வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை

சிறுகுறிப்பு
உசாத்துணை : இலக்கிய வழி - இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளைபொன்னம்பலபிள்ளை நாவலர் அவர்களுக்கு மருமகரும் மாணவருமாவார்.
கந்தபுராணத்திலே திருமணப் படலங்களும் மற்றைய விசேட பகுதிகளும் பொன்னம்பல பிள்ளைக்குப் பாடஞ்சொல்லி வைக்கப்பட்டன. திருச்சிற்றம்பலக் கோவையார் உரை, திருககுறள் பரிமேலழகருரை, நன்னூல் விருத்தியுரை, ஆகிய மூன்று நூல்களையும் வசனம் வசனமாக நாவலர் அவர்களிடம் படித்தவர் பொன்னம்பலபிள்ளை. அவருடைய குருசிஷ்ய படிப்பு அவ்வளவே. அப்பொழுது பிரசித்தி பெற்று விளங்கிய கோப்பாய் சபாபதி நாவலர், உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, மகாவித்துவசிரோமணியாய் விளங்கிய பிரமசிறீ சி. கணேசையர் என்பவர்களை உள்ளிட்டவர்கள் – யாழ்ப்பாணத்திற் படித்தவர்கள் என்றிருந்தவர்கள் எவர்களோ அவர்கள் – அனைவரும் பொன்னம்பலபிள்ளையிடம் பாடங்கேட்டவர்கள்.
தென்னிந்தியாவில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களை நடமாடும் வாசிகசாலை என்பார்கள். அவ்வாறே இங்கே பொன்னம்பலபிள்ளை நடமாடுஞ்சர்வகலாசாலையாக விளங்கினார். தெருக்கள், தெருத்திண்ணைகள், குளக்கட்டுக்கள், மரநிழல்கள், பொன்னம்பலபிள்ளை பாடம் சொல்லும் இடங்கள். பொன்னம்பலபிள்ளை அழகுகள், நவ இரசங்கள் சொட்டச் சொட்டப் பாட்டுக்களுக்கு உரை விரித்தற்கென்றே பிறந்தவர் என்று சொல்லுவார்கள். அவரை மாணவர்களாகிய மதுகரங்கள் எப்போதும் சூழ்ந்துகொண்டே இருப்பார்கள். உச்சியிலிருந்து உள்ளங்கால் பரியந்தம், உள்ளங்காலில் இருந்து உச்சி பரியந்தம் பொன்னம்பல பிள்ளையின் உருவம் இலக்கிய இரசனையினால் ஆனது, தனிக்கற்கண்டிற்செய்து மோதகம்போல இலக்கிய இரசனை மயமாயிருந்தார் பொன்னம்பலபிள்ளை. புதிதுபுதிதாகத் தமக்குத்தோன்றுகின்ற இலக்கிய இரசனையை யாருக்காவது வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டாமை பொன்னம்பலபிள்ளையின் நித்திய கலியாணகுணம். பொன்னம்பலபிள்ளை இந்த மாட்டாமையாகிய இரச குணத்தை ஒருவாறு தணித்து முட்டுத் தீர்வதற்கு உபகாரஸ்தலங்களாயப் புராணபடனம் நடைபெறுகின்ற முக்கிய சைவாலயங்கள் அமைந்திருந்தன.
யாழப்பாணத்திற் பிரசித்திபெற்று விளங்குகின்ற வண்ணை வைத்தியேசுவரன் கோயிலின் வித்தியா மண்டபம் ஒருகாலத்தில் நாவலர் அவர்களின் சைவப்பிரசங்கங்கள் பிரவாகிக்கும் இடமாயிருந்தது. அதனைத்தொடர்ந்து அம்மண்டபம் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை நவரசங்களுங் குதிகொண்டாடப் புராணங்களுக்கு உரை விரிக்கும் இடமாய் மாறி ஒரு சர்வகலாசாலை ஆயிற்று.
