சிவசம்புப் புலவர்
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த அம்பலவாணர் அருளம்பல முதலியாருக்கும் அவர் மனைவியார் கதிராசிப்பிள்ளைக்கும் புத்திரராக 1830 இலே சிவசம்புப்புலவர் பிறந்தார். கல்விபெறும்வேளை வந்ததும் சிவசம்புவை நல்லூர் சரவணமுத்துப் புலவரிடம் அழைத்துச்சென்று மாணவராக்கினார் தந்தையார். சரவணமுத்துப்புலவரைத்தொடர்ந்து அவரது மாணாக்கர் சம்பந்தப்புலவரிடம் முறையாகப்பாடங் கேட்டார் சிவசம்பு.
தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், சங்க இலக்கியங்களையும், கம்பராமாயணம் பாரதம் என்னும் இதிகாசங்களையும் அவரிடமிருந்து கற்றுத்தேர்ந்து கொண்டார். இளமையிலேயே கவிபாடும் வல்லமையையும் பெற்றுக்கொண்டார். ஆங்கிலக் கல்வி மீதான மோகம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்மொழியை விரும்பிக்கற்றுப் புகழாரும் புலவராயினவர் சிவசம்புப் புலவர். தமிழ்நாட்டிலே வாழ்ந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடல்களை பாடிக்குவித்தவர். ஈழத்தில் அவ்வண்ணம் பாடல்களை பாடியவர் சிவசம்புப் புலவர் என்று சொல்வதில் தவறேதுமில்லை. நாவலர் பெருமானின் பிரசங்க மாரியைக்கேட்டு உணர்ந்து சுவைத்த இளவல் சிவசம்பு அவர் பிரசங்கம் நடைபெறும் இடங்களெல்லாம் செல்வார். சென்று பேச்சின் சாராம்சத்தை குறிப்பெடுத்துப் பிரசங்க முடிபினில் தொகுப்பினைச் சபையோருக்கு சொல்லுவார். அவ்வண்ணங் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒருநாள் வெளியில் பெருமழை பெய்து கொண்டிருந்தது. பிரசங்கத்தொகுப்பினை அன்று பாடலாக்கிய புலவர் அதனை வாசித்தார்.
அன்பர்கண் ணீர்மழை யுஞ்சிவ னார்மெய் யருள்மழையும்
மன்பிர பந்த மழையும் பிரசங்க மாமழையும்
கொன்புனை நீலப் புயலின் மழையும் கொடைமழையும்
இன்பொடு மல்கப் புலோலிமெய் வாழ்வினி லேறியதே
என்பதுதான் நாவலர் பிரசங்கப் பொழிப்பு எனவமைந்த சிவசம்புப் புலவரது பாடல். சபை புலவரை வியந்து நோக்கியது. பாடலைக்கேட்டதும் பேரன்பு மீதுரப் பெற்ற நாவலர், “புலவரே” என்று வாஞ்சையுடன் அழைத்தார்களாம். அந்த நாவலரின் அழைப்புத்தான் சிவசம்புவைச் சிவசம்புப்புலவர் ஆக்கியது என்பர்.
ஈழத்திற் பெருந்தொகையான பிரபந்தங்களை – பெருந்தொகையான பாடல்களை பாடியவர் என்னும் பெருமையை பெற்றவர் சிவசம்புப் புலவர். செந்தமிழ் மொழி அபிமானி இராமநாதபுரம் இரவிகுலமுத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி மீது கல்லாடக் கலித்துறை, நான்மணிமாலை, இரட்டை மணிமாலை, தனிச்செய்யுள்கள் பாடிச் ஸ்ரீமான் இராகவையங்கார் முதலிய வித்துவான்கள் கூடிய அரங்கேற்றி மதிப்பும் பரிசில்களும் பெற்றவர். தமிழ்ச்சங்கத்தை தாபித்த பாண்டித்துரைத்தேவர் மீது நான்மணிமாலை பாடிப் பரிசில் பெற்றவர். இவைதவிர ஈழத்திலும் இந்தியாவிலும் உள்ள பல ஆலயங்கள் மீதில் பல பிரபந்தங்கள் பாடியுள்ளார். கந்தவனநாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம், புலோலி நான்மணிமாலை செந்தில்மேய முருகன் யமகஅந்தாதி, திருவேரகப் பெருமான் யமகவந்தாதி, எட்டிக்குடிப் பிரபந்தம், வல்லைக் கலித்துறை என்பவை உள்ளிட்ட அறுபதிற்கு மேற்பட்ட பிரபந்தங்களை இவர் பாடியுள்ளார். இவர் சில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். மறைசையந்தாதி உரை, யாப்பருங்கலக்காரிகையுரை, கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப் படலவுரை என்பன அச்சில் வெளிவந்த உரைகளாகும். இவர் பாடல்கள் சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு என்னும் பெயரில் அச்சில் வெளிவந்ததுண்டு.
