கீதாஞ்சலி நல்லையா
சிறுகுறிப்பு
உசாத்துணை : இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள் - பிரம்மசிறீ அ. நா. சோமாஸ்கந்த சர்மா - 1995ஈழத்தின் நடனக்கலை முன்னோடிகளில் ஒருவரான கீதாஞ்சலி நல்லையா அவர்கள் ஈழ யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணையில் விஸ்வப்பிரம்ம பரம்பரையில் கந்தையா அன்னமுத்து தம்பதியினிருக்கு 09-03-1912இல் புத்திரனாக பிறந்தார்.
இவர் இளமையிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலேயே புத்துவாட்டி நா. சோமசுந்தரம் அவர்களிடம் வாய்ப்பாட்டும், வயலினும் வண்ணை காமாட்சிசுந்தரம், மீனாட்சிசுந்தரம் ஆகியோரிடம் மிருதங்கமும் கற்று வந்தார். ஓய்வு நேரங்களில் ஆர்மோனியம் வாசிப்பதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் மேற்கூறிய இசைகளைச் சிறந்த முறையிற் பயிற்சி செய்து மேடைகளில் நிகழ்ச்சிகள் வழங்கும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வரும் கலைஞர்களின் இசைநிகழ்ச்சிகளுக்கு வயலின், ஆர்மோனியம் ஆகிய இசைக்கருவிகளை பக்கவாத்தியமாக வாசித்துப் புகழ்பெற்றார். மேலும் நாடகங்களில் பாடுவதும், பாத்திரம் ஏற்று நடிப்பதும் ஆகிய கலைச்சேவைகளை செய்தும் வந்தார்.
நல்லையா அவர்கள் தனது கலைச்சேவையின் பயனாக இந்தியாவின் தலைசிறந்த இசைக்கலைஞர்களின் நட்பைப்பெற்றவராய் அங்கே சென்று கேரளக் கலைஞர் கோபிநாத் அவர்களிடம் கதகளி நடனத்தையும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இலக்குமணன் என்பவரிடம் பரதநாட்டியத்தையும் நட்டுவாங்கத்தையும், பரூர் சுந்தரம் ஐயரிடம் வயலின் இசையையும், மதுரை பெரியசாமிப்பிள்ளையிடம் வாய்ப்பாட்டிசையையும் சிறப்பாகக் கற்றுக்கொண்டார். மேலும் இந்தியாவின் வடநாட்டிற்குரிய மணிப்புரி, கதக், குச்சிப்புடி போன்ற பல்வகை நாட்டியங்களையும் ஓரளவு பயின்று கொண்டார்.
நல்லையா அவர்கள் தான் கற்றவைகளை ஈழத்தவருக்கும் பயிற்றி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தில் கலாசேத்திரம் என்னும் பெயரில் நாட்டியப் பயிற்சி மையம் ஒன்றினை ஆரம்பித்து இசையில் ஈடுபாடுள்ள பல மாணவர்களை உருவாக்கி வந்தார். மேலும் சமகாலத்தில் இருந்த சுப்பையா அவர்களை போன்று பாடசாலைகளில் நடன ஆசிரியர் நியமனம் பெற்றார். இவர் இராமநாதன் கல்லூரி, விக்டோரியா கல்லூரி, ஏழாலை அரசினர் கல்லூரி, கனகரத்தினம் மகாவித்தியாலயம், இந்து மகளீர் கல்லூரி, டிறிபேக் கல்லூரி போன்ற பாடசாலைகளில் நடன ஆசிரியராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. நடனம், கிராமிய நடனம், நாடகம் போன்ற கலைகளை மாணவர்களுக்கு கற்பித்ததோடு மட்டுமன்றி தம் மாணவர்களை அரங்குளிலும் பிரபலமடையச் செய்தார். இவரிடம் விவேகானந்தன் சகோதரிகளான ரங்காமணி, ரூபமணி, ராதாமணி ஆகியோரும், தொம்மைக்குட்டி, இராதாகிருட்டினன் (இலங்கைவேந்தன்), சுமித்திரா, சிவபாதம் ஆகியோர் நடனப்பயிற்சியும் வில்லிசை சின்னமணி, நவரத்தினம், கருணாகரன் ஆகியோர் வாய்ப்பாட்டிசையும் பயின்றவர்களாவார்கள்.
நல்லையா அவர்கள் நடன அரங்குகளில் நட்டுவாங்கம் செய்யும்பொழுது ஜதிக்கோர்வைகள் அழகு பொருந்தியவாயும், உரிய தொனியுடனும் லயம் தவறாது கவரும் வகையிலும் அமைந்திருக்கும். வட இலங்கை சங்கீத சபை தனது பொன்விழாவில் நடனஆசிரியமணி எனும் பட்டத்தை இவருக்கு கௌரவ விருதாக வழங்கியதும், கரவெட்டி வாணிகலா மன்றத்தில் 1956-1970களில் இவர் புரிந்த இசைச்சேவையை பாராட்டி அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் அவர்களால் கீதாஞ்சலி என்னும் கௌரவ விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழத்தில் பக்தியுடன் இசைவளர்த்த கீதாஞ்சலி நல்லையா அவர்கள் 22-08-1987 அன்று இறைபதமடைந்தார்.

கீதாஞ்சலி நல்லையா அவர்கள் வண்ணை கேசாவில் முத்து விநாயகர் ஆலயத்தில் பிரபலமானவர்