பொன்னம்பலபிள்ளை வியாக்கியானஞ் செய்யும்போது ஒருபுறத்தே மாணவர்களும் வித்துவான்களும் ஏடும் எழுத்தாணியுமாயிருப்பார்கள். மற்றொருபுறத்தே பெண்களும் ஏனைய இடங்களில் ஆண்களும் எள்ளிட இடமின்றி இருப்பார்கள். குண்டூசி விழுந்தாற் கேட்கும். வாசிக்கிறவர் எச்சுதியில் எந்த இராகத்துக்கு பாடலை வாசிப்பாரோ அச்சுதியில் அந்த இராகத்துக்கு பொன்னம்பலபிள்ளை உரைவிரிப்பார். விசேட வியாக்கியானங்கள் அலையலையாய் எழுந்து புரண்டுகொண்டிருக்கும். பொன்னம்பலபிள்ளைக்கு வாசிக்கின்றவர்கள் விசேட ஆயத்தம் செய்து கொண்டு வருவார்கள். எந்த இடம் அந்த இராகத்திற்கு வாசிக்க வேண்டுமோ அந்த இடம் அந்த இராகத்திக்கே வாசிக்கப்படும். அன்றி, காலத்துக்கேற்பவும் இராகம் மாறுதல் அடையும். பொன்னம்பலபிள்ளைக்கு வாசிக்கிறவர்களுக்குப் பிரத்தியேகாமான மரியாதை உண்டு.
பொன்னம்பலபிள்ளைக்கு உள்ளக் கிளர்ச்சி எவ்வளவு அமையுமோ அவ்வளவுக்கு அவர் விரிக்கும் உரைக்கருத்துகளும் புதியன புதியனவாய் ஊற்றெடுத்து பிரவாகிக்கும்.
பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் றாள்தன் கையைப்
பாசம தகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள் வைத்து
நேசமொ டளித்தேன் என்னா நெடுமறை மனுக்கள் கூறி
வாசநல்லுதகமுய்த்தான் மருகனென்றவனையுன்னி.
என்ற திருவிருத்தம் கந்தபுராணத்திற் சுவாமி திருக்கல்யாணப்படலத்தில் வருகின்றது. இமயமலை அரசன் தன் தவப்புதல்வியாகிய உமாதேவியாரின் திருக்கரத்தைப் பரஞ்சுடராகிய பரமசிவத்தின் திருக்கரத்துள் வைத்துத் தாரைவார்த்துத் தத்தஞ் செய்கின்றான். பாட்டிறுதியில், “மருகனென்றவனையுன்னி” என்று ஒரு தொடர் வருகின்றது. அவனை – அந்த பரமசிவனாகிய பரமசிவத்தை, மருகன் என்று உன்னி – தனக்கு வந்து வாய்த்த மருகன் என்று மகிழ்ந்து தத்தம் செய்தான் என்று உரை விரிப்பது வழக்கம்.
ஆனால் ஒருநாள் பொன்னம்பலபிள்ளை அப்பாடலுக்கு உரைசொல்லும்போது நினையாப்பிரகாரம் அந்த தொடருக்கு வேறொரு பிரகாரம் பொருள் விரித்து வியாக்கியானஞ் செய்தார்.
அந்த பரமசிவத்தை, மருகனென்றவனை – ஒரு காலத்திலே தனது அறியாமையாலே தனக்கு மருகன் தானே என்று அகங்கரித்த அந்தத் தக்கனை (அவன் பட்ட பாடுகளை), உன்னி – இமயமலை அரசன் அப்போது சிந்தித்து, தான் அவ்வாறு நினையாமல், புதல்வியை உலகமாதா ஆகவும், பரமசிவத்தை முழுமுதற் பரம்பொருளாகவும் கருதித் தத்தஞ்செய்தான் என்பது பொன்னம்பலபிள்ளையின் அன்றைய வியாக்கியானத்தின் சிறிய சுருக்கம்.
இந்த வியாக்கியானம் ஓர் இரவு நடந்தது. அடுத்தநாட் காலை தொடக்கம் பலவாரம், பலமாதம், பலவருடகாலம் “மருகனென்றவனையுன்னி” என்ற தொடர் படித்தவர் மத்தியிற் பேசப்பட்டு வந்தது. இன்றைக்குங் கிராமமாந்தர்களிற், சுவாமி கலியாணப்படிப்புத் தினத்தில் மேற்படி தொடரும், அதனைத்தொடர்ந்து, பொன்னபம்பலபிள்ளையின் அருமைப்பாடும் எடுத்து பேசப்பட்டு வருகின்றன.
“ஆவத்த நேர்மாக்கள் வாழ் அரிபுரம்”
என்பது மார்க்கண்டேயப் படலத்தில் வருகின்றதொரு தொடர். இத்தொடரில் ஆ என்பதற்குக் காமதேனு என்று பொருள் கூறி, அப்பாலுள்ள சொற்களுக்குக் காமதேனுவோடியையப் பொருள் பண்ணி வந்தார்கள். ஒரு நாட் பொன்னம்பலபிள்ளை அந்தத் தொடரை, “ஆபத் அத்தம்” என்று பிரித்து, ‘ஆபத்து காலத்தில் உதவும் சேமநிதிபோன்றவர்கள் அரிபுரத்து மனிதர்கள்’ என்று வியாக்கியானஞ் செய்தார். தபம் என்னுஞ் சொல் தவம் என்று வருவதுபோல, ‘ஆபத்’ ‘ஆவத்’தென நின்றது.
