பிரம்மஶ்ரீ செந்திநாதையர்

சிறுகுறிப்பு
உசாத்துணை - ஈழகேசரி ஆண்டு மலர் - 1939(திருத்தங்கள்: சிவா. பஞ்சலிங்கம், கலாநிதி கணேசலிங்கம்)
சிவபூமி எனப்படுகின்ற இலங்கைக்கு சிரசாய் விளங்குவது யாழ்ப்பாணம். இவ் யாழ்ப்பாணத்தே அமைந்து சிறப்பது குப்பிழான் எனும் கிராமம். இந்த கிராமத்திலே சிவபூஜாதுரந்தரராகிய பிரம்மஸ்ரீ சிந்நயஐயர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்களது மனைவியார் பெயர் கவுரியம்மையார். இவர்களுக்கு புதல்வர்கள் மூவர், புதல்வி ஒருத்தி. இவர்களுள்ளே செந்திநாதையர் அவர்களே மூத்தவர் ஆவார்கள். சம்புநாதையர் மற்றும் பொன்னையர் இவரது சகோதரர்கள். செந்திநாதையர் 1848ம் ஆண்டு ஐப்பசி மாதத்து இரண்டாம் திகதி அவதரித்தார்கள்.
இவர்கள் ஐந்தாம் வயதிலே வித்தியாரம்பம் செய்யப்பெற்றுத் தமது மாமனாராகிய புன்னாலைக்கட்டுவன் பிரம்மஸ்ரீ கதிர்காம ஐயர் அவர்களிடத்திலே வடமொழியும் தென்மொழியும் கற்று வந்தார்கள். இவரிடம் அன்பு, அருள், வாய்மை முதலிய நற்குணங்கள் இளமையிலேயே பதிந்து கிடந்தன. ஏழாவது வயதிலே வேதவிதிப்படி உபநயனம் செய்யப்பெற்றார்கள். பத்து வயது ஆனவுடன் ஆங்கிலக்கல்வியை மத்திய கல்லூரியிலே கற்று வந்தார்கள். இருபதாம் வயதிலே அம்மொழியில் கற்பதை விடுத்து, தமிழ் இலக்கண இலக்கியங்களை ஸ்ரீமத் சம்பந்தப் புலவர் அவர்களிடத்திலே கற்றுத் தேறினார்கள். பின்னர் தமது ஆசிரியர் அவர்களது அனுமதிப்பிரகாரம் பெரிய புராணத்தை படித்து முடித்தார்கள்.
தமது இருபத்து மூன்றாவது வயதிலே தந்தையார் அவர்களோடு திருச்செந்தூருக்கு யாத்திரையாக சென்று அங்கு சில காலம் வசித்து வந்தார்கள். பின்னர் அத்தலம் விட்டு நீங்கி, இராமேசுவரம், திருவுத்தரகோசமங்கை, திருவாலவாய், திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி, திருவானைக்காடு, திருமறைக்காடு முதலிய தலங்களை தரிசித்து மீண்டார். பின்னர் யாழ்ப்பாணத்திலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களுடைய வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாசத் தமிழ் வித்தியாசாலையிலே 1872ம் அண்டு தொடக்கம் ஆறு வருட காலமும், அவர்களுடைய ஆங்கில வித்தியாசாலையிலே ஒரு வருட காலமும் உதவி உபாத்தியாயராக இருந்து கல்வி கற்பித்து வந்தார்கள். அக்காலத்திலே அவர்களுடைய பிரசங்க மதுவைச் செவியார உண்டு சைவ சித்தாந்தத்தை நன்னெறி என உணர்ந்து கொண்டார்கள். அக்காலத்திலே நாவலரவர்கள் ‘விவிலிய குற்சிதம்’ என்னும் நூலை எழுதி ஐயரவர்களை கொண்டு அச்சிட்டு வெளியிட்டார்கள்.
வேதாகமங்களின் உண்மைப் பொருளை அறியும் ஆவல் பெரிதும் உடையவராய் நாவலரவர்களுடைய வித்தியாசாலையை விடுத்துவிட்டு 1878இலே இந்தியாவிற்கு புறப்பட்டார்கள். நாவலர் அவர்கள் ஐயரவர்கட்கு அனுப்பிய நற்சான்றிதள் பத்திரம் வருமாறு -
ஸ்ரீ. சி. செந்திநாதையரை நான் ஏழு வருடகாலம் அறிவேன். இவர் ஆறு வருட காலம் என் தமிழ் வித்தியாசாலையிலும், ஒரு வருடம் என்னுடைய இங்கிலீஷ் வித்தியாசாலையிலும் உதவி உபாத்தியாயராக இருந்து, தமது கடமையை ஜாக்கிரதையோடு பிறழாமல் நடாத்திக்கொண்டு வந்தவர். ஒழிவுள்ள பிறநேரங்களிலே நான் பொதுநன்மையின் பொருட்டு எடுத்துக்கொண்ட பிற கருமங்களையும் நிறைவேற்றினார்.
இந்தியாவிற்கு சென்ற ஐயரவர்கள், காவியம், தர்க்கம், வியாகரணம் என்னும் வடமொழி கருவி நூல்களை கற்று வந்தார்கள். இக்காலத்திலே நாவலரவர்கள் சிவபதமடைந்தார்கள். அப்பொழுது ஐயரவர்கள் பாடிய பல இரங்கட்பாக்களுள் ஒன்று கீழ்வருமாறு.
