிக்கிறது இச்சதகம். இதனாலேயே இந்நூல் சந்திரமேளலீசர் சதகம் எனவும் பெயர்பெற்றது.

சதகப்பாடல் இலக்கணத்திற்கமைவாய் நூலின் கண்ணிருக்கும் ஒவ்வோர் செய்யுளின் ஈற்றடிகளும்

……………….
 சாந்தநா யகிசமேத
சந்த்ரமொ லீசனே யைந்தொழில் விலாசனே
 சந்த்ரபுர தலவாசனே.

என நிறைவுறுகின்றன. சதகத்தின் கண்ணே அமைந்திருக்கும் யாழ்ப்பாணத்துப் புரதானாலயங்களும் தீர்த்தங்களும் பற்றிய செய்யுளை கீழே காணுங்கள்.

சிதம்பர சபாநாதர் தெற்குநோக் கியவருட்
 டிவ்யநேத் திரதானமாய்த்
திகழியாழ்ப் பாணத்தி லமர்வபொன் னாலயஞ்
 சித்திதரு திருவடிநிலை
நிதம்படுங் கைலாய நாதரா லயமூழி
 நீள்சட்டை நாதர்கோயி
னீடுவில் லூன்றியமு னாநதி நிலாவரையிந்
 நிகழ்சதக முதல்வர்நிலயம்
குதம்பையம் பிகையொடும் வாரிவன நாதரமர்
 கோயில்பிர ளயவைரவர்
குறுகுபழை மண்டலாய் வல்லிபுர நாதருறு
 கோயிலிவை கூறிலின்னும்
சதம்படு தலங்கள் பிற நானூ றெனச்சொனார்
 சாந்தநா யகிசமேத
தந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே
 சந்த்ரபுர தலவாசனே.

இந்நூலை வேற்பிள்ளைப் புலவர் அவர்களுடைய மூத்த புதல்வர் ம. க. வே. திருஞானசம்மந்தப்பிள்ளை அவர்கள் 1923ம் வருடம் உரும்பிராய் ந. சபாபதிப்பிள்ளை அவர்கள் இயற்றிய உரையோடு பதிப்பித்து வெளியிட்டார்கள். இதற்கு புலவரவர்களின் புத்திரர்களான ம. க. வே மாணிக்கவாசகர் மற்றும் பரீட்சை எடாத பண்டிதர் என பண்டிதமணி அவர்கள் புகழ்கின்ற ம. க. வே மகாலிங்கசிவம் அவர்களும் சிறப்புப் பாயிரம் சொல்லியிருக்கின்றார்கள்.