வல்வை வயித்திலிங்கபிள்ளை
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலே சங்கரக் குரிசில் என்பவருக்கு புதல்வராக 1852இல் பிறந்தவர் வயித்திலிங்கபிள்ளை. உரிய வயதில் வித்தியாரம்பஞ் செய்விக்கப்பெற்ற இவர், அவ்வூர் பாடசாலை ஒன்றிலே கல்வி கற்றனர். இலக்கண இலக்கியங்களை உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் கற்றார். தென்னிந்தியா சென்று சமஸ்கிருத நூல்களையுங் கற்றார். தருக்கம், சோதிடம், வானசாஸ்திரம் முதலிய கலைகளிலும் பாண்டித்தியம் உடையவரானார். சி. வை. தாமோதரம்பிள்ளை போன்ற பெரியோர்களால் இயற்றமிழ் போதகாசிரியர் என்னும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் கவிகள் இயற்றும் வல்லமை உடையவராக இருந்தார். சைவசித்தாந்த சாஸ்திரங்களையும் துறைபோகக் கற்றவர். சைவசமயத்தில் நிறைந்த அபிமானி. அதனால் அதனை விருத்தி செய்யவேண்டும் என்ற நோக்கில் சைவாபிமானி பத்திரிகையை வெளியிட்டவர்.
அந்தக் காலத்திலே ராவ் பஹதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை என்றொரு நூலை எழுதி வெளியிட்டவர். அதற்கு மாறாகச் ஸ்ரீஅருளம்பலமுதலியார் என்பவர் சைவமகத்துவதிக்காரம் என்னுங் கண்டன நூலை வெளியிட்டார். இதற்கு ஒரு கண்டன நூலை வல்வெட்டித்துறை வயித்திலிங்கம்பிள்ளை சைவ மகத்துவதிக்கார நிக்கிரகம் என்னுங் கண்டன நுலை எழுதி முதலியாரின் வாயை அடக்கினார்.
இவர் சைவாசாரத்திற் சிறந்து விளங்கினார். அதேவேளை தம்மைப்பார்த்தே மற்றவர்கள் சைவாசார சீலர்கள் ஆகும்படியான நடைமுறைகளை கைக்கொண்டு வாழ்ந்தார். தாம் வெளிக்கொணர்ந்த சைவாபிமானிப் பத்திரிகையை அச்சிடுவதற்கு ஒரு அச்சகத்தைத் தாபித்திருந்தார். அங்கே தாமியிற்றிய நூல்களையும் சைவ நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தினார். இவரியற்றி வெளிப்படுத்திய நூல்களான சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதி நிர்ணய புராணம் என்பனவாம். இவரியற்றிய உரைகள் கந்தபுராணத்து அண்டகோசப் படலவுரை, தெய்வயானை திருமணப் படலவுரை, வள்ளியம்மை திருமணப் படலவுரை, கல்வளையந்தாதியுரை, கந்தரலங்காரவுரை என்பனவாகும். இவர் திருத்தி அச்சிட்ட நூல் நாற்கவிராச நம்பியகப்பொருள் விளக்கவுரை என்பது.
இவரியற்றிய சிந்தாமணி நிகண்டிலிருந்து ஒரு பாடல்.
சீர்செறி செஞ்சடைக்கட் டிகழ்மதிப் பிளவுதாங்கும்
ஏர்செறி கரிமுகன்ற னிணைமல ரடியையேத்தி
நேர்செறி பிளைஞரோர் சொற் கொருபொரு ணேராயோரப்
பார்செறி நிகண்டுசிந்தா மணியெனப் பகர்வனன்றோ
சைவசமயத்திற் சிறந்து விளங்கிய இவர் நம்மவர் பலரையும் சைவாசாரமும் சிவபக்தி யுமுடையராய் வாழவுஞ் செய்தார். மட்டக்களப்பிலே சிலகாலம் வாழ்ந்தவர். அவ்வேளை அவ்வூர் வித்துவான் பூபாலபிள்ளை தமக்கேற்பட்ட சந்தேகங்களை இலக்கண ஐயங்களை இவரிடங் கேட்டு தெளிந்துள்ளார். சுத்தனாய், உயர் நிலையாளராய வயித்திலிங்கம் அனைவரும் ஏங்கி நிற்க 1901 சார்வதி ஆவணியில் இயற்கை எய்தினார்.

0 Comments