இராமலிங்கப்பிள்ளை
இவர் சுதுமலையிலே மாப்பாண முதலியார் கோத்திரத்திலே வைரமுத்து உடையாருக்குப் புதல்வராகப் பிறந்தார். நவாலியிலிருந்த கா. முத்துக்குமாரபிள்ளை என்பவரிடங் கற்றார். ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லுனர். சபாமத்தியில் புராணங்களுக்குப் பொருள் சொல்லுவதிலும், இனிமையாக வாசிப்பதிலும் பேர் பெற்றவர். இனிய கண்டமுடையவர். பற்பல தனிப்பாடல்களுங் கீர்த்தனங்களும் பாடினவர். அன்றியுஞ் சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் என்னும் நூல்களையு மியற்றியவர். இவர் 1885-ம் வருஷம் மாசி மாதம் 16-ம் திகதி கொழும்பிலே தேகவியோகமடைந்தார். இவர் பாடற்றிறத்தையறியும் பொருட்டு நளச்சக்கரவர்த்தி விலாசக் காப்புச் செய்யுளை இங்கே தருதும்.
பொன்னுலக மென்னப் பொலியுநிட தம்புரக்கு
மன்னனளச் சக்ரவர்த்தி மாகதையை – இந்நிலத்தே
சந்த விலாசத் தமிழா லியம்புதற்குத்
தந்தி முகன்றாள் சரண்.

0 Comments