சங்கர பண்டிதர்
சங்கர பண்டிதர் யாழ்ப்பாணம் உடுவில் கோவில்பற்றைச்சேர்ந்த சுன்னாகத்தில் வேளாளர் மரபில், விரோதி வருடம் சித்திரை மாதம் 21ம் திகதி பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சிவகுருநாதர். யாழ்ப்பாணம் நீர்வேலியிலே வசித்து வந்த இவர் கந்தரோடையிலிருந்த அப்பாப்பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றுத்தேர்ந்தார். பின்னர் இவர் சமஸ்கிருத திராவிட விற்பன்னராகிய வேதாரணியம், சுவாமிநாத தேசிகரிடம் சித்தாந்த உபதேசம் பெற்றார்.
இவர் பிராணமரைப் போலச் சுதியோடு வேதமோத வல்லவராதலினால் வேதாரணீயம் சென்றிருந்தபோது சிலர் வேண்டுகொள்படி அவ்வாறு செய்தார் என்றும், அதனை கேட்ட பிராமணர்கள் வெட்கமடைந்து இவரைப்பாராட்டினார்கள் என்றுங்கேள்வி. இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி ஆகமசாத்திரங்களிலும் மகாநிபுணராய் விளங்கினார்.
சங்கர பண்டிதர் தமிழிலே சைவப்பிரகாசனம் என்று ஒரு நூல் செய்திருக்கின்றார். இஃதன்றி சமஸ்கிருத பாலபாடம், சமஸ்கிருத இலக்கணம் ஆதியாம் வேறு சில நூல்களோடு சிலவற்றிற்கு உரையுஞ் செய்தனர். கிறீஸ்தவ மதத்திற்கு விரோதமாக இவர் பல ஆட்சேபங்கள் எழுதியிருந்தார். இவரது நிரியாணத்தின் பின் அவற்றில் சில பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளையால் வெளியிடப்பெற்று வந்த சைவஉதயபானு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆறுமுக நாவலர் அவர்கள் கத்தியரூபமாக செய்த பெரிய புராணத்திற்கு இவர் சிறப்புப்பாயிரம் பாடியிருக்கின்றார். சங்கர பண்டிதர் வடதேச யாத்திரை சென்று திரும்பும்போது புதுச்சேரியில் பிரமோதூத வருடம் புரட்டாதி மாதம் 12ம் திகதி தனது 42வது வயதில் வைசூரிகண்டு தேகவியோகமானார்.

0 Comments