ஆறுமுகநாவலர் சரித்திரம்

ஆசிரியர்: கனகரத்தின உபாத்தியாயர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1882

சைவமும் தமிழும் வளர்த்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்களின் மறைவுக்கு பின்னர், அவரது வாழ்க்கை வரலாற்றினை தொகுத்து, அவரது சீடர்களில் ஒருவரான கனகரத்தின் உபாத்தியாயர் கத்திய ரூபமாக யாத்து 1882ம் வருடம் வெளியிட்ட நூலே ஆறுமுகநாவலர் சரித்திரமாகும். ஆறுமுகநாவலரின் வரலாறு கூறி பல நூற்கள் பின்னர் எழுதப்பட்டிருந்தாலும், கனகரத்தின உபாத்தியாயர் செய்ததே முதனூலாம். இவ்வாழ்க்கைச் சரிதத்திற்கு சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களும், பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை அவர்களும் சிறப்புக் கவிகள் சொல்லியிருக்கிறார்கள். சிறப்புப் பாயிரம் செய்தவர் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர்.

திருமேவு நல்லையெனு நகரிற் றோன்றிச்
   சிவாகமமே யாதியநூற் பரவை யுண்டே
அருமேவு முண்மைநிலை தனைப்போ தித்த
   வாறுமுக நாவலர்கோன் சரித மாகு
மருமேவு நவநீதந் திரட்டி யச்சில்
   வயங்குவித்தான் வண்ணைநகர் வாழுஞ் சீலன்
உருமேவு சற்சனர்மா ணிக்க மாகி
   யொளிர்கனக ரத்தினப்பே ருபாத்தி தானே.

என்பது சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் சொன்ன சிறப்புக் கவி.

அற்பமான வண்டுகூட பூவினை அடைந்து சிறப்படைவதுபோல் தானும் ஆறுமுகநாவலர் சரிதம் சொல்லியிருப்பதாய் அவையடக்கம் சொல்லி நூலை யாத்திருக்கிறார் கனகரத்தின உபாத்தியாயர்.

புல்லிய கீடமும் பூவினைச் சேர்ந்து பொருந்துதலால்
நல்லவர் தந்தலை மீதே நணியது நாவலர்கோன்
எல்லையில் கீர்த்தி யிசைப்பது வாதலி னென்னுரையும்
வல்லவர் சங்கமுஞ் சென்றே வழங்கிடும் வையகத்தே.

இந்நூலில் ஆறுமுக நாலவர் அவர்களுடைய வாழக்கை வரலாறு பிறப்பிலிருந்து இறப்பு வரை விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. நாவலர் பெருமான் செய்த இரு பிரசங்கங்கள், எழுதிய விஞ்ஞாபனங்கள், சில கண்டனங்கள், நாவலர் பெருமான் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு சென்ற வேளைகளில் சிவசம்புப் புலவர் மற்றும் ஏனைய புலவர்கள் அவர் மீது பாடிய பாடல்கள் என்பனவும், நாவலர் பெருமானின் மறைவின் போது புலவர்கள் பலராலும் பாடப்பட்ட பாடல்களும் இந்நூலின் கண்ணே தொகுக்கப்பட்டுள்ளன.