நாவலர் பெருமான் மீது பேரன்பு கொண்டிருந்த புலவர் அவர்கள் 1879இல் நாவலர் மறைந்த போது மனம் நொந்து பாடிய பாடல்களில் ஒன்று
ஆரூர னில்லைப் புகலியர் கோனில்லை யப்பனில்லை
சீரூரு மாணிக்க வாசக னில்லைத் திசையளந்த
மேரூரு மாறுமுக நாவல னிலலைப்பின் னிங்குயார்தான்
நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே
என்பதாம். இப்பாடல் தமிழ்தந்த தாமோதரனாரை வெகுவாக உருக்கிவிட்டது. பாடலை நயந்த பிள்ளைவர்கள் உடனடியாக இப்பாடலைப்பாடிய புலவரைப்பாராட்டி ஒரு பாடல் அனுப்பினார். தாமோதரம்பிள்ளையின் பாடலை நயந்த சிவசம்புப் புலவர் உணர்ச்சிவசப்பட்டவராய் அவற்கொரு நயப்புப் பாடல் அனுப்பியதுண்டு.
கற்றாரைக் கற்றவர் காமுறு வாரெனக் கண்டமொழிக்
குற்றாயி லக்கிய மாகவென் பவையு வந்துகவி
சொற்றாய தென்றலைக் கண்ணதென் னன்பு தொடர்ந்துகண்டேன்
மற்றா ரெனக்கிணை தாமோ தரம்பிள்ளை மாணிக்கமே
என்பது புலவர் அனுப்பிய பாடல். இங்கே மாற்றார் எனக்கிணை என்ற தொடர் மூலம் தாமோதரம்பிள்ளை அவர்களும் ஒரு பெரும்புலவர் என்று கண்டுகொள்ள வைத்துள்ளார் சிவசம்புப் புலவர்.
புலவர் அவர்கள் தம் தந்தையாரின் முதல் தாரத்து மைந்தராகிய கோப்பாய் அம்பலவாண முதலியார் என்பவரிடத்தும், அவர் மைந்தர் மயில்வாகனனார் என்பவரிடத்தும் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார். அவர்கள் மீது கொண்ட அதீதமான பற்றுக்காரணமாக மயில்வாகனனார் தேகவியோகமான பொழுது அவர்கள் பரம்பரைச் சிறப்பைப்புகழ்ந்து “மயில்வாகன வம்ச வைபவம்“ என்றொரு பிரபந்தம் பாடியதுண்டு. இப்பிரபந்தம் ஐம்பத்தொன்பது நெடிய விருத்தப்பாக்களை கொண்டது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வள்ளல் கந்தசாமி மட்டக்களப்பில் மரவியாபாரம் செய்தவர். மட்டக்களப்பில் உள்ள அவர் வீட்டிற்கு புலவர் ஒருமுறை சென்றுள்ளார். அந்த வேளை வள்ளல் அங்கில்லை. வள்ளலின் துணைவியார் தெய்வநாயகி அம்மையார் புலவரைக் கௌரவித்து வரவேற்றுள்ளார். கந்தசாமி தம்மை யாழ்ப்பாணத்திற் சந்தித்தபோது நடந்த உரையாடல்களையெல்லாம் புலவர் துணைவியாருக்கு சொன்னார். உடனே அவர் ஒரு ஆயிரம் உரூபாயை எடுத்து புலவரிடம் கொடுத்துள்ளார். அவ்வேளை தெய்வநாயகி அம்மையாரின் உயர்ந்த குணநலன்களை பாராட்டி புலவர் பாடிய பாடல்களில் ஒன்று
நெஞ்சங் குளிர்ந்து விழிகுளிர்ந்து இன்சொல் நிகழ்த்திமுகக்
கஞ்சங் குளிர்ந்து பணிந்தென் கலிக்குக் கனகந்தந்தாள்
தஞ்சஞ் செறிந்தவர்த் தாங்கிடுஞ் சீர்க்கந்த சாமியில்லாள்
வஞ்சங் கடிந்த மனத்தெய்வ நாயகி மாதரசே
என்பது அம்மையார் புகழ்மாலையில் உள்ளதொரு பாடல். கந்தசாமி வள்ளல் பற்றிய கலித்துறைத்தொடரில் அம்மையார் புகழ்மாலை ஒரு பகுதி.
அக்காலத்தில் சிவசம்புப் புலவரிடம் கற்று வித்துவான்களாயின பலருள் வல்வெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் சு. வைத்திலிங்கப்பிள்ளை, அவ்வூர் அருணாசலம்பிள்ளை, புலவர் ம. தில்லைநாத நாவலர், வ. குமாரசுவாமிப் புலவர், அ. வேல்மயில்வாகனச்செட்டியார், தும்பளை ம. முத்துக்குமாரசாமிக் குருக்கள், கரணவாய் வடக்கு சு. கனகசபாபதிக் குருக்கள், கரணவாய் தெற்கு தி. ஞானப்பிரகாச தேசிகர், கை. திருஞானசம்பந்த தேசிகர், கை. நமசிவாய தேசிகர், அல்வாய் ஆறுமுகம்பிள்ளை, பொலிகண்டி வே. சிதம்பரப்பிள்ளை, மந்துவில் ஆசிரியர் வைத்திலிங்கச் செட்டியார் என்போர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.
இப்பெரும்புலவர் பெருந்தகை சாலிவாகன சகாப்தம் 1831ம் வருடம் புரட்டாதி மாதம் 13ம் நாள் (1910.09.29) இவ்வுலக வாழ்வை நீத்தார்.

[...] இலக்கண இலக்கியங்களை உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் கற்றார். தென்னிந்தியா சென்று [...]