மேலும் சில நூல்கள்

புலியூரந்தாதி

ஆசிரியர் : மயில்வாகனப் புலவர்
எழுதப்பட்ட வருடம் : 18ம் நூற்றாண்டு இறுதி
பதிப்பாசிரியர் :
பதிப்பிக்கப்பட்ட வருடம் :
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

புலியூரந்தாதி சிதம்பரத்தி லெழுந்தருளியிருக்கும் சிவபிரானைப் போற்றிப் பாடப்பட்ட நூலாகும். இது கடவுள் வாழ்த்து நீங்கலாக நூறு கட்டளைக் கலித்துறைகளை கொண்டு நூற்றந்தாதியாகவும் யமக அந்தாதியாகவும் விளங்குகின்றது. இதில் வரும் பல செய்யுள்கள் அகப்பொருட்டுறை தழுவியனவா யமைந்துள்ளன.

இதன் சிறப்புப்பாயிரமாய,

நெய்யார்ந்த வாட்கைச் செகராச சேகரப் பேர்நிறுவி
மெய்யாக விண்ணெண் கலைதமி ழாக விரித்துரைத்த
வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன் மாதவங்கள்
பொய்யாத வாய்மைப் புலியூரந் தாதி புகன்றனனே.

என்ற செய்யுள், புலியூரந்தாதியின் ஆசிரியர் மயில்வாகனப் புலவர் என்பதைக் காட்டி நிற்கும். மயில்வாகனப் புலவரும் வண்ணை வைத்திலிங்கச் செட்டியாரும் கூழங்கைத்தம்பிரானிடம் ஒருங்கு கல்வி பயின்றவர்கள். வண்ணை வைத்தீஸ்வர சுவாமி கோவில் 1787இல் கட்ட ஆரம்பித்து 1791 இல் முடிவுற்றது. இதன்பின் செட்டியார் மயில்வாகனப்புலவரையும் அழைத்துக்கொண்டு காசிக்கு பிரயாணமானார் என்பது வரலாறு. காசியாத்திரையின் பின் அவர் இதனை எழுதியிருப்பின், இது 19ம் நூற்றாண்டுக்குரிய நூல் என்று கருதவேண்டும். அதற்கு முன் எழுதப்பட்ட நூலானால், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ 18ம் நூற்றாண்டின் இறுதியிலோ செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இதனை திண்ணமாக கணிக்கத்தக்க ஆதாரமெதுவும் நூலகத்தில்லை.

வாசகர் கருத்துக்களை காட்டு / மறை