உரையாசிரியர். ம. க. வேற்பிள்ளை
மட்டுவில் கணபதிப்பிள்ளை மைந்தன் வேற்பிள்ளை அவர்கள் ம. க. வேற்பிள்ளை என்றாயினர். புலோலி என்னுங் கிராமத்து உயர்குடித்தோன்றலாகிய வேலாயுதபிள்ளை கணபதிப்பிள்ளை உடையார்தான் வேற்பிள்ளை அவர்களின் தந்தை. பிலவங்க வருடம் 1848 ஜனவரி எட்டாம்திகதி கணபதிப்பிள்ளை அவர்களுக்கு தவப்புதல்வராய் வேற்பிள்ளை தோன்றினார். ஐந்து வயதானதும் தந்தை வித்தியாரம்பம் செய்து வைத்தார். பின்னர் மட்டுவிலிலிருந்த தாய்வழி உறவினரான சண்முகம் சட்டம்பியாரிடம் அழைத்துச்சென்று தமிழ்நெடுங்கணக்கு முதலியவற்றைக் கற்கும்படி வேண்டினார். தந்தையாரின் வேண்டுதலுக்கு அமைவாகத் தமிழ் நெடுங்கணக்கைக் கற்பித்த சட்டம்பியார் நீதி நூல்கள் நிகண்டு முதலியனவற்றையும் கற்பித்தார். வேற்பிள்ளையிடம் காணப்பட்ட தமிழார்வம், விவேகம் என்பவற்றை கண்டுகொண்ட சட்டம்பியார் தந்தையாருக்கு தகவல் கொடுத்தார்.
அந்த காலத்திலே நல்லூரில் சிறந்த புலவராயிருந்த கார்த்திகேய ஆசிரியரிடம் மகனை அழைத்துச்சென்ற தந்தையார், இவருக்கு இலக்கிய இலக்கணங்களை கற்பிக்குமாறு வேண்டினார். அவரிடம் கல்வி பயின்ற வேற்பிள்ளை அவரைத்தொடர்ந்து ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரிடங் கற்றார்கள். நாலவர் சென்னை சென்றபோது இவரும் உடன்சென்று அங்கிருந்து கொண்டும் கற்றதுண்டு. வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடம் பாடங்கேட்கும் வாய்ப்பையும் வேற்பிள்ளை அவர்கள் பெற்றிருந்தார்கள். அதனால் கம்பராமாயணத்தில் மிகுந்த புலமைபெற்றிருந்தார்கள். வண்ணார்பண்ணையில் சில மாணவர்களுக்கு இவர் பாடஞ்சொன்னதுமுண்டு. அந்தவேளையில் வித்துவசிரோமணி கணேசையர் அவர்களும் வேற்பிள்ளை அவர்களிடம் பாடங் கேட்டதுண்டு.
பிள்ளை அவர்கள் அந்தக்காலத்திலேதான் திருவாதவூரடிகள் புராணத்திற்கு உரை எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்கள். தாமெழுதும் விரிவுரையை அவ்வப்போது வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளைக்கு காட்டுவதுண்டு. விரிவுரை முழுவதையும் வாசித்த வித்துவசிரோமணி அவர்கள் வேற்பிள்ளை அவர்களின் உரைத்திறத்தினையும், சைவசித்தாந்த அறிவின் வியாபகத்தையும் வியந்து உரையாசிரியர் என்னுஞ் சிறப்புப் பெயரை வழங்கினார்கள். திருவாதவூரடிகள் புராணத்திற்கு பிள்ளையவர்கள் எழுதிய விரிவுரையே அவர் இலக்கிய வன்மையையும் சைவசித்தாந்த சாத்திர உயர்திறனையும் காட்டுவனவாகும். புலியூரந்தாதி, அபிராமியந்தாதி என்னும் நூல்களுக்கும் வேற்பிள்ளை எழுதிய உரை பலராலும் பாராட்டுப்பெற்றது.