தேவாரம் யான்சொலக் கேட்டு
மகிழ்ந்து சிரத்தையுடன்
பூவாதி கொண்டு புரிசிவ
பூசைப் பொழிலழகும்
பாவாணர் மெச்சச் செயும்பிர
சங்கமும் பார்த்தினிநான்
நாவார வாழ்த்திடு நாளுமுண்
டோநல்லை நாவலனே.
1883ம் வருடத்தில் இந்தியாவிலே திருநெல்வேலியிலே சுஜனமனோரஞ்சினி பத்திரிகையின் உதவியாசிரியாராய் இருந்து நடாத்திவந்தார்கள். அக்காலத்திலே ‘சாணாரெல்லாம் சத்திரியர்’ என்னும் கருத்தினோடு சாத்தூர் உதவிப் பதிவாளராக இருந்த சாமுவேல் சற்குணர் என்பவரால் ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இதனைக்கண்டித்து ஐயரவர்கள் ‘சாண்சத்திரியப் பிரசண்டமாருதம்” என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார்கள். பின்னர் சிறிது காலத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தை அடைந்து கந்தபுராண நவநீதம் என்னும் ஒரு நூலை எழுதி முடித்து கதிர்காம வேலனது அனுக்கிரகம் பெற்று அச்சிட்டு வெளியிட்டார்கள். பின்னர் 1888ம் ஆண்டிலே சேலம் ஜில்லாவிலுள்ள திருப்பற்றூரிலே வசித்துக்கொண்டு அமிர்தபோதினி என்ற பெயரிய வெளியீட்டை ஆரம்பித்து நடாத்தி வந்தார்கள். அக்காலத்திலே கிறீஸ்தவர்களால் எழுதப்பெற்ற மறுப்புகட்கு மறுப்புகளாக ஐயரவர்களால் ‘சிவனுந் தேவனா என்னும் தீய நாவுக்கு ஆப்பு”, ‘வஜ்ரடங்கம்” என்னும் நூல்கள் எழுதப்பட்டன. இவை 1888 இல் கிறீஸ்துமத கானனகுடாரி எனும் காரணப்பெயரோடு வெளியடப்பெற்றன.
ஐயரவர்களுடைய சைவசித்தாந்த உணர்ச்சியை அறிந்த திருமங்கலக் குடியில் உள்ள சூரியனார் கோவில் ஆதீனத்து அதிவருணாச்சிரம ஆசாரியவரிய சைவசமய பரிபாலக ஸ்ரீ சிவாக்கிரயோகீந்திர ஞான சிவாச்சாரிய சுவாமிகள் ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தேசிகர் அவர்கள் ஐயரவர்கட்கு ‘சித்தாந்த சிகாமணி” என்னும் பட்டப்பெயரைச் செய்யுள் வாயிலாக வரைந்து சூட்டினார்கள். அச்செய்யுள் வருமாறு
நிறைகல்வி தவவொழுக்கஞ் சான்றாண்மை
கண்ணோட்ட நெடுகு மன்பு
பொறைமேன்மைச் சிவஞான முதிர்ச்சியிது
பூதிமுதற் குணங்க ளெல்லாம்
குறையாம னிறைசெந்தி நாதமறையோய்
நின்னைக் குறித்தியா மிட்ட
மறைவாய்மைச் சிந்தாந்த சிகாமணியாம்
பெயர்பிறர்க்கு வழங்கலாமோ?
எனப் பத்தியரூபமாக வரைந்து அதன்மேலும், ‘நிகழ்காலத்திலே தங்களைப்போல வேதாகம சாரமாகிய மெய்கண்ட நூற் சொரூப தடஸ்த சித்தாந்த நுட்பம் அறிந்தவர்களாய் நாம் இதுகாறும் ஒருவரையும் கண்டதில்லை. அந்நுட்பம் அறிந்த தங்கட்குச் சித்தாந்தசிகாமணி என்னும் பெயர் அடுக்கும் என்று அளித்தோமன்றி முகமனாய் அளித்தோம் இல்லை’ எனக் கத்திய ரூபமாக வரைந்தும் அனுப்பினார்கள்.
இவ்வாறு பெருமைபெற்ற செந்திநாதையர் அவர்கள் 5-5-1924 வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் சிவபதமடைந்தார்கள்.
இவர்களது தேகவியோகத்தையுற்றுக் கூத்தனூர்க் குன்றுக்கிராமத்து ஐயரவர்களது மாணவராகிய சுப்பிரமணியபிள்ளை அவர்கள் கூறிய வெண்பா வருமாறு.
வருஷம் இரத்தாக்ஷி, மாசம் வைகாசி
மருவுமத்த நாளாகும் வையம் – ஒருவு
நவசெந்தி நாதனாஞ் சாமிமறை யோனே
சிவசாமி யஞ்சேர் தினம்.
ஐயரவர்களால் இயற்றப்பெற்ற வெளியீடுகள் 45. இவற்றுள் சிலமாத்திரமே நூல்வடிவம் பெற்றுள்ளன. பத்திரிகையில் வெளிப்போந்தவை மறைவிடம் நாடிவிட்டன.

குப்பிளான் மண்ணுக்குப் பல வழிகளிலும் பெருமை சேர்த்த மகான் காசிவாசி செந்திநாதையரின் கட்டுரை அருமையிலும் அருமை. பழம்பெரும் வரலாற்றுத் தகவல்களை திரட்டித்தரும் TheJaffna.com இற்கு எமது மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.