விசுவநாத சாஸ்திரியார்
விசுவநாத சாஸ்திரியார் 18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணத்து அராலியிலே வசித்தவர். நாராயணசாஸ்திரியாருக்கு மைந்தர். தமிழ் இலக்கிய இலக்கணங்களிற் சிறந்த புலமையுடையவராயிருந்தமையோடன்றிச் சோதிட கணிதத்திலுஞ் சிறந்தவராய் இருந்தவர். அக்காலத்திலே இலங்கையிற்கணிக்கப்பட்ட பஞ்சாங்கங்களுக்குள்ளே இவருடைய பஞ்சாங்கத்துக்கே அதிக மதிப்புண்டு. இலங்கைக் கவர்ணரால் ‘இராசாவின் கணிதர்’ என்றும் பட்டளிக்கப்பட்டவர். இவர் கீர்த்தி பெற்ற பெரிய சோதிடகணிதராயிருந்தும், 1828ம் ஆண்டு பங்குனிமாதம் 28ம் திகதி தோற்றிய சந்திரகிரகண கணிதமொன்றிற் சிறிது பிழையுற்றார் என்பர்.
இவர் இயற்றிய நூல்கள் வண்ணைக்குறவஞ்சி, நகுலமலைக்குறவஞ்சி முதலியன. கிரகணங்கணிக்கும் முறையை எவர்க்குந் தெரியும் வண்ணம் செய்யுமாறு வாக்கிய கரண கிரகணம் என்னுமொரு நூலையும் இயற்றினவர். இது ஒயிசிங்தன் தேசிகர் செய்த சோதிடசாத்திர நூலோடு சேர்த்து அச்சிடப்பெற்றுள்ளது. இவர் கவித்திறமுணர இவர் பாடிய வண்ணைக் குறவஞ்சியின் காப்புச் செய்யுளை இங்கே தருதும்
சித்திர முளரிக் கண்ணர் சிறந்தவா மனத்த ராசை
வத்திர முடைய ரஞ்சக் கரத்தர்பொன் வனத்தா மத்தர்
இத்திற வயன்மா லீச னிவர்களி லிறைவ ரான
ஆத்தர்தாள் வணங்கி வண்ணைக் குறவஞ்சி யறைகு வேனே.
இக்கவியில் முன்னீரடியும் பிரமா, விட்டுணு, சிவன் என்னு மூவருக்குஞ் சிலேடை. அப்பொருளை மூவருக்குமிலக்கமிட்டு முறையே எழுதுவாம். சித்திரம் அழகு.
முளரிக்கண்ணர்:-
1. தாமரைப்பூவை யாசனமாக வுடையவர். முளரி – தாமரை. கண் – இடம்.
2. தாமரை மலர்போலுங் கண்ணுடையவர்.
3. அக்கினி கண்ணுடையவர். முளரி – அக்கினி.
சிறந்தவாமனத்தர்:-
1. சிறந்து அவாம் அன்னைத்தர் – சிறப்புற்று விரும்பப்படுகின்ற அன்ன வாகனமுடையவர். அவாவும் என்பது அவாம் என நின்றது.
2. சிறந்தவாமனத்தார் – சிறந்த குறளுருவங் கொண்டவர். வாமனம் – குறள்.
3. சிறந்த ஆம் மனத்தர் – அன்பிற் சிறந்தனவாகிய மனங்களில் இருப்பவர்.
ஆசைவத்திரமுடையவர் :-
1. திக்குமுகமுடையவர். ஆசை – திக்கு. வத்திரம் – முகம்.
2. பொற்சீலையுடையவர். ஆசை – பொன். வத்திரம் – சீலை.
3. திக்காசிய சீலையுடையவர். ஆசை – திக்கு
அஞ்சக்கரத்தர் :-
1. அஞ்சம் கரத்தர் – அன்னக்கொடிதாங்கிய கையையுடையவர்
2. அம் சக்கரத்தர் – அழகிய சக்கராயுதமுடையவர்.
3. அஞ்சு அக்கரத்தர் – ஐந்தெழுத்தாகிய மந்திர முடையவர். அஞ்சு – ஐந்தின்போலி.
பொன்வனத்தாமத்தர்:-
1. பொன்வனம்தாமத்தர் – பொன்னிறமாகிய ஒளியுடையவர். தாமம் – ஒளி
2. பொன்வனம்தாமத்தர் – அழகிய துளசி மாலையையுடையவர். வனம் – துளசி
3. பொன்வனம்தாமத்தர் – பொன் போன்ற நிறத்தையுடைய கொன்றை மாலையையுடையவர். தாமம் – கொன்றை.

0 Comments