கணபதி ஐயர்
கணபதி ஐயர் என்கின்ற இப்புலவர் யாழப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்த ஒரு பிராணமர். இவர் தந்தையார் காஞ்சிபுரத்திலிருந்து வட்டுக்கோட்டைக்கு வந்து இல்லறம்பூண்டு, நல்லறஞ்செய்த வால கிருஷ்ண ஐயர். கணபதி ஐயர் ஒருபொழுது தம் சுற்றமித்திரரை பிரிந்து வடதேசத்துள்ள திருவையாற்று வைரவ சந்நிதியில் ஒரிராத்திரி இளைத்துக் களைத்து தூக்கமற்றோராயிருந்தபோது சுயம்பாடும் சக்தியுண்டாக உடனே அவ்வயிரவர் பேரில் பதிகம் ஒன்றைப்பாடினார் என்பர்.
இவர் வடதேச யாத்திரையின்பின் ஊருக்கு திரும்பி தமது சுற்றத்தவர்களுள் ஒருவராகிய சண்மக ஐயர் என்பவர் சில தருக்கள் கீர்த்தனைகளோடு தொடங்கி நிiவேற்றாது விட்டிருந்த சுந்தரி நாடகத்தை வாளபிமன் நாடகம் என்று மாற்றி, எவரும் வியக்கப் பாடி முடித்தனர். இது மட்டுமன்றி வண்ணை வைத்தீஸ்வரன் மீது வயித்திலிங்கக் குறவஞ்சி, மலையகந்தினி நாடகம், அலங்காரரூபநாடகம், அதிரூபவதி நாடகம் என்பவைகளோடு, வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் பேரில் பதிகமும் ஊஞ்சற் பிரபந்தமும், பருத்தித்துறைக் கணேசர்பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் பாவிகற்பம் பெற்ற நூறு கவிதைகளும் பாடினர்.
இவர் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். 1709 இல் பிறந்து பிரம்மச்சாரிய விரதம்பூண்ட இவர் தனது 75 ஆவது வயதில் சிவபதமடைந்தார்.

0 Comments