அமுதாகரம்

ஆசிரியர்: வரத பண்டிதர்
எழுதப்பட்ட வருடம்: 18ம் நூற்றாண்டு
பதிப்பாசிரியர்: சு. தம்பையாபிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1892
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

அமுதாகரம் விட வைத்திய நூல் என்பதனை அதன் பாயிரப் பகுதியாய

பார்மலி துத்திப் படவிட நாகம்
மண்டலி புடையன் வளர்கரு வளலை
எண்டரும் பணிக ளிவைமுத லெவைக்கும்
அருந்திடு மருந்தோ டஞ்சனங் குடோரி
பொருந்திய நசியம் பூச்சொடு துவாலை
முறுக்கிடு மருந்துகள் முறைமுறை துவைத்து
வறுத்தெடுத் தொற்றும் மருந்துகள் பலவுந்
தேளொடு புலிமுகச் சிலந்திசெவ் வட்டை
தாழ்விலா வறணை தருநச்சுப் பல்லி
கண்டறி வாளை கடியன்கா ணாக்கடி
மண்டுகம் பொல்லா வலியுடைக் குளவி
புலிகடி நாய்கடி பூனை கடியுடன்
எலிகடி முதலா வியம்பிய வெவைக்கும்
மருந்துட னெண்ணெய் தூள்வகை பலவொற்றுத்
திருந்துற வஞ்சினஞ் சிறந்திடு நசியம்
ஐயமில் முந்நூற் றிருபத்து மூன்று
செய்யதோர் விருத்தந் தெரிந்துரை செய்தான்

என்பது காட்டி நிற்கும். இதனையியற்றியோன்

அரங்க நாத னருளிய புதல்வன்
……………………………..
……………………………..
வரம்பெறு கவிஞன் வரதபண் டிதன்

என அப்பாயிரங் கூறும். இதன் தற்சிறப்புப் பாயிரத்தில்

பொங்கரவக் கடலுலகோர் புகழமுதா
கரமெனப்பேர் புனைந்து சீற்றந்
தங்கரவு முதலியபல் விடந்தீர்க்கும்
மருந்துபல சாற்ற லுற்றேன்.

என்று கூறுமுகத்தால் இதன் பெயர் அமுதசாகரமென்பது பெறப்படும். விடஜந்துகள் தீண்டினாலேற்படுங் குணங்களைக் கூறி அவற்றை நிதானித்தறியு முபாயங் காட்டிப் பின் மருந்து கூறுவதே முறையாயினும், முன்னர் சித்தராரூடம் அம்முறையே கூறியிருப்பதால் அவற்றை மீண்டு மெடுத்தியம்பாது மருந்துகளை மட்டு மிதிலே யொன்றாயத் திரட்டிக் கூறுவதாகத் தற்சிறப்புப் பாயிரத்தின் நாலாவது செய்யுளிற் செப்புகிறா ரிதனாசிரியர். அவ்வாறே இந்நூலமைந்திருக்கக் காணலாம்.

இதனை வரதபண்டிதர் செய்தாரென்பதால், இதுவும் 18ம் நூற்றாண்டுக்குரியதெனக் கொள்ளலாம். இதனைத் திருகோணமலை சு. தம்பையாபிள்ளை 1892ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டார்.