உரையாசிரியர் மட்டுவிலில் இருந்த வேளை ஒரு பாடசாலையை தாபிக்க வேண்டும் என்று விரும்பினார். அக்காலத்திருந்த ஆயக்காரரின் சகோதரர் காசிநாதர் ஒரு நைட்டிக பிரம்மச்சாரி. உரையாசிரியரின் கல்வி ஆற்றலை விளங்கிக்கொண்ட காசிநாதர் நிலங்கொடுத்து ஒரு சிறிய பாடசாலையை உரையாசிரியரின் அநுசரணையுடன் உருவமைத்துக் கல்வி கற்பிக்க வைத்தார்கள். சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபர் அப்பாடசாலைக்கு உரையாசிரியர் சேவையை வேண்டி இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். அங்குசென்று சிலகாலம் அப்பாடசாலையில் உதவியாசிரியராக இருந்த பிள்ளையவர்கள் ஓய்வுபெறுவதுவரை தலைமையாசிரியராக விருந்து பணிபுரிந்தார்கள். வித்துவான் ந. சுப்பையாபிள்ளை, திருவாடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் போன்றோர் அக்காலத்து பிள்ளையவர்களிடம் கல்வி கற்றவர்கள். பண்டிதர் ஏகாம்பரநாதன், வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர் போன்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிள்ளையவர்களின் குறிப்பிடத்தக்க மாணாக்கர்கள்.
சிதம்பரம் நடராசப்பெருமானையே தரிசித்து துதிக்க வேண்டும் என்ற பெருவிருப்பினால் தலைமையாசிரியர் பதவியினின்றும் ஓய்வுபெற்ற பின்னரும்கூட உரையாசிரியர் வேற்பிள்ளை அவர்கள் சிதம்பரத்திலேயே தங்கிவிட்டார்கள். ஶ்ரீலஶ்ரீ நாவலர் பெருமானுடைய தொடர்பினால் வேற்பிள்ளை அவர்களது பேச்சு எழுத்து எல்லாம் நாவலர் பெருமானுடையது போன்றே அமைந்துவிட்டன.
உரையாசிரியர் என்னும் சிறப்புப் பெயருக்குரிய வேற்பிள்ளை அவர்கள் திருவாதவூரடிகள் புராணத்திற்கு கண்ட விருத்தியுரை உயர்வானது. மேலாகப் புலியூரந்தாதி உரை, அபிராமி அந்தாதி உரை, கெவுளி நூல் விளக்கவுரை என்பவற்றையுஞ் செய்துள்ளார். வேதாரணீய புராணம், சிதம்பரம் சிவகாமியம்மை சதகம் என்னும் நூல்களை பரிசோதித்துப் பதிப்பித்து வெளிப்படுத்தியுள்ளார். பிரசங்கம் செய்வதிலும் நாவலர் பாணியில் பேசுவதிலும் இவர் வல்லவராய் இருந்தனர் என்ப.
செய்யுள் இயற்றுவதிலும் வல்லவராயிருந்த இவர், புலோலி வையிரவக் கடவுள் தோத்திரம், ஈழமண்டல சதகம், புலோலி பர்வதவர்த்தனியம்மை தோத்திரம் என்னும் நூல்களை ஆக்கியுள்ளார். ஈழமண்டல சதகத்திலிருந்து ஒரு பாடலை இங்கு காண்போம்.
பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வரத்தம்
புராதன நியாயோததி
புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயணப்
பொருவறு மளக்கர் புவியிற்
நுன்னித் துலங்கிமலி சூதனொலி மாலையாந்
தொல்பயோ ததிகாவியத்
துங்கவார் கவிபார தப்பரவை லக்கணத்
தொடுகடல்க டுய்த் தெழுந்தே
மின்னிலந் திடுக்கிட விடித்தியாழ்ப் பாணகிரி
மீதேறி படிந்துசெந் தமிழ்மேதை நிதிமாரி
மிகவும்பொ ழிந்திட்டதிச்
சன்மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திடச்
சாந்தநா யகிசமேத
சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே
உரையாசிரியர் இந்தியாவில் வாழந்த காலத்தில் அங்குள்ளவர்களுக்கு ஈழத்தின் பெருமையை அறிவுறுத்துவதற்காக செய்யப்பட்டது ஈழமண்டலசதகம் என்பர் வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்கள்.
இறுதி நாளில் சிதம்பர தரிசனத்துடனாகி அங்கிருந்த வேளை 1930ம் ஆண்டு கூத்தப்பெருமான் தாள்களிற் சங்கமமானார் என்ப.

[...] விளங்கிய கோப்பாய் சபாபதி நாவலர், உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, மகாவித்துவசிரோமணியாய் விளங்கிய [...]
Another test comment