இவ்வாறே எத்தனையோ தொடர்களுக்கும் பாட்டுக்களுக்கும் விசேட கருத்துக்கள் பொன்னம்பலபிள்ளையின் மாணவ பரம்பரையில் உள்ளவர்கள் நூதனம் நூதனமாக சொல்லுவார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குப் போகின்ற வித்துவான்களை மதுரைத்தமிழ்ச்சங்கத் தாபகரான பண்டித்துரைத்தேவர் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை எப்படியிருந்து எவ்வாறு வியாக்கியானஞ் செய்வார் என்று வினவி, வினவி அவர்கள் சொல்வதைக் கேட்டு கேட்டு வாயூறுவாராம்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவருள், வன்றொண்டச் செட்டியார் எனபவர் ஒருவர். மிகப்படித்தவர். இவரைப்பற்றி உ.வே. சாமிநாதையர் அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். இந்த வன்றொண்டச்செட்டியாருக்குப் பிற்காலத்திற் கண்பார்வை மங்கிப்போனது. கண்ணின் சக்தி அனைத்தும் செவிக்குப்போய்விட்டது. அவர் செவி, நுண்செவி. “செவிக்குணவு இல்லாத போது” என்ற திருக்குறள் செட்டியாருக்குப் பொருத்தமானது. செவிக்குணவு தேடி ஒருமுறை செட்டியார் யாழ்ப்பாணம் வந்தார். வந்தவர் பொன்னம்பலபிள்ளை புராணத்துக்கு பொருள் விரிக்கும் இடத்துக்குப்போய் ஒரு புறத்தில் இருந்தார். வியாக்கியானந் திரை எறிகின்றது. செட்டியாருக்குத் தெவிட்டாது தித்தித்து அமுது ஊறுகின்றது. உடம்பு வெடிக்கின்றது போன்ற ஆனந்தம் மேலிடுகின்றது. செட்டியார் இருந்தபடி மெல்ல மெல்ல இடம்பெயர தொடங்கிவிட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் எட்டிப் பொன்னம்பலபிள்ளையைக் கட்டித் தழுவி விட்டார். ஆராமையின் ஆற்றாமை அது,
நாவலர் அவர்களுக்குப் பெரியபுராணம் போலப் பொன்னம்பலபிள்ளைக்கு கம்பராமாயணம் நரம்புத் தூய்களிலும் ஊறிக்கிடந்தது. சீவகசிந்தாணமணியிலும் பொன்னம்பலபிள்ளைக்கு விசேட பயிற்சி உண்டு.
சீவகசிந்தாமணியை முதல்முதற் பதித்த போது உ. வே. சாமிநாதையர் ஒரு பிரதியைப் பொன்னம்பலபிள்ளைக்கு அனுப்பி ஒரு கடிதமும் எழுதியிருக்கின்றார். அக்கடிதம் இது:
“பாற்கடலின் ஆழம் மந்தாமலைக்குத்தெரியுமேயன்றி வேறு எந்த மலைக்குந் தெரியாது. அது போலச் சீவகசிந்தாமணியின் ஆழம் உங்களுக்குத்தான் தெரியும். ஏதோ ஒருவாறு நான் பதிப்பித்திருக்கின்றேன். தாங்கள் அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்.” (என் சரித்திரம் – உ. வே. சா)
இப்படிச் சாமிநாதையர் எழுதுவாரேயானாற் பொன்னம்பலபிள்ளையின் சிந்தாமணிப்பயிற்சி எப்படியிருக்கும் என்பது சிந்திக்கத்தக்கது.
கம்பராமாயண இரசனையுஞ் சிந்தாமணி முதலிய காவிய இரசனைகளையுங் கந்தபுராணத்துக்கு வியாக்கியானஞ் செய்கின்றபோது ஏற்ற ஏற்ற இடங்களிற் பொன்னம்பலபிள்ளை அள்ளிச்சொரிவார். அது வித்துவான்களாகிய மதுகரங்களுக்குப் புத்தம்புதிய அமிர்தமாய்ப் பொங்கிக்கொண்டிருக்கும்.
பொன்னம்பலபிள்ளை கந்தபுராணக் கருத்துக்களின் உயர்வையுங் காவிய இரசனைகளின் அளவையும் நன்கு அறிந்தவர். காவிய இரசனைகளைப் பொன்னம்பலபிள்ளை தலைமறைவாகவே வைத்துக்கொண்டார். நாவலர் அவர்கள் தென்னிந்தியாவிற்கு போகின்ற காலங்களிலே சபாபதிச்செட்டியார் என்பவரின் வீட்டில், பொன்னம்பலபிள்ளை வித்துவ மதுகரங்களுக்குச் சீவகசிந்தாமணியைத் தித்தித்துக் காட்டுவதுண்டு. சிந்தாமணி பொன்னம்பலபிள்ளைக்கு மனப்பாடம். அக்காவியம் தன்னைக்கெடுத்து விட்டது என்றுஞ் சிலசமயங்களில் சொல்லுவாராம். அதனை அதற்குரிய வரிசையில் வைத்து அவர் வழங்கி வந்தார்.
நாவலர் அவர்களுக்கு பிறகு ஒரு சமயம் பொன்னம்பலபிள்ளை கம்பராமாயண இரசனை மிகுதியினாலே வண்ணை வைத்தியேசுவரன் கோயிலிலே இராமாயண வியாக்கியானம் ஆரம்பித்தார். அது காவிய இரகசிகர்களுக்கு கிடைத்தற்கரிய அமிரதபானமாக இருந்தது. எனினும், அருணூல்களுக்குரிய கோயிற் சந்நிதியில் அது அடாது என்ற கருத்தும் இருந்தது. பொன்னம்பலபிள்ளைக்கு எதிர்சொல்ல ஆள் ஆர்? நாவலர் அவர்களும் இல்லையே. கம்பராமாயண இரசனை பெருகியது. வாலிவதை உச்சநிலையை எய்தியது. அவ்வளவேதான் நடந்தது. அந்த அளவிற் பொன்னம்பலபிள்ளை இரகசிகர்கள் கதறக்கதற மறைந்துவிட்டார். வாலிக்கு அம்புவிட்ட சோகம் பொன்னம்பலபிள்ளையை இழந்த சோகம் ஆயிற்று.
பொன்னம்பலபிள்ளையின் காவிய இரசனைகளை, கண்டவர்களைக் கேட்டவர்களைக் கண்டவர்கள் தாமும் இக்காலத்துச் சாதாரண இரசனைகளையுங் கவிதைகளையுஞ் சகிக்கமாட்டார்கள்.
இலக்கியங்களிலே உயிரான இரசனைக்கு உரிய பொருள் எது என்று தெரிதல் வேண்டும்.
தெரிந்ததன்மேல் இரசனையை எடுத்துக்காட்டுதற்கு ஏற்ற பாசைநடை கைவரல் வேண்டும்.
இந்த இரண்டுமாயிருந்தவர் பொன்னம்பலபிள்ளை.
பொன்னம்பலபிள்ளையின் சங்கநூற்பயிற்சி பற்றித் திருகோணமலைக் கனகசுந்தரம்பிள்ளை நற்றிணை உரை முகவுரையில் எழுதியிருக்கின்றார். நற்றிணை உரையாசிரியருக்கு அதில் உண்டான சந்தேகங்களை பொன்னம்பலபிள்ளை தீர்த்து வைத்தார் என்று, அதில் வருகிறது.
பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வர்த்தம்
புராதன நியாயோததி
புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயணப்
பொருவறு மளக்கர்புவியிற்
றுன்னித் துலங்கிமலி சூதனொலி மலையாந்
தொல்பயோ ததிகாவியத்
துங்கவார் கரிபார தப்பரவை லக்கணத்
தொடுகடல்க டுய்த்தெழுந்தே
மின்னித் திடுக்கிட விடித்தியாழ்ப் பாணகிரி
மீதேறி நல்லைமுடிமேன்
மேவிப் படிந்துசெந் தமிழ்மேதை நிதிமாரி
மிகவும் பொழிந்திட்டதிச்
சன்மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திடச்
சாந்தநா யகிசமேத
சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே.
இச்செய்யுள் ஈழமண்டல சதகத்திலுள்ளது. இதனை இயற்றியவர்கள் பொன்னம்பலபிள்ளையின் தலைசிறந்த மாணவரும், நயம்பட உரை விரிக்குந் திறத்திற் பொன்னம்பலபிள்ளையைப் பெரிதும் பின்பற்றியவர்களும், திருவாதவூரடிகள் புராணத்திற்குச் சிறந்ததொரு விருத்தியுரை எழுதிப் பொன்னம்பலபிள்ளையின் முன்னிலையில் அரங்கேற்றிப் பொன்னம்பலபிள்ளையால் உரையாசிரியர் என்ற பட்டம் சூட்டப்பெற்றவர்களுமான ம. க. வேற்பிள்ளைப் புலவர் அவர்கள்.

0